துருக்கியில் 2016 ல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்ட ஒர் முஸ்லீம் போதகரின் ஆதரவாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட நடவடிக்கையில் 82 ராணுவ வீரர்களை தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 2016 இல் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனைக் கவிழ்க்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த மதத் தலைவரும், தொழிலதிபருமான ஃபெத்துல்லா குலெனின் வலையமைப்பைக் குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்கின்றது.
250 பேர் கொல்லப்பட்ட இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் குற்றச்சாட்டை குலென் மறுக்கிறார். எர்டோகனின் முன்னாள் கூட்டாளியான இவர் 1999 முதல் அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில் வசித்து வருகிறார்.
இந்த கைது நடவடிக்கை செவ்வாய்க்கிழமை 39 மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஏற்கனவே 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் 70 பேர் கடமையில் இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு கடலோர மாகாணமான இஸ்மிரின் தலைமை நீதிபதி இந்த தடுப்புக்காவலுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஆட்சி கவிழ்ப்புடன் தொடர்புபட்டதாக கருதப்படும் உயர் அதிகாரிகள் உட்பட 848 ராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், பல்லாயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் அதே வேளையில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், துருக்கிய நீதிமன்றம் நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகள், விமானிகள் மற்றும் பொதுமக்களை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முயன்ற குற்றவாளிகளாகக் கருதி, தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து துருக்கியை அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் மற்றும் உரிமைகள் குழுக்கள், களையெடுப்பு, கடும் நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தின் ஒடுக்குமுறை போன்ற நடவடிக்கைகளுக்காக கண்டனம் செய்துள்ளன.
நாட்டில் எதிர்கட்சியை மெளனமாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்காக இந்த சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
களையெடுத்து தூய்மைப்படுத்துதல் மற்றும் கைதுகள், சட்டத்தின் விதிக்கு ஏற்ப இருப்பதாகவும், குலெனின் ஆதரவாளர்களை அரச நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் பிற பகுதிகளிலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டே, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் துருக்கிய அரசாங்கம் கூறுகிறது.