முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ளார். எனினும் டொனால்ட் டிரம்ப் தேர்தலுக்கு சட்டப்பூர்வமாக சவால் விடுவதாக அறிவித்துள்ள நிலையில், அதனை ஜனநாயகக் கட்சி சார்பானவர்கள் டிரம்ப் நிர்வாகத்தின் சித்த பிரம்மையாகப் பார்க்கிறார்கள். டிரம்ப் நிர்வாகத்தின் போது, டிரம்ப் நிர்வாகம் உருவாக்கிய அல்லது சமாளிக்கத் தவறிய நடைமுறையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பைடன் நிர்வாகம் இப்போது தயார்ப்படுத்த வேண்டியிருக்கும். இன்று அமெரிக்கா குறிப்பிடத்தக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்கிறது. பலர் அமெரிக்க கொள்கையில் மாற்றங்களைத் தேடிக்கொண்டிருக்கும்போது, அரச இயந்திரத்துக்குள் அனைத்து ஜனாதிபதியும் எதிர்கொள்ளும் வரம்புகள் பைடனுக்கும் விதிவிலக்கல்ல. அதுபோக தலைகீழான மாற்றங்கள் வருமா என்ற கேள்விக்கு பதில்கூறும் வகையில் பைடனின் தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்தவொரு தீவிரமான கொள்கை நிலைப்பாடுகளையும், மாற்றங்களையும் அவர் முன்வைத்திருக்கவில்லை. எனவே அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை.
உள்நாட்டு முன்னுரிமைகள்
கோவிட்-19
பல அறிக்கைகளின்படி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது பத்து சோதனை மையங்களை நிறுவுவதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோயை உடனடியாகக் கையாள்வதையும், வளங்களை வரிசைப்படுத்த கூட்டாட்சி(Federal) அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதையும், கூட்டாட்சி வல்லுநர்கள் மூலம் உறுதியான தேசிய வழிகாட்டுதல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பைடன் அனைத்து ஆளுநர்களும் வாய்க்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளதுடன், அனைவருக்கும் இலவச சோதனையை வழங்கவும், ஒரு தேசிய தொடர்பு-தடமறிதல் திட்டத்தை அமைக்க 100,000 பேரை நியமிக்கவும் விரும்புகிறார். மேலும் கூட்டாட்சியின்(Federal Involvement) ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான பைடனின் திட்டம், பெரும்பாலும் டிரம்ப்பின் காலப்பகுதியில் அமைந்திருக்கவில்லை.
இது குறித்து Master of Public Health (M.P.H.) அமண்டா டி குறிப்பிடும்போது,
“பொதுவாக, எமது எதிர்வினையாற்றலில் எம்மிடம் நிலவிய பலகீனம்தான், இந்த தொற்றுநோய்க்கு முகம் கொடுப்பதற்கு நம்மை வழிநடத்த, கூட்டாட்சி மூலோபாயத்தின் (Federal Strategy) பற்றாக்குறையாகும்.” என்று தெரிவித்தார்.
பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் அடுத்தது குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான பிளவு ஆகும். இந்த உண்மை சமீபத்திய தேர்தல்களில் மிகத்தெளிவாக நிரூபணமாகி இருந்தது. பல உள்நாட்டுப் பிரச்சினைகளில், அமெரிக்காவின் துயரங்களை சரிசெய்ய இரு பிரதான கட்சிகளினதும் ஆதரவு பைடனுக்கு தேவைப்படும். குறிப்பாக பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அது இன்றியமையாததாகும்.
