இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவுக்கு ரகசியமாக பறந்து சவூதி மகுட இளவரசர் முகமது பின் சல்மான் (எம்.பி.எஸ்) மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோரை சந்தித்தார் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தியைக் கசிய விட்டுள்ளன.
நெத்தன்யாகுவின் அமைச்சரவை மற்றும் லிக்குட் கட்சியின் உறுப்பினர் திங்களன்று இஸ்ரேலிய தலைவர் சவூதி அரேபியாவில் ஒரு கூட்டத்தை நடத்தியதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தினார். இது ஒரு “அற்புதமான சாதனை” என்று கூறினார்.
“சந்திப்பு நடந்தது பகிரங்கமாக வெளியிடப்பட்டது; இப்போது (இந்த செய்தி) பாதியளவில் அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் கூட, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கல்வி மந்திரி யோவ் காலண்ட் இராணுவ வானொலியிடம் விஜயம் குறித்து கேட்டபோது கூறினார்.
இஸ்ரேலுடனான உறவை சீராக்க அரபு நாடுகளை தூண்டும் அமெரிக்க உந்துதலின் மத்தியில், மூத்த இஸ்ரேலிய மற்றும் சவுதி அதிகாரிகளுக்கு இடையேயான முதல் சந்திப்பாக ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு கருதப்படுகிறது.
திங்களன்று, இஸ்ரேலின் கான் பொது வானொலியும் இராணுவ வானொலியும், மொசாட் தலைவர் யோசி கோஹனும், இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்தன. இது சவூதி அரேபியாவின் செங்கடல் கடற்கரை நியோமில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தி குறித்து நெத்தன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் ஆகியவை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. சவூதி அரசிடமிருந்தும் எந்தக் கருத்தும் வரவில்லை.
இஸ்ரேலிய நாளேடான ஹாரெட்ஸின் கூற்றுப்படி, ஒரு தனியார் ஜெட் டெல் அவிவிலிருந்து நியோமுக்கு ஒரு சுருக்கமான பயணத்தை மேற்கொண்டதாகக் சுட்டிக் காட்டியது. அங்கு முன்னமே ஞாயிற்றுக்கிழமை எம்.பி.எஸ் மற்றும் பாம்பியோவுக்கு இடையிலான சந்திப்போன்று திட்டமிடப்பட்டிருந்தது.
விமானம் கண்காணிக்கும் வலைத்தளங்கள் விமானம் ஒன்று இஸ்ரேலுக்கு நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு திரும்புவதற்கு முன்பு, சுமார் இரண்டு மணி நேரம் தரையிறக்கப்பட்டதைக் காட்டியது.
ஹாரெட்ஸின் கூற்றுப்படி, அந்த ஜெட் விமானம் நெத்தன்யாகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கான சந்திப்பதற்காக பல முறை பயன்படுத்திய அதே தனியார் விமானமhகும்.
இயல்பாக்கம்
இஸ்ரேலுடன் முறையான உறவுகளை ஏற்படுத்துவதில் பாம்பியோ வளைகுடா அதிகார மையத்தை, அதன் அண்டை நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனைப் பின்தொடர வற்புறுத்தி வந்தார். ஈரான் மீது பிராந்தியத்தில் நிலவும் மனோநிலையை அதற்கு சாதகமாக அவர் பயன்படுத்தி வந்தார்.
எனினும் வெளிரங்கத்தில் இஸ்ரேலுடனான உறவை சீராக்க ரியாத் இதுவரை மறுத்து வருகிறது. அவ்வாறு செய்வதானால் முதலில் பாலஸ்தீனிய அரசின் நியாயமான இலக்குகளை முதலில் கவனிக்க வேண்டும் என்று அது கூறி வருகிறது. ஆனால் சவூதி இஸ்ரேலிய விமானங்களை வளைகுடாவின் புதிதான இடங்களுக்கும், ஆசியாவிற்கும் தங்கள் ஆகாய மார்க்கமாக பரப்பதற்கு அனுமதித்து வருகின்றனர்.
வார இறுதியில், சவுதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் கருத்துத் தெரிவிக்கையில், தனது நாடு “நீண்ட காலமாக இஸ்ரேலுடன் உறவு இயல்பாக்கப்படுவதை ஆதரித்தே வந்தது; ஆனால் மிக முக்கியமான ஒன்று முதலில் நடக்க வேண்டும்; இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நிரந்தர மற்றும் முழுமையான சமாதான ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்” என்றார்.
கடந்த மாதம் சவூதி வெளியுறவு மந்திரியுடனான சந்திப்பின் போது, இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு பாம்பியோ சவூதியை வலியுறுத்தியிருந்தார்.
“சவூதி அரேபியாவும், அதன் உறவுகளை இயல்பாக்குவது குறித்து பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்; ‘ஆபிரகாம்’ உடன்படிக்கைகளின் வெற்றியில், இதுவரை அவர்கள் செய்த உதவிகளுக்கு நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்று பாம்பியோவும் கூறினார்.