இந்த மாத தொடக்கத்தில் சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்களின் சபை அளித்த தீர்ப்பை பின்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபத்வா சபை இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஃபத்வா கொடுத்துள்ளது.
இஸ்லாமிய தீர்ப்புகளை வழங்க அதிகாரிகளுக்கு உரிமம் வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபத்வா சபை கடந்த திங்களன்று, இஹ்வானுல் முஸ்லிமூனை (முஸ்லீம் பிரதர்ஹுட்) ஒர் தீவிரவாத குழு என்று வர்ணித்து, இந்த அமைப்பை விட்டு முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என்று எச்சரித்தது.
மவுரித்தேனிய இஸ்லாமிய அறிஞர் ஷேக் அப்துல்லாஹ் பின் பையா தலைமையில் இணைய வாயிலாக நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் 1928 ஆம் ஆண்டில் ஹசன் அல்-பன்னாவால் எகிப்தில் நிறுவப்பட்ட நாடு கடந்த இஹ்வானுல் முஸ்லிமூனுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தன.
ஃபத்வா சபை குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்து குறிப்புகளை மேற்கோள் காட்டி “ஆட்சியாளரைத் தவிர வேறு யாருக்கும் தங்களது விசுவாசத்தையோ, உறுதிமொழியையோ கொடுப்பது மார்கத்தில் அனுமதி கிடையாது அல்லது இரகசியமாக தங்களது விசுவாசத்தையோ, உறுதிமொழியையோ ஒர் அமீரிற்கு வழங்க அனுமதி கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி சவுதியின் மூத்த அறிஞர்களின் சபை ஒர் அறிக்கையை வெளியிட்டது. இதில் இஹ்வானுல் முஸ்லிமூன்கள் (முஸ்லீம் பிரதர்ஹுட் குழு) “நமது அழகிய மதத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக இயங்கும் பாகுபாடான நோக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறது. அதே சமயம் தேசத்துரோகம், வன்முறைகளை தூண்டுதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மதத்தை ஒர் முகமூடியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியது.
மேலும் “முஸ்லீம் பிரதர்ஹுட்டின் கருவறையில் இருந்து, பல தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன; பல பிராந்தியங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளன, அவை உலகெங்கிலும் உள்ள வன்முறை மற்றும் குற்றங்களால் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன.” என்று கூறுகிறது.
நவம்பர் 11 ஆம் தேதி வெளிவந்த சவுதி அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, இஹ்வானுல் முஸ்லிமூனின் செய்தித் தொடர்பாளர் தலாத் ஃபெஹ்மி துருக்கியின் அனடோலு ஏஜென்சிக்கு கூறுகையில் “முஸ்லீம் பிரதர்ஹுட் பயங்கரவாத இயக்கம் அல்ல; மாறாக இது ஒரு சீர்திருத்தவாத அமைப்பு” என்று கூறினார்.
மேலும் “முஸ்லீம் பிரதர்ஹுட் வன்முறை, பயங்கரவாதம் மற்றும் உம்மாவைத் துண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. அது நிறுவப்பட்டதிலிருந்து, மக்களை நல்ல ஆலோசனையுடன் அல்லாஹ்விடம் அழைக்கிறது” என்றும் கூறினார்.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு எப்போதுமே சர்வாதிகார ஆட்சிகளின் அடக்கு முறைகளுக்கும், வன்முறைகளுக்கும் பலிக்கடாவாகியே வந்துள்ளது என்றும் ஃபெஹ்மி கூறினார்.