இந்தியா, பாகிஸ்தானில் “பயங்கரவாதத்தை” தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டிய ஒர் ஆவணத்தை பாகிஸ்தான் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ்ஸிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சமர்பித்தது. ஒரு நாள் கழித்து பாகிஸ்தானில் இருந்து போராளிகள் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டிய ஒர் ஆவணத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை (UNSC) உறுப்பினர்களுக்கு இந்தியாவும் சமர்ப்பித்திருந்தது.
.
பாகிஸ்தானின் ஐ.நாவிற்கான தூதர் முனீர் அக்ரம், இந்தியா “பயங்கரவாதத்திற்கு” நிதியுதவி செய்வதன் மூலம் சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறியதாக குற்றம் சாட்டினார்.
மேலும் “இந்திய பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவும், இந்த சட்ட விரோத மற்றும் தீவிரமான நடவடிக்கைகளில் இந்தியாவை வெற்றிபெற தமக்கு உதவுமாறு குட்டெரெஸ் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுப்பதாக கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி மற்றும் இராணுவ செய்தித் தொடர்பாளர் “இந்தியாவின் பயங்கரவாதத்திற்கான நிதியுதவி” என்ற தலைப்பில், இந்திய அரசாங்கமும், உளவுத்துறையும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலூச் ஆயுத பிரிவினைவாத குழுக்களுக்கு, பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிப்பதாககவும் குற்றம் சாட்டினர்.
இவ்விரு நாடுகளும் இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல, ஆனால் சமீபத்திய இந்த புலனாய்வுக் குற்றச்சாட்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் தனித்துவ தன்மை கொண்டவை. இதில் இந்திய உளவுத்துறை முகவர்களின் பெயர்கள், கூட்டங்களின் தேதிகள், இடைமறிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் ஆடியோ கிளிப்புகள் மற்றும் வங்கி பரிவர்தனைகளின் ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.
இக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஐக்கிய நாடுகளுக்கான இந்தியப் பேச்சாளர் “பாக்கிஸ்தான் கூரை மேல் நின்று கதறினாலும், அவர்கள் பயங்கரவாதத்தின் மையமாக இருக்கிறார்கள் என்ற உண்மையை அவர்களால் மாற்ற முடியாது, அவர்களின் பொய்களுக்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை” என்று கூறினார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முஹம்மதுவைச் சேர்ந்த நான்கு கிளர்ச்சியாளர்கள் கடந்த திங்கட்கிழமை ஒரு சுரங்கப்பாதை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும், வழக்கமான சோதனைக்காக அவர்களின் லாரி நிறுத்தப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்தியா குற்றம் சாட்டியது.
“முற்றிலும் ஆதாரமற்ற இந்திய குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானுக்கு எதிரான அதன் தவறான பயங்கரவாத விவரிப்புகள், இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளும் அரச பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு அரச நிதியுதவி வழங்குதல் போன்றவற்றிலிருந்து சர்வதேச கவனத்தைத் திசை திருப்புவதற்கான இந்தியாவின் பெரும் முயற்சிகளின் பிரதிபலிப்பைத் தவிர வேறில்லை” என்று பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கோ, இந்தியாவுக்கோ, இவர்கள் இருவரும் நியாயம் கோரும் ஐ.நாவுக்கோ இந்திய துணைக்கண்டத்தின் பிரச்சனையைத் தீர்ப்பதில் என்றைக்கும் அக்கறை இருந்ததில்லை. குணப்படுத்த விரும்பாத பிச்சைக்காரனின் புண்ணைப் போன்று மத்திய கிழக்கில் சியோனிச அலகை வைத்து எவ்வாறு அமெரிக்கா காய் நகர்த்துகிறதோ அதற்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் காஷ்மீரையும், அதன் பின்னணியில் எழும் தீவிரவாதத்தையும் எவருமே தீர்க்கப் போவதில்லை. இன்னுமொரு முஹம்மத் பின் காசிமின் படையே இந்த பிராந்தியத்தில் அமைதியைத் தோற்றுவிக்கும்.