துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள “நியாயமான நாடுகள்” இந்த வாரம் நடைபெற்ற உச்சிமாநாட்டில் துருக்கிக்கு எதிரான முயற்சிகளை முறியடித்ததாகவும், மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் அடுத்த கூட்டத்தில் அங்காராவை பாதிக்கும் முடிவுகளை இக் கூட்டம் எடுக்காது என்றும் கூறினார்.
கிரீஸ் மற்றும் சைப்ரஸுடனான துருக்கியின் எரிசக்தி ஆய்வு தகராறு தொடர்பாக துருக்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள போவதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒர் அறிவிப்பை செய்தனர். இதில் நாடுகளின் சச்சரவினால் அங்காராவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மார்ச் மாதம் வரை எந்தவொரு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதையும் ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
“எங்களது உரிமைகள் நமக்கு வழங்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் துருக்கிக்கு வழங்க வேண்டிய பல உரிமைகள் இப்போது உள்ளன” என்று எர்டோகன் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் “கிரேக்கம், பிரஞ்சு மற்றும் சைப்ரியாட் துருக்கியின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நியாயமான நாடுகள் ஒரு நேர்மறையான நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதனால் துருக்கிக்கு எதிரான இந்த விளையாட்டு முறியடிக்கபட்ட்டுள்ளது.” என்று கூறினார்.
துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒர் அறிக்கையில், “வடக்கு சைப்ரஸ், கிழக்கு மத்தியதரைக்கடல், ஏஜியன் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த பக்கச்சார்பான மற்றும் சட்டவிரோத அணுகுமுறையை நாங்கள் நிராகரிக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் வீட்டோ அழுத்தம் காரணமாக டிசம்பர் 10 ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டின் முடிவுகளில் இது சேர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடுள்ளது.
சர்வதேச சட்டம், நல்ல அண்டை உறவுகள், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க அங்காரா தயாராக இருப்பதாக துருக்கிய தலைவர்கள் பலமுறை வலியுறுத்தியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.