சூடானை அரச ஆதரவு கொண்ட பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா முறையாக நீக்கியுள்ளது.
இந்த அறிவிப்பை கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. இது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
“காங்கிரஸின் அறிவிப்பு காலம் 45 நாட்கள் கடந்துவிட்டதை தொடர்ந்து, சூடானை அரச பயங்கரவாத ஆதரவாளர் பட்டியலில் இருந்து மீட்கும் அறிவிப்பில் அமெரிக்க செயலாளர் கையெழுத்திட்டார். இது டிசம்பர் 14 முதல் நடைமுறைக்கு வருவதாக பெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட உள்ளது” என்று அமெரிக்க தூதரகம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இருந்து சூடானை நீக்குவது சூடானின் இடைக்கால அரசாங்கத்தின் முன்னுரிமை விடயமாக இருந்து வந்தது.
கடந்த ஒமர் அல்-பஷீரின் அரசாங்கம் ‘பயங்கரவாத’ குழுக்களை ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அரசாங்கம் 1993 இல் சூடானை ‘அரச ஆதரவு கொண்ட பயங்கரவாத’ தடுப்புப்பட்டியலில் சேர்த்தது. இது கோதுமை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த சூடானை முக்கிய சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதற்கு தேவையான நிதியுதவியைப் பெறுவதற்கான தகுதியற்ற நாடாக மாற்றியது.
தற்போது சூடானின் நிதி அமைச்சர் ஹெபா அகமது, அமெரிக்கா அரசாங்கம் கோதுமை மற்றும் பிற பொருட்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆதரவு வழங்குவதோடு, 1 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை கடன் நிவாரணமாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்க தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு 1 பில்லியன் டாலர் வரை உத்தரவாதங்களை வழங்கும். அத்துடன் கடன் நிவாரணமாக சர்வதேச அபிவிருத்தி சங்கத்திலிருந்து ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலருக்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படும். 10 மிகப்பெரிய அமெரிக்க விவசாய நிறுவனங்களின் நிர்வாகிகள் குழு விரைவில் சூடானுக்கு வருகை தரவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மற்ற துறைகளின் பிரதிநிதிகளும் வருகை தருவார்கள் என்றும் அவர் கூறினார்.