பைடனின் நிதித் திட்டங்கள், கோவிட்-19 இன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன. வேலையின்மை காப்பீட்டை(Unemployment Insurance) அதிகரிக்கவும், வாழ்வாதாரத்துக்காகப் போராடிவரும் அமெரிக்கர்களுக்கு நேரடி கொடுப்பனவுகளை(Direct Payments) அனுப்பவும், ‘சில’ மாணவர் கடன்களை(Student Loans )தள்ளுபடி செய்யவும், சிறு வணிகங்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்கவும் பைடன் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் மிகப்பெரிய செல்வ சமத்துவமின்மை, வளர்ந்து வரும் வேலையின்மை, பல தசாப்த கால ஊதியத் தேக்கம், குறைந்த முதலீடு மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் நிதித் துறையின் ஆதிக்கம் போன்ற பல அடிப்படை பொருளாதார சிக்கல்களை அமெரிக்கா எதிர்கொள்கிறது. இவை அனைத்தையும் பைடன் எவ்வாறு சமாளிப்பார் என்பதற்கு அவரிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆக்கபூர்வமான பதில்கள் வெளியிடப்படவில்லை. இவை அனைத்தும் ட்ரம்ப், “தீர்த்துக் காட்டுவேன்” என்று அறைகூவிய பிரச்சினைகள் தான். இப்போது அவை அனைத்தும் தீர்க்கப்படாமல் பைடனுக்கு முன்னால் அடுக்கப்பட்டுள்ளன; அதுதான் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றம்.
இன நீதிக்கான (Racial Justice) பைடனின் திட்டங்களில் வெள்ளையர் அல்லாத மக்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொருளாதார மாற்றங்களுக்கான திட்டங்கள் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றங்களில் சில, செயல்பாட்டு மண்டலங்கள் (Operational zones), மாநில சிறு வணிக கடன் முயற்சி (State small business credit initiative (SSBCI), மற்றும் வணிகங்களில் தனியார் பங்கு முதலீடு(Private Equity Investment in Businesses) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதேபோன்ற கொள்கைகள் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு புதிய பல சிக்கல்களை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ட்ரம்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டட ஊக்கத் திட்டங்கள் (Stimulus packages) முன்னோடியில்லாத அளவுக்கு கூட்டாட்சி நிதிப் பற்றாக்குறை(Federal deficit) மற்றும் கடன் அதிகரிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு பல நெருக்கடிகளை ஒன்றாகச் சந்திக்கும் பைடனுக்கு குடியரசுக் கட்சியினரிடமிருந்து குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு தேவைப்படும். இந்நிலையில் குடியரசுக் கட்சியினர் அவருக்கு கைகொடுப்பதற்கு பதிலாக ஜோ பைடன் என்ன செய்யப்போகிறார் என்று கண்ணி வைத்து காத்து நிற்பார்கள் என்றே புலப்படுகிறது.
இவ்வாறு பைடன் நிர்வாகத்தின் முன்னால் பல உள்நாட்டு சிக்கல்கள் இருப்பினும், பைடனினால் முன்மொழியப்பட்ட கொள்கைகள் முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனித்துவமானவையாகத் தெரியவில்லை.
பைடனின் வெளியுறவுக் கொள்கை
சீனா
அமெரிக்காவின் முக்கிய வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமை பெறுகிறது சீனா. யூரேசியாவிற்குள் சீனாவின் பிராந்திய மேலாதிக்கத்தைத் தடுப்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த மூலோபாய சங்கடத்தையே பைடன் இப்போது பிரதானமாக சந்திக்கின்றார்.
சீனாவை சமாளிக்க 1991 முதல், அமெரிக்கா பயன்படுத்திய சர்வதேச கட்டமைப்பை டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்தவில்லை. ஜனாதிபதி டிரம்ப் சீனா மீது ஆக்கிரோஷமான வர்த்தகப் போர்களை நடத்தி வந்தார். அதன் விளைவு அமெரிக்க நிறுவனங்களையும், அதன் கூட்டாளிகளையும் காயப்படுத்தியது. இந்த ஒருதலைப்பட்ச அணுகுமுறை அமெரிக்கா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது. எனவே பைடன் உலகளாவிய சுதந்திர வர்த்தகம், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து அமெரிக்காவின் பாரம்பரிய சர்வதேச அணுகுமுறையை மீட்டெடுப்பதாக வாக்களித்துள்ளார்.
பைடன் நிர்வாகம் தனது முன்னோடி செய்ததைப் போலவே சீனாவுக்கு விரோதமான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பைடன், ஜனாதிபதி விவாதங்களின் போது இதை தெளிவுபடுத்தியும் இருந்தார்.
