ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை தொலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி குற்றம் சாட்டினார்.
“துரதிர்ஷ்டவசமாக, இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது மற்றும் மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது, சம்பவ இடத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை” என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி திங்களன்று ஃபக்ரிசாதேவின் இறுதிக் கிரிகை நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேலும், அதன் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாடும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இஸ்ரேல் 20 ஆண்டுகளாக ஃபக்ரிசாதேவைக் கொல்ல முயற்சித்து வந்தது, “இம்முறை எதிரி முற்றிலும் மாறுபட்ட தேர்சியான, அதிநவீன மற்றும் புதிய முறையைப் பயன்படுத்தி” வெற்றி கண்டுள்ளனர் என்று ஷம்கானி கூறினார்.
இந்த தாக்குதலில் ஒரு பங்கை ஈரானிய “ஆட்சி மாற்றத்திற்கான” அமைப்பான முஜாஹிதீன்-இ கல்க் Mujahedin-e Khalq (MEK) கொண்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஈரான் MEK ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அதன் உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது.
தெஹ்ரான் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் அணுசக்தி மற்றும் இராணுவ விஞ்ஞானியான ஃபக்ரிசாதே, தானியங்கிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
திங்களன்று ஷம்கானியின் கருத்துக்கள், ஃபக்ரிசாதேவின் படுகொலையின் ஆரம்ப நிலைப்பாட்டிற்கு மாறுபட்டதாக இருக்கின்றது. ஆரம்பத்தில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பிக்-அப் டிரக் வெடித்ததாகவும், பின்னர் பல துப்பாக்கிதாரிகள் ஃபக்ரிசாதேவை ஏற்றிச் சென்ற வாகனம் மீதும் மெய்க்காப்பாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் அவரும் அவருடைய மெய்க்காப்பாளர்களும் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஷம்கானியின் கருத்துக்கள் கடந்த சில நாட்களாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட பல அறிக்கைகளுக்கு ஏற்பவே உள்ளன.
2003 ல் கலைக்கப்பட்ட ஈரானின் இரகசிய அணு ஆயுத திட்டத்தின் தலைவராக ஃபக்ரிசாதே இருந்தார் என்று பல ஆண்டுகளாக இஸ்ரேலும், மேற்கத்திய உளவுத்துறையும் கருதியது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒர் நிகழ்வில் ஃபக்ரிசாதேவைக் குறிப்பிட்டு, “இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர், ஈரானின் மூத்த அணு விஞ்ஞானிகளை குறிவைத்து வெற்றிகரமான படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படுகொலைகளை இஸ்ரேலே நடாத்தியது என்று நீண்ட காலமாக ஈரான் கூறி வருகிறது.
ஈரான், ஃபக்ரிசாதேவின் படுகொலைக்கு பழிவாங்கும் என்றும், இச்சம்பவம் “பயங்கரவாதச் செயல்” என்று ஏற்றுக் கொண்டு, சர்வதேச சமூகம் அதனை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.