அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் தலிபான்களின் பேச்சுவார்த்தையாளர்களை சனிக்கிழமை தோஹாவில் சந்தித்தார். கட்டாரி தலைநகரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் பாம்பியோ ஆப்கானிய அரசாங்கம் மற்றும் தலிபான் பேச்சுவார்த்தைக் குழுக்களுடன் தனித்தனியாக சந்தித்தார்.
“நாங்கள் ஒரு வெற்றிகரமான முடிவின் நிகழ்தகவை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்த உங்கள் எண்ணங்களைப் பெறுவதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என ஆப்கானிஸ்தான் அரசாங்கத் தரப்பைச் சந்தித்தபோது பாம்பியோ குறிப்பிட்டதுடன், அத்தகைய முன்னேற்றத்தில் உள்ள தமது நலன்களை வலியுறுத்தினார்.
மேலும் அவர் கத்தாரின் ஆட்சியாளரான ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் வெளியுறவு மந்திரி முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோரையும் தோஹாவில் சந்தித்தார். தோஹா தலிபானின் முக்கிய இராஜதந்திர தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாக இறுதிக்காலகட்டத்தின் முன்னுரிமைகளை கருத்திற்கொண்டு பாம்பியோ ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏழு நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாஷிங்டனுக்கும், தலிபானுக்கும் இடையிலான பிப்ரவரி ஒப்பந்தத்தில் நிறுவப்பட்ட காலக்கெடுவை விரைவுபடுத்தும் முகமாக இந்த வார தொடக்கத்தில், பென்டகன் ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 2,000 துருப்புக்களை வெளியேற்றப்போவதாகக் கூறியது. அந்த ஒப்பந்தத்தின்படி 2021 நடுப்பகுதி ஆகுகின்ற போது முழு அமெரிக்கத் துருப்புக்களும் திரும்பப் பெறப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2001, செப்டம்பர் 11, தாக்குதல்களைத் தொடர்ந்து தலிபான்களை வெளியேற்றுவதற்கான படையெடுப்புடன் தொடங்கிய அமெரிக்காவின் மிக நீண்ட மோதலான ஆப்கானிஸ்தான் உட்பட “தொடர்ந்து நிலைத்திருக்கும் போர்களை” முடிவுக்கு கொண்டுவருவதாக டிரம்ப் பலமுறை உறுதிமொழி அளித்து வந்தார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஆதரித்து வந்தாலும், அவர் துருப்புக்களை அவசர அவசரமாகத் திரும்பப் பெறுவதற்கு உடன்பட மாட்டார் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தலிபான்கள் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேசுகிறார்கள்
பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் 12 ஆம் தேதி தோஹாவில் தொடங்கியது. ஆனால் விவாதங்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் மத விளக்கங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் குறித்து ஓர் பொது உடன்பாடுக்கு வருவதில் இழுபறி நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
எவ்வாறாயினும், இரு தரப்பினரும் தமக்குள்ளிருந்த சில சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கம் இரண்டு முக்கிய விஷயங்களில் பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகின்றது.
தீவிர சுன்னி நிலைப்பாட்டாளர்களான தலிபான்கள், இஸ்லாமிய நீதித்துறை ஹனஃபி சிந்தனைப் பள்ளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் அரசாங்க பேச்சுவார்த்தையாளர்கள் ஷியாக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் ஹசாராக்கள் மீது பாகுபாடு காட்ட இது பயன்படுத்தப்படலாம் என்று கூறுகின்றனர்.
இரு தரப்புக்களுக்கும் இடையில் நிலவும் மற்றொரு சர்ச்சைக்குரிய தலைப்பு, அமெரிக்க-தலிபான் ஒப்பந்தம் எதிர்கால ஆப்கானிய சமாதான ஒப்பந்தத்தை எவ்வாறு வடிவமைக்கும் என்பது தொடர்பான விடயமாகும்.
பிப்ரவரி மாதம் தலிபான்களும், வாஷிங்டனும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் தோஹா சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. அதன்போது அமெரிக்கா பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில், அனைத்து வெளிநாட்டு துருப்புக்களையும் திரும்பப் பெற ஒப்புக் கொண்டதுடன், பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.
பேச்சுவார்த்தைகள் ஒருபுறமிருக்க, ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தலிபான்கள் தினசரி தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளனர்.
ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்னர் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் துருப்புக்களைக் குறைப்பதற்கான டிரம்ப்பின் திட்டத்தை தலிபான்களை தைரியப்படுத்தி புதிய தாக்குதல் அலைகளைத் தூண்டி விடும் என்று காபூல்வாசிகள் விமர்சிக்கின்றனர்.
ஆப்கானிய முஸ்லிம்கள் இரத்தக்களரியின் சுமைகளை நீண்ட காலமாக சந்தித்து வருகின்றனர். அந்த மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு தலிபான்களின் தாக்குதல்களாலோ, அமெரிக்கா முன்நிற்கும் பேச்சுக்களாலோ உருவாகும் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரியது.