ரோஹிங்கியா அரசியல்வாதிகள் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மியான்மர் அதிகாரிகள் பெருமளவிலான ரோஹிங்கியா வாக்காளர்களின் வாக்குரிமைகளை பறித்துள்ளதாக உரிமைகள் குழுக்கள் (Rights Groups) குற்றம் சாட்டியுள்ளது.
இவர்களின் தற்காலிக அடையாள அட்டைகள் 2015 தேர்தல்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டன. இது 25 ஆண்டுகளில் வெளிப்படையாக நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும். இத் தேர்தலே நீண்டகால ஜனநாயக சார்பு பிரச்சாரகர் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது.
மியான்மரில் தொடர்ந்து வந்த இராணுவ அரசாங்கங்கள் ரோஹிங்கியாக்களின் அடையாள ஆவணங்களை பறித்து கூடுதலான ரோஹிங்கியாக்களின் பூர்வீகத்துக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் பண்ணியுள்ளனர்.
1974 முதல் ஒவ்வொரு மியான்மர் தேர்தலிலும் வாக்களித்த 65 வயதான முஹம்மத் யூசுப் கடைசியாக ரோஹிங்கியா இனத்தவர்கள் 2010 இல் நாட்டில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என்று கூறுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிருகத்தனமான இராணுவத் தாக்குதலை எதிர்கொண்டு பங்களாதேஷுக்கு தப்பி ஓடி வந்த அவர் இன்னும் அவரது தாயகத்திற்காக ஏங்குவதாக கூறுகிறார்.
பல தசாப்த கால இராணுவ ஆட்சிக்குப் பின்னர் மியான்மர் தனது இரண்டாவது ஜனநாயகத் தேர்தலை ஞாயிற்றுக்கிழமை நடத்தும்போது, லட்சக்கணக்கான முஸ்லீம் ரோஹிங்கியாக்கள் தங்களது வாக்களிப்பை இழந்து விடுவார்கள். இந்நிலை தேர்தல்கள் சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இருக்காது என்று ஐக்கிய நாடுகள் சபையை எச்சரிக்க வழி வகுத்துள்ளது.
“இந்த உரிமைகள் முக்கியமானது; எங்கள் குழந்தைகள் ஒரு நாள் பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எதிர்காலத்தில் இது நடப்பதாக நான் காணவில்லை; எனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. 2025 இல் எங்களால் வாக்களிக்க முடியுமா என்று கூட எனக்குத் தெரியாது” என்று முஹம்மத் யூசுப் தனது மனக்கவலையைத் தெரிவிக்கிறார்.
மியான்மர், ரோஹிங்கியாக்களை ஒரு பழங்குடி இனமாக அங்கீகரிக்கவில்லை. அவர்கள் பங்களாதேஷில் இருந்து வந்த சட்டவிரோத “வங்க தேசத்தவர்கள்” என்று கேலி செய்கிறது. இருப்பினும் மியான்மரில் இச் சமூகத்தின் வரலாற்று சுவடுகள் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக உள்ளன.
2017 இல் 730,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் ஐ.நா இனால் “இனப்படுகொலை நோக்கம் கொண்ட” இராணுவத் தாக்குதல் என வர்ணிக்கப்பட்ட தாக்குலில் இருந்து தப்பி, ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இதற்கு முந்தைய இன வன்முறைகளில் இருந்து தப்பி பங்களாதேஷில் அமைந்துள்ள பாரிய முகாம்களில் தஞ்சம் புகுந்திருந்த மற்ற அகதிகளுடன் இணைந்து கொண்டனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பங்களாதேஷ் முகாம்களில் உள்ள சுமார் 850,000 ரோஹிங்கியா அகதிகளின் நிலைமைகளை இன்னும் கடினமாக்கியுள்ளது. ‘‘நாங்கள் எப்போதாவது வீடு திரும்புவோமா’’ என்ற கேள்வியை பலரும் சந்தேகத்துடன் எழுப்புகின்றனர்.
“எங்களை திரும்ப அழைத்துச் செல்வதில் மியான்மர் அரசு ஆர்வம் காட்டவில்லை” என்று குதுபலோங் முகாமிலுள்ள 35 வயதான ரோஹிங்கியா அகதி முஹம்மத் இஸ்மாயில் கூறினார். “நாங்கள் ஒரு நாள் திரும்பிச் சென்றாலும், மியான்மர் அரசு மீண்டும் வாக்களிக்க அனுமதிக்காவிட்டால் என்ன செய்வது? எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு என்ன நடக்கும்? அவர்களுக்கு அவர்களின் உரிமைகளும் குடியுரிமையும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எவ்வாறு பிழைப்பார்கள்?” என்று அவர் புலம்புகிறார்.
மேலும் “2015 முதல் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” தேர்தல்கள் ரோஹிங்கியாக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மியான்மரில் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்காக வாதாடி வரும் சுதந்திர ரோஹிங்கியா கூட்டணியின் இணை நிறுவனர் நெய் சான் எல்வின்,
“மியான்மர் அரசாங்கத்திற்கு விருப்பம் இருந்திருந்தால், அது பங்களாதேஷில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் வாக்களிக்கும் முறைகளை ஏற்பாடு செய்திருக்க முடியும்” என்றும், “ஆனால் அது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.” என்றும் கூறுகிறார்.