“நீங்கள் சீனாவில் வணிகம் செய்ய, உங்கள் அறிவுசார் சொத்துக்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்; சீனாவில் 51 சதவீதத்தைக்கொண்ட பங்குதாரர் இருக்க வேண்டும் என்பதை நாங்ள் அறிவோம். முதலாவதாக, நாங்கள் அதை செய்ய மாட்டோம். இரண்டாவது, சீனா சர்வதேச விதிகளின் படி விளையாட வேண்டிய நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். துணைத் தலைவராக இருந்தபோது, நான் ஷியைச் (Xi) சந்தித்தபோது, ”தென் சீனக் கடலில் நாங்கள் விமான அடையாள மண்டலங்களை அமைத்து வருகிறோம்; அதன் மீதாக நீங்கள் பறக்க முடியாது” என்று கூறினார். அதற்கு நான் “நாங்கள் அவற்றினூடாக பறப்போம்” என்று என்று சொன்னேன். நாங்கள் B-52 மற்றும் B-1 குண்டுவீச்சு ரக விமானங்களை அதன் வழியாக பறக்கவிட்டோம். நாங்கள் அவர்களின் நிலைப்பாடுகளை கவனம் செலுத்தப் போவதில்லை. அவர்கள் விதிகளின்படி விளையாட வேண்டும்.”
பைடனின் அறிக்கை, அவரது நிர்வாகம் சர்வதேச அரங்கில் சீனாவை ஒரு முக்கிய தரப்பாக அங்கீகரிக்காது என்பதையும், அதனுடன் குறிப்பிடத்தக்க சமரசங்களை செய்யத் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அதற்கு பதிலாக பைடன் சீனாவை ஓரங்கட்டவும், அதன் எழுச்சிக்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்கவும் சர்வதேச விதிமுறைகளை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடகங்கள் பைடனின் தேர்தல் வெற்றியை அறிவித்த பின்னர், அவருக்கு சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை; இது புதிதாக வெள்ளை மாளிகைக்கு வருபவரை சீனா நம்பிக்கையுடன் நோக்கவில்லை என்பதைக் குறிக்கிறது.
இஸ்ரேல்
ஜனாதிபதி டிரம்ப் முன்னோடியில்லாத அளவுக்கு இஸ்ரேலுடன் நெருக்கமான உறவைக் கட்டியெழுப்பி, இராணுவ தளங்களையும், பொருளாதார உதவிகளையும் வழங்கினார். அவரது ‘நூற்றாண்டின் ஒப்பந்தம் – Deal of the Century’ பல அரபு நாடுகளுடன் இஸ்ரேலின் உறவை இயல்பாக்குவதற்கு வழிவகுத்தது. ஆனால் இஸ்ரேலியர்கள் முயன்ற மேற்குக்கரையின் (West Bank) மேலதிக நிலங்களின் இணைப்பை(Annexation) அது நிறுத்தியது. இஸ்ரேல்-அரபு இயல்பாக்கலுக்கு அப்பால், இஸ்ரேலிய கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் இஸ்ரேலின் முன்மொழியப்பட்ட இணைப்பு(Annexation) சிறிய முன்னேற்றத்தை அடைந்தது எனினும், அது அமெரிக்காவால் நிறுத்தப்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செய்ததைப் போல, இஸ்ரேல் ஜனநாயகக் கட்சியினரின் கீழ் மேலும் சலுகைகளைப் பெறும் சாத்தியம் இல்லை. மேலும், ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், இஸ்ரேலுக்கு வரலாறு நெடுகிலும் வழங்கி வரும் தெளிவான ஆதரவைத் தவிர, அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலியர்களுக்கு உடைந்த வாக்குறுதிகளை வழங்கி அதனைத் தன் ஆளுமைக்குள் கட்டுப்படுத்தியே வைத்துள்ளது. உதாரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேலின் சமீபத்திய முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய இஸ்ரேல்-பாலஸ்தீனிய சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்க பைடன் விரும்புகிறார். கலீஜ் டைம்ஸ் சமீபத்தில் முன்னாள் இஸ்ரேலிய மந்திரி ஒருவர் வெளிப்படுத்தி கருத்தாக கீழ்வரும் செய்தியை வெளியிட்டது; “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் செப்டம்பர் 15 ஆம் தேதி எட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க சமாதான ஒப்பந்தம் பல ஆண்டுகளாக தாமதமாகிய ஒன்றாகும். ஏனெனில் பராக் ஒபாமாவின் அமெரிக்க நிர்வாகம் முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது பின்தள்ளப்பட்டது.”
