சவூதி அதிகாரிகளுக்கும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர், இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபியாவின் வான்வெளியினூடாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கு சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் இஸ்ரேலிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஷ்னர், மத்திய கிழக்கு தூதர்கள் அவி பெர்கோவிட்ஸ் மற்றும் பிரையன் ஹூக் ஆகியோர் சவூதி அரேபியாவுக்கு வந்த சிறிது நேரத்திலேயே இந்த பிரச்சினையை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் “எங்களால் இந்த பிரச்சினையை சரிசெய்ய முடிந்தது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் அதிகாரி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இஸ்ரேலின் முதல் வணிக விமானம் திட்டமிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுடன் எட்டிய இயல்பாக்குதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நேரடி விமான சேவைகளும் உள்ளடங்கும்.
“சவூதியுடனான இந்த ஒப்பந்தம், இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுக்கு மக்களை அழைத்துச் செல்லும் போதும், திரும்பி வரும் போதும் ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்து வைக்கும்” என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் குஷ்னரும், அவரது குழுவும், கத்தார் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் குவைத்தின் அமீரை சந்திக்கவிருக்கின்றனர். கத்தார் மீது மேற்கொள்ளப்பட்ட மூன்று ஆண்டு முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வளைகுடா ஒத்துழைப்பு சபை Gulf Cooperation Council (GCC) நாடுகளை வற்புறுத்துவதே இதன் குறிக்கோளாகும்.