நாகோர்னோ-கராபாக்கில் இடம்பெற்று வந்த ஆறு வார கால கடுமையான சண்டையை ரஷ்யாவின் தரகு வேலைகளுடன் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் கையெழுத்திட்டது.
குறைந்தது 1,000 பேரைக் கொன்ற மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.
“கையொப்பமிடப்பட்ட முத்தரப்பு அறிக்கை மோதலைத் தீர்ப்பதில் ஒர் (முக்கியமான) புள்ளியாக மாறும்” என்று அஜர்பைஜானின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இணைய தொலைக்காட்சி சந்திப்பில் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் உள்ள ஆர்மீனிய அதிகாரிகள், பிராந்தியத்தின் இரண்டாவது பெரிய நகரமான சுஷா (ஆர்மீனியாவால் சுஷி என அழைக்கப்படும்) அஜெரி படைகளால் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்திய பல மணி நேரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மேலும் திங்களன்று டஜன் கணக்கான குடியேற்றங்களை கைப்பற்றியதாக அஜர்பைஜான் கூறுகிறது.
இந்த முடிவு “தனிப்பட்ட முறையில் எனக்கும் எனது மக்களுக்கும் சொல்லமுடியாத வேதனையானது” என்று விவரித்த ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன், அஜெரி படைகள் பிராந்தியத்தின் முக்கிய நகரமான ஸ்டெபனகெர்ட்டை நெருங்கியதை அடுத்து, தங்கள் “இராணுவ நிலைமை பற்றிய ஆழமான பகுப்பாய்வை” தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் “தற்போதைய நிலைமைக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்” என்று கூறினார்.
அஜர்பைஜானின் ஜனாதிபதி அலியேவ் இந்த ஒப்பந்தம் “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” என்றும்இ அஜர்பைஜானின் இராணுவ வெற்றிகளால் ஆர்மீனியா, பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவருடைய ட்விட்டர் பதிவில் “இந்த அறிக்கை; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, ஆர்மீனியாவின் சரணடைதலைக் குறிக்கிறது. பல ஆண்டுகாள ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது; இது நாங்கள் அடைந்த புகழ்பெற்ற வெற்றி!” என்று பதிவிட்டிருந்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமைதி காக்கும் படையினராக செயல்பட 1,960 வீரர்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாகோர்னோ-கராபாகின் முன்னணியிலும் மற்றும் ஆர்மீனியா மற்றும் நாகோர்னோ-கராபாக் இடையேயான தாழ்வாரத்திலும் தனது படைகள் இருக்கும் என்று புடின் கூறினார். துருக்கிய அமைதி காக்கும் படையினரும் நிறுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அலியேவ் கூறினார்.
“இது ஒரு வெற்றி அல்ல; ஆனால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டதாக நீங்கள் கருதும் வரை அது தோல்வி இல்லை” என்று ஆர்மீனியாவின் பிரதமர் பாஷினியன் ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது கூறினார். மேலும் “நாங்கள் ஒருபோதும் நம்மை தோற்கடித்ததாக கருத மாட்டோம், இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் மறுபிறப்பின் சகாப்தத்தின் புதிய தொடக்கமாக மாறும்” என்று கூறினார்.
இந்த ஒப்பந்தம் ஆர்மீனியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் யெரெவனில் உள்ள அரசாங்க தலைமையகங்களைத் தாக்கியுள்ளதோடு, அலுவலகங்களைக் கொள்ளையடித்து உடமைகளுக்கு சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தின் உள் அறைக்குள் நுழைந்து, பிரதமர் பாஷினியனை ராஜினாமா செய்யக் கோரி தங்களது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர்.
ஆர்மீனியாவில் மேலும் போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.