இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான சமீபத்திய தகவல்களின் படி, பெரிய மருந்து நிறுவனங்களுடன் செய்யப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒப்பந்தத்தில் இஸ்ரேலை சேர்ப்பதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது.
ஹொலொகொஸ்ட் படுகொலையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலுடனான “சிறப்பு உறவின்” தொடர்ச்சியாக ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் மற்றும் சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் ஆகியோர் இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி காபி அஷ்கெனாஜிக்கு இது குறித்து உறுதிமொழி அளித்தனர்.
எவ்வாறாயினும், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை. இஸ்ரேலிய முற்றுகையால் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இப்பகுதி வைரஸ்ஸினால் ஒரு “பேரழிவு நிலையை” அடைந்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொடிய இஸ்ரேலிய முற்றுகையால் ஏற்கனவே காசா மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு தொற்றுநோயைச் சமாளிக்கத் தேவையான முக்கிய உபகரணங்கள் இல்லாமல் காசா மருத்துவமனைகள் தத்தளிக்கிறன.
“சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையகிறது” என்ற காசாவில் உள்ள மருத்துவர்களின் வேண்டுகோள் பெரும்பாலும் கேட்கப்படாமல் போய்விட்டது; மேலும் பேர்லின்-டெல் அவிவ் ஒப்பந்தம் பாலஸ்தீனியர்களைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தற்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனியர்களை பற்றி ஜேர்மனி எந்த உறுதிப்பாடும் செய்யவில்லை. ஜெர்மனி அதன் சொந்த வரலாற்று காரணங்களுக்காக இஸ்ரேலுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பேர்லினில் உள்ள ஒர் இஸ்ரேலிய இராஜதந்திரி கூறுகையில்;
“தடுப்பூசி கொள்வனவில் ஜெர்மனி இஸ்ரேலை ஐரோப்பாவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது, எனவே இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்படும்போது இஸ்ரேலில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்” என்று கூறினார்.
இஸ்ரேலில் 337,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களில் இதுவரை 3,000 பேர் இறந்துள்ளனர். மறுபுறம் பாலஸ்தீனியர்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் 100,000 நெருங்குவதோடு 770 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இஸ்ரேலின் ஆரம்பகால தடுப்பூசி அணுகல் “இஸ்ரேலின் பொருளாதாரம் முழு நடவடிக்கைக்கு திரும்ப அனுமதிக்கும்” என்று இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி கூறினார். எவ்வாறாயினும், பாலஸ்தீனியர்கள் தடுப்பூசி பரவலாக வெளியீடு செய்யும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
கோவிட்-19 தடுப்பூசிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பணக்கார நாடுகளால் வாங்கப்பட்டுள்ளன, இந்நாடுகள் ஏற்கனவே தடுப்பூசியின் ஆரம்ப விநியோகத்தை முன்பே பதிவு செய்துள்ளன. இதனால் ஏழை நாடுகள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.