ஈரான்
ஈரானைப் பொருத்தமட்டில், ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்காக ஈரானை அணுகுவதில் உறுதியாக இருப்பதாக பைடன் கூறியுள்ளார். ஒபாமா-பைடன் நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்நிலைப்பாடு நெதன்யாகுவால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பின்னர் டிரம்பின் நிர்வாகத்தில் அது முடிவுக்கு வந்தது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது “அவரது நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமைக்குரியது” என்றும், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்ற உடனேயே இந்த ஒப்பந்தத்தைத் தொடருவார் என்றும் ,ஜோ பைடனின் முன்னாள் மூத்த உதவியாளர் கூறியிருக்கிறார்.
இஸ்ரேலின் பரப்புரை முயற்சிகள் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை கருத்தில் கொள்ள மறுத்து, 2015 இல் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்தனர். தற்போது பைடன் நிர்வாகம் மற்றொரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் – இது ஈரானுக்கு மீண்டும் எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கு வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை உள்ளடக்கியதா என்பதும், பைடன், ஈரானின் பிராந்திய அபிலாஷைகளை எவ்வாறு கையாள்வார் என்பதும் இப்போதைக்கு தீர்க்கமாக கூறமுடியாதுள்ளது.
அட்லாண்டிக் கூட்டுறவு
அட்லாண்டிக் கூட்டுறவை டிரம்ப் நிர்வாகம் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது. பைடனும் இப்போக்கை மாற்றுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அவரது ஐரோப்பிய நட்பு நாடுகளின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் போக்கை அவரும் கடைப்பிடிப்பார். நேட்டோவிற்கு ஐரோப்பா போதியளவு நிதிப் பங்களிப்பு செய்யவில்லை என்று டிரம்ப் விமர்சித்து வந்தார். அதே கொள்கையுடன் பைடனும் தொடருவார் என எதிர்வு கூறலாம். நேட்டோவிற்குள் அமெரிக்க கடமைகளை நிறைவேற்றுவதில் ஐரோப்பியர்கள் அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்வதை பைடனும் விரும்புவார். ஒபாமா-பைடன் நிர்வாகம் ஆசிய மூலோபாயத்திற்கு முன்னுரிமை காட்டுவது பற்றி அறிவித்தபோது, அட்லாண்டிக் உறவுக்குள் பிளவு ஏற்பட்டது; ஏனெனில் அமெரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு துருப்புக்களை நகர்த்திய செயல், ஐரோப்பா அதிக பளுவைத் தூக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. பைடன் நிர்வாகம் இந்தக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும் என்பது சாத்தியமில்லை.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் புதிய அமெரிக்க ஜனாதிபதி எப்போதுமே உலகளாவிய கவனத்தை ஈர்க்கக் கூடியவராக இருந்தாலும், அமெரிக்க மூலோபாயக் கொள்கையில் தீவிர மாற்றங்களைச் செய்வதற்கான திறன் அந்த ஜனாதிபதிக்கு இருப்பதில்லை; இருந்தாலும் மிகக் குறைவாகவே இருக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி செனட்டுடனும், நிதித்துறை மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனங்களின் பல்வேறு நிறுவனங்களுடனும், நாடுகடந்த கோப்பரேஷன்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கிறார். ஜனாதிபதிகள், அமெரிக்க மூலோபாய இலக்குகளை அடைய தங்கள் தனித்துவமான அணுகுமுறைகளைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த மூலோபாய இலக்குகள் அரிதாகவே மாற்றப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைவான வெளியுறவுக் கொள்கை வெற்றிகளையே அமெரிக்கா பெற்றிருப்பதால் முதற்தர வல்லரசு என்ற தனது ஸ்தானத்தை, உலக அரங்கில் பேணுவதற்கு அது பாரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. உள்நாட்டிலோ, 2008 இன் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், அமெரிக்காவின் உள்நாட்டு சவால்கள் வளர்ந்து விஸ்வரூபமாகி விட்டன. ஆனால் அடுத்தடுத்த வந்த அமெரிக்க நிர்வாகங்கள் அவற்றை முகம் கொடுப்பதில் இதுவரை தோல்வியையே கண்டு வருகின்றன.