அமெரிக்க தேர்தலின் வாக்களிப்பின் முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ரஷ்யா மற்றும் மெக்ஸிகோவுடன் இணைந்து சீனாவும் ஜோ பைய்டெனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் ஜோ பைய்டெனின் வெற்றி அறிவிப்பை கவனத்தில் கொண்டுள்ளதாக சீனா கூறுகிறது. ஆனால் வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த திங்களன்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், தேர்தலின் முடிவு அமெரிக்க சட்ட மற்றும் நடைமுறைகளின் கீழ் தீர்மானிக்கப்படும் ஒர் விடயம் என்றும், பெய்ஜிங் அதன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் கூறினார்.
2016 ஆம் ஆண்டின் டிரம்பின் தேர்தல் வெற்றியின் போது தேர்தலுக்கு மறு நாள் நவம்பர் 9 ஆம் தேதி ஜனாதிபதி ஜி ஜின்பிங் டிரம்பிற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவிலும், உலகிலும் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தங்களது செல்வாக்கிற்கான போட்டியில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் சீனா ஒர் பிளவுபட்ட உறவைக் கொண்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கான குற்றச்சாட்டு முதல் சின்ஜியாங் மற்றும் ஹாங்காங்கில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகள் வரை இரு சக்திகளும் முரண்பட்டு வந்துள்ளன.
ரஷ்யா மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட உயர்மட்ட நாடுகளில் ஒன்றான சீனாவும் அமெரிக்க தேர்தல் குறித்து இன்னும் அறிக்கைகளை வெளியிடவில்லை. தற்போது ஜனநாயகக் கட்சியின் பைய்டென் குடியரசுக் கட்சியின் டிரம்பை வென்றிருந்தாலும் டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் பல மாவட்டங்களின் வாக்கு எண்ணிக்கையை சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.
“எங்கள் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை பாரம்பரிய ஊடகங்கள் அறிவிக்கும் வாடிக்கை எப்போதிருந்து ஆரம்பித்துள்ளது?” என்றும், “கடந்த இரண்டு வாரங்களில் நாம் அனைவரும் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்!” என்றும் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான தொழில்நுட்பம், வர்த்தகம் முதல் ஹாங்காங் மற்றும் கொரோனா வைரஸ் வரையிலான மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மிகவும் மோசமடைய செய்துள்ளன. மேலும் டிரம்ப் நிர்வாகம் பெய்ஜிங்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கிறது.
மறுபக்கத்தில் ஜோ பைய்டெனும், சீனா மீது கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ஒரு “ரவுடி” என்று அழைத்ததோடு, “சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், தனிமைப்படுத்துவதற்கும், தண்டிப்பதற்கும்” ஒரு பிரச்சாரத்தை வழிநடத்துவதாக உறுதியளித்திருந்தார். இது குறித்து அவர் இன்னும் அளவிடப்பட்ட மற்றும் பலதரப்பு அணுகுமுறையை எடுக்க வாய்ப்புள்ளது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
“புதிய அமெரிக்க அரசாங்கமும், சீனாவும் பரஸ்பர மரியாதையுடன் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் நடுவில் சந்திக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று வாங் வென்பின் கூறுகிறார்.