இன்று ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்க்கு விஜயம் செய்தபோது, அமெரிக்க பாலஸ்தீன சார்பு இயக்கத்தை “புற்றுநோய்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அழைத்தார்.
பாலஸ்தீனியர்களை நடத்துவதில் இஸ்ரேலை தனிமைப்படுத்த முற்படும் புறக்கணிப்பு, விலக்கு மற்றும் பொருளாதாரத் தடைகள் (பி.டி.எஸ் – BDS) பிரச்சாரத்தை அமெரிக்கா “யூத எதிர்ப்பு – Anti-Semitism” என்று பெயரிடும் என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறினார்; இந்த இயக்கத்தை “புற்றுநோய்” என்று அழைத்தார்.
வாஷிங்டன் “உலகளாவிய இஸ்ரேல் எதிர்ப்பு பி.டி.எஸ் பிரச்சாரத்தை யூத எதிர்ப்பு என்று கருதும்… பி.டி.எஸ் இயக்கத்தை ஓர் புற்றுநோயாக அங்கீகரிக்கும் மற்ற அனைத்து நாடுகளுடனும் நாங்கள் இணைந்து நிற்க விரும்புகிறோம்” என்று பாம்பியோ இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கூட்டாகச் சேர்ந்து ஊடகங்கள் முன்னால் கூறினார்.
பி.டி.எஸ் பிரச்சாரம் ஒரு வன்முறையற்ற மக்கள் தலைமையிலான இயக்கமாகும். இது பாலஸ்தீனியர்களுக்கு சம உரிமைகளையும், அவர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கான உரிமையையும் வழங்குவதற்காக, இஸ்ரேலுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின்(Anti-Apartheid) மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டியங்கும் இந்த இயக்கம், உலகெங்கிலுமுள்ள மக்களை இஸ்ரேலுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்ட வணிகங்கள், கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களை புறக்கணிக்க ஊக்கப்படுத்துகிறது.
சட்டவிரோத யூத குடியேற்றங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள், ஆக்கிரமிப்புக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பாலஸ்தீனிய நிலத்திலிருந்து இயற்கை வளங்களை சுரண்டும் நிறுவனங்கள் மற்றும் பாலஸ்தீனியர்களை குறைந்த ஊதியத் தொழியாளர்களாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
ஐ.நா. மனித உரிமை அலுவலகம் சட்டவிரோத குடியேற்றங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது. பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து மட்டுமல்லாமல், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்திலும் இத்தகைய நிறுவனங்கள் இருக்கின்றன.
அவற்றில் வங்கி மற்றும் சுற்றுலா நிறுவனங்கள், கட்டுமான மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கும்.
பாம்பியோவின் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்டுக்குக்கான விஜயம்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக, தனது கடைசி மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு வந்திருக்கும் பாம்பியோ, 1967 போரில் இஸ்ரேலினால் சிரியாவிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் என்ற பகுதியையும் பார்வையிட்டார்.
“முந்தைய ஜனாதிபதிகள் புறக்கணித்து வந்த, ஆனால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கீகரித்த மைய விஷயத்தை மறுத்துக் கொண்டு நீங்கள் இங்கு நின்று கொண்டு எல்லையைத் தாண்டி நோட்டமிட முடியாது” என்று பாம்பியோ கோலன் ஹைட்டிலிருந்து கூறினார். “இது இஸ்ரேலின் ஒரு பகுதியாகும்” என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், வெள்ளை மாளிகையில் நெதன்யாகுவுடன் ஒரு ஆணையில் கையெழுத்திட்டபோது, கோலன் ஹைட்ஸ் மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை டிரம்ப் அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பகிரங்கமான நில அபகரிப்பை கருத்திற்கொள்ளாத இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் சிரியா அதன் இறையாண்மையின் மீதான “அப்பட்டமான தாக்குதல்” என்று அச்செயலைக் கூறியது.
இதன்படி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு இஸ்ரேலிய குடியேற்றத்தை பார்வையிட்ட முதல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்ற பெருமை பாம்பியோவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அமெரிக்க நிர்வாகம் சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தில் இருந்து விலகி, குடியேற்றங்களை சட்ட விரோதமற்றவையாகக் கருதுவதாக மீண்டும் நிறுவ முற்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் குடியேற்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்; இஸ்ரேலிய துருப்புகள் அவர்களை கண்ணீர்ப்புகை கொண்டு எதிர்கொண்டனர்.