நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரான கேலிச் சித்திரங்கள் வரையப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்சுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிய இஸ்லாமிய மார்க்க அறிஞர், காதிம் ஹுசைன் ரிஸ்வியின் இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய ஆதரவாளர்கள் லாகூரில் கூடினார்கள்.
இஸ்லாத்திற்கு எதிரான ‘நிந்தனை’ களுக்கு எதிராக பாகிஸ்தானிலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதனால் பாகிஸ்தானிலும், தெற்காசியாவிலும் பிரபல்யம் அடைந்திருந்த அறிஞர் காதிம் ஹுசைன் ரிஸ்வி வியாழக்கிழமை காலமானார். அண்மைக்காலமாக பாகிஸ்தானிலே பிரான்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால், காதிம் ரிஸ்வி நிறுவிய தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (டி.எல்.பி) கட்சியே முக்கிய பங்கை வகித்து வந்தது.
54 வயதான காதிம் ரிஸ்வி, கடந்த வாரத்தில் நோய் வாய்ப்பட்டிருந்ததாகவும், ஆனால் இறப்புக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் டிஎல்பி கட்சியின் மூத்த தலைவர் பிர் இஜாஸ் அஷ்ரபி கூறினார்.
“இருக்கையில் இருந்த நிலையில் ஆர்பாட்டத்துக்கு வந்தபோதும் கூட, அவருக்கு உடல்நிலை சரியாக இருக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும், பேச்சுச் சுதந்திரம் என்ற மாயையின் கீழ் “அவதூறு செய்வதற்கான உரிமையை” பாதுகாக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கருத்துக்களுக்கும் எதிராக இடம்பெற்றது. முஹம்மத்(ஸல்) அவர்களின் கேலிச்சித்திரங்களை தனது வகுப்பில் காட்சிப்படுத்தியதற்காக, ஒரு இளைஞரால் பிரெஞ்சு ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட நிகழ்வுக்குப்பின், ஏற்பட்ட முறுகல் நிலை முஸ்லிம் நிலங்களில் அதிகளவான எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பாகிஸ்தானில் காதிம் ரிஸ்வி முன்னிலையில் நின்று தலைமை தாங்கி வந்தார்.
பிரெஞ்சு தூதரை வெளியேற்றவும், ஐரோப்பிய நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை குறைக்கவும் பாகிஸ்தான் அரசை டி.எல்.பியின் போராட்டக்காரர்கள் கோரி வந்தனர். பிரெஞ்சு பொருட்களை புறக்கணிப்பதற்கும், தூதரை வெளியேற்றுவது குறித்து பரிசீலிப்பதற்கும் அரசாங்க அமைச்சர்கள் டி.எல்.பி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் கலைந்தன.
காதிம் ஹுசைன் ரிஸ்வியின் பின்னணி
ஏற்கனவே குஜ்ரான்வாலா நகருக்கு அருகே ஒரு போக்குவரத்து விபத்தில் சிக்குண்டிருந்த காதிம் ரிஸ்வி, எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கமுற்று 2006 முதல் சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே செயற்பட்டு வந்தார்.
நாட்டின் பரேல்வி சுன்னி முஸ்லீமின் ஆதரவாளர்களை ஆக்ரோசமான அரசியல் பாணியில் காதிம் ரிஸ்வி வழி நடத்தி வந்தார். இதனால் நாடு முழுவதும் திரண்ட ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களின் பலத்தை நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான அவதூறு பிரச்சினையில் அவரால் பயன்படுத்த முடிந்தது. அவரின் மறைவு இந்த ஒருங்கிணைப்பு சக்தியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், அவரது கட்சியின் எதிர்காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாத்திற்கு எதிரான மத நிந்தனை என்பது பாக்கிஸ்தானில் அதியுயர் குற்றமாகும். அதற்கு அதியுயர் தண்டனையான மரண தட்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறான மத நிந்தனைகளில் அரசாங்கங்கள் அலட்சியம் காட்டும் சந்தர்ப்பங்களில் வன்முறைக்குழுக்களும், உணர்வு மிக்க தனிநபர்களும் சட்டத்தைக் கையில் எடுத்து தண்டனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் பல பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளன. இதன் விளைவாக 1990 முதல் 77 க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன என சில அறிக்கைகள் கூறுகின்றன.
2010 ஆம் ஆண்டில் அப்போதைய பஞ்சாப் கவர்னர் சல்மான் தசீர், கடுமையான மத நிந்தனைச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒரு போதகராக தனது அரசாங்க வேலையை விட்டு விலகியது முதல், காதிம் ரிஸ்வி பொதுத்தளத்தில் முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கிறார்.
பின்னர் ஜனவரி 2011 இல் சல்மான் தசீர், அவரது மெய்க்காப்பாளரான மும்தாஜ் காத்ரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது நாட்டின் மிக உயர்ந்த மத நிந்தனைக்கு எதிரான கொலையாகப் பார்க்கப்பட்டது. அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மத்திய மந்திரி ஷாபாஸ் பட்டி அதே சீர்திருத்தங்களை ஆதரித்ததற்காக தலிபான் துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யப்பட்டார்.
இந்த காலகட்டப்பின்னணியில் தனது வேலையை விட்டு வெளியேறிய பிறகு, ரிஸ்வி பாக்கிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணம் முழுவதும் பயணம் செய்து மத நிந்தனைக்கு எதிரான சட்டங்களைப் பாதுகாப்பதற்காக சூராவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். “மத நிந்தனை” ஐ எங்கு கண்டாலும் வேரறுக்குமாறு தனது ஆதரவார்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ரிஸ்வியின் தேசிய முக்கியத்துவம்
தேர்தல் சத்தியப்பிரமாணத்தில் மாற்றம் செய்தார்கள் என்ற காரணத்தை முன்னிறுத்தி அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசாங்கத்துக்கு எதிராக, ஆயிரக்கணக்கான டி.எல்.பி எதிர்ப்பாளர்களை வழிநடத்திய காதிம் ரிஸ்வியின் போராட்டங்கள், அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகத் தோற்றுவித்தது.
அஹ்மதியா பிரிவை (இஸ்லாமிய அகீதாவிலிருந்து வெளியேறிய ஹாதியானிகள்) ஒதுக்கி வைக்கும் ஒரு சட்டப் பிரிவைத் தவிர்த்துவிட்ட இந்த மாற்றம், “மத நிந்தனைக்குரியது” என்று ரிஸ்வி வாதிட்டார். மேலும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தின் நெடுஞ்சாலையை மூன்று வாரங்களுக்கு மேல் வழி மறித்து முற்றுகை இட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய சட்ட மந்திரி ஜாஹித் ஹமீது ராஜினாமா செய்த பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் மத நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி எட்டு ஆண்டுகள் மரண தண்டனை பட்டியலில் இருந்த ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணை, உச்சநீதிமன்றம் விடுவிப்பதற்கு முன்பு, அவரின் விடுதலையை எதிர்த்து காதிம் ரிஸ்வி 2018 நவம்பரில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பாகிஸ்தான் தலைநகரை மீண்டும் முற்றுகையிட்டார்.
ஆசியா பீபி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, ரிஸ்வியின் கட்சியான டி.எல்.பி தலைவர்களுடன் அரசாங்கம் ஓர் ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட பின்னர்தான் அந்த எதிர்ப்பும் முடிந்தது. இறுதியில் இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் அந்தப்பெண் 2019 மே மாதம் பாகிஸ்தானிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டு, இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.
அரசியல் போட்டியாளர் நவாஷ் ஷெரீப்பிற்கு எதிரான ரிஸ்வியின் 2017 அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இம்ரான் கான் ஆதரவளித்தது வந்தாலும், பின்னர் ஆட்சிக்கு வந்த இம்ரான் கானின் அரசாங்கம் ரிஸ்வி மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தி 2018 டிசம்பரில் அவரைக் கைது செய்தது. பின்னர் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் லாகூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி விடுதலையாகி, தற்போது மரணிக்கும் வரையும் டி.எல்.பி கட்சியை அவர் உணர்வு பூர்வமாக வழிநடத்தி வந்தார்.
இறுதி வரை பாகிஸ்தானின் மத நிந்தனை குற்றத்துக்கு எதிரான சிம்மக்குரலாக திகழ்ந்த அறிஞர் காதிம் ஹுசைன் ரிஸ்வி அவர்களை அரசியல் மற்றும் மார்க்கச் சிந்தனைப் பள்ளி வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம்கள் நினைவு கூறுவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.