இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் நீண்டகாலமாக அவதிப்படும் காஷ்மீர் மக்களின் அவல நிலையைப் பற்றி விவாதிக்கத் தேவையான நேரத்தை தனது வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் ஒதுக்குவதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organization of Islamic Cooperation – OIC) மறுத்துவிட்டது.
OIC வெளியிட்டுள்ள அறிக்கையில் காஷ்மீர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை; மேலும் இந்தியாவின் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் விளைவாக ஒரு வருடத்திற்கு மேலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதி மக்களின் அவல நிலை குறித்து விவாதிக்க சந்தர்ப்பம் அளிக்கும் வகையில், சிறப்பு அமர்வு ஏதும் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை வெளியுறவு மந்திரிகள் சபையின் 47 வது அமர்வு நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நைகரின் தலைநகரான நியாமியில் நடைபெறவுள்ளது. காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் கோரியதை OIC ஐ தலைமை தாங்கும் நைகர் நிராகரித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளியுறவு அமைச்சர்களின் நிகழ்ச்சி நிரலில் காஷ்மீர் பிரச்சினை இருக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை, சவூதி அரேபியா நிராகரித்ததை தொடர்ந்து இந்த முடிவு பின்பற்றப்பட்டு வருகிறது.
OIC இன் பொதுச் செயலாளர் Dr. யூசெப் அல் ஒதமைன் கூறுகையில் இந்த கூட்டத்தில் “முக்கிய தலைப்புகள் மற்றும் முஸ்லீம் உலகு சம்பந்தமான பல பிரச்சினைகள்” பற்றி விவாதிக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சி நிரலில் பாலஸ்தீனிய பிரச்சினை, வன்முறை, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம், உறுப்பினர் அல்லாத நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் சமூகங்களின் அவலநிலை மற்றும் சர்வதேச நீதி மன்றத்தில் ரோஹிங்கியா வழக்குகளுக்கு தேவையான நிதி திரட்டல் ஆகியவை அடங்கியுள்ளன.
2019 ஆகஸ்டில், இந்தியாவின் இந்து தேசியவாத பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரின் நீண்டகால தன்னாட்சி அந்தஸ்தைப் பறித்தார். இந்த நடவடிக்கை முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிராந்திய மக்களுக்கு இந்திய அரசு இந்துக் குடியேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், சனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்ற முயற்சிக்கிறது என்ற அச்சத்தைத் தூண்டியது.
அப்போதிருந்து இம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விதமான எதிர்ப்பையும் இந்திய அரசு மிகக் கடுமையாகவும், விரைவாகவும் ஒடுக்கி வருகிறது. மேலும் அங்கு வாழும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களது வெளி உலகத்திற்கான தொடர்புகள் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே தொடர்கிறது.