அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தை சென்ற திங்கள் கிழமை மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மேலும் பல இடங்களில் மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய சட்டங்கள் இந்தியாவின் விவசாயத் துறைக்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குகிறது. இது விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை, குறைந்தபட்ச விலை உறுதி செய்யப்பட்ட அரசாங்கத்தால் நடத்தப்படும் மொத்த சந்தைகளுக்கு அப்பால், தனியார் வியாபாரிகளுக்கு விற்க அனுமதிக்கிறது.
ஆனால் விவசாயிகள் கூறுகையில், இந்த சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன என்கின்றனர். மேலும் அவை பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் எனவும், தடையற்ற திறந்த சந்தையின் கையில் விவசாயிகளை ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது எனவும் கூறுகின்றனர்.
உழவர் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில் “இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். புதிய விவசாய சட்டங்களை எதிர்ப்பதற்கான வழிமுறையாக வெவ்வேறு உழவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் உண்ணாவிரதத்தை கடைப்பிடிப்பார்கள்” என்றும் அரசாங்கம் அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் “நாங்கள் அதை சாதகமாகக் கருதுவோம்” என்றும் கூறினார்.
இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக விவசாயிகள் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாடு முழுவதும் மாவட்ட அலுவலகங்களுக்கு வெளியே மறியல் போராட்டங்களை நடத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு வெளியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுஇ, நகரத்திற்கு செல்லும் பல நெடுஞ்சாலைகளைத் தடுத்து இந்த போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சி (சாதாரன மக்களுக்கான கட்சி) திங்களன்று விவசாயிகளுடன் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
கெஜ்ரிவால் தனது கட்சியின் ஆதரவாளர்களை போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். மேலும் மோடியின் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) நோக்கி “ஆணவத்தைத் தவிர்க்கவும்; விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடன்படவும்” என்று வலியுறுத்தினார்.
கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு ஒன்று இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து இச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.