திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முறையாக விலகிவிட்டதாக அறிவித்துள்ளது. 34 நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தமானது, தங்களுடைய இராணுவ நடவடிக்கைகளை ஆயுதம் ஏந்தாத விமானத்தினூடாக ஒருவரை ஒருவர் கண்காணிக்க அனுமதிப்பதன் மூலம் நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையை வளர்க்க முயன்ற ஒர் ஒப்பந்தமாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உடன்படிக்கைகளில் ஈடுபட்ட நாடுகளிடம் கடந்த மே மாதம் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “அமெரிக்கா இனி திறந்த வான்வெளி தொடர்பான ஒப்பந்தத்தில் ஒர் பங்காளராக இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தனது ட்விட்டரில் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதனால் “அமெரிக்கா மிகவும் பாதுகாப்பாக உள்ளது” என்றும், “ரஷ்யா தனது கடமைகளை சரியாக நிறைவேற்ற வில்லை” என்றும் பதிவிட்டிருந்தார்.
ரஷ்ய கலினின்கிராட் மற்றும் ஜார்ஜியாவின் எல்லை உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளைச் சுற்றியுள்ள கண்காணிப்பு விமானங்களைத் தடுப்பதன் மூலமும், ரஷ்ய இராணுவப் பயிற்சிகளை மேற்பார்வையிட வரும் விமானங்களை தடுப்பதன் மூலமும் ரஷ்யா பலமுறை ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1992 இல் நடைபெற்ற ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தை ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஒருவரை ஒருவர் கண்காணிக்க தங்களது பிரதேசங்களின் மீது ஆயுதமற்ற கண்காணிப்பு விமானங்களை பறக்க அனுமதித்தது. ஒவ்வொரு நாடும் வருடாந்தம் கட்டாயமாக எத்தனை கண்காணிப்பு விமானங்களை பறக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்கான ஒதுக்கீடு உள்ளது.
அமெரிக்காவின் விலகல் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு ஒரு பெரிய அடியாகும். மாஸ்கோ அமெரிக்காவை கண்காணிப்பு செய்வதை விட, ஐரோப்பிய நாடுகளின் வான்வழி கண்காணிப்பில் அதிக அக்கறை காட்டுவதால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை பலகீனப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மீதமுள்ள நேட்டோ உறுப்பினர்களிடம் இனிமேல் அவர்கள் சேகரிக்கும் எந்த தரவும் அமெரிக்காவுடன் பகிரப்பட மாட்டாது என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை கோரினார். மேலும் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்கள் ரஷ்ய கண்காணிப்பு பணிகளில் இருந்து விலக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
கடந்த மே மாதம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான டிரம்ப்பின் முடிவை ஜோ பைடன் கேலி செய்தார். ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் அத்து மீறல்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவும் , அதன் நட்பு நாடுகளும் இதிலிருந்து “பயனடைகின்றன” என்றும் அவர் கூறியிருந்தார்.