இஸ்ரேலின் இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 80 பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடித்தது.
வடக்கு கிராமமான கிர்பெட் ஹம்சாவில் 11 குடும்பங்களுக்கு வீடாக திகழ்ந்த பதினெட்டு கூடாரங்களை இஸ்ரரேலிய இராணுவம் செவ்வாய்க்கிழமை இடித்தது. மொத்தமாக 74 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மைனர்கள் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரசு சாரா அமைப்பான B’Tselem தெரிவித்துள்ளது.
புல்டோசர்கள் மற்றும் தோண்டி இயந்திரங்களைக் கொண்டு கால்நடை வளாகங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கொட்டகைகள், சிறிய கழிப்பறைகள், நீர் கொள்கலன்கள் மற்றும் சோலார் பேனல்களை இடித்ததோடு சில குடியிருப்பாளர்களுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் டிராக்டர்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பாலஸ்தீனிய பிரதமர் முகமது ஷ்தாயே “கிர்பெட் ஹம்சா குடிமக்களையும், இதேபோன்ற பல்லாயிரக்கணக்கான சமூகங்களையும் தங்கள் வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் இடம்பெயரச் செய்யும்” இஸ்ரேலிய துருப்புக்களின் முயற்சிக்கு எதிராக தலையிடுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார். மேலும் “முழு உலகின் கவனமும் ”அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் கவனம் செலுத்தும் இந் நேரத்தை இஸ்ரேலிய இராணுவம் இன்னொரு அட்டூழியத்தை செய்ய தேர்ந்தெடுத்துள்ளது” என்றும் கூறினார்.
இந்த நடவடிக்கையால் வீடற்ற நிலையில் இருந்த அப்தெல்கானி அவாடா, AFP செய்தி நிறுவனத்திடம் இஸ்ரேலியர்கள் “எங்கள் வீடுகளை காலி செய்ய 10 நிமிடங்களே” கொடுத்ததாகவும் “பின்னர் அவர்கள் புல்டோசரால் இடிக்கத்தொடங்கினர்” என்றும் அவர் கூறினார். தனது குடும்பம் பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், இஸ்ரேல் “பாலஸ்தீனிய மக்களின் ஜோர்டான் பள்ளத்தாக்கை காலி செய்ய” முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேற்குக் கரையில் பொதுமக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான இஸ்ரேலிய இராணுவத்தின் கிளை கோகாட், இவை ஜோர்டான் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சூடு மண்டலத்தில் (இராணுவ பயிற்சிப் பகுதியில்) சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளாகும்; அவற்றை தாம் அழித்ததாகக் கூறியது.
ஐ.நா.வின் கூற்றுப்படி, ஜோர்டான் பள்ளத்தாக்கு, சுமார் 60,000 பாலஸ்தீனியர்களின் வாழ்விடமாக உள்ளது, ஆனால் கிட்டத்தட்ட 90 சதவீதமான நிலம் ஏரியா சி என அழைக்கப்படும் பகுதியாகும். மேற்குக் கரையின் ஐந்தில் மூன்று பகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதில் மூடிய இராணுவப் பகுதிகளும் மற்றும் சுமார் 50 விவசாய குடியிருப்புகளிள் 12,000 இஸ்ரேலியர்களும் வசிக்கின்றனர்.
பாலஸ்தீனியர்கள் அந்த பகுதிகளுக்கும், அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமான இராணுவ அனுமதிப்பத்திரம் இன்றி கிணறுகள் தோண்டுவதற்கோ அல்லது எந்தவிதமான உட்கட்டமைப்பையும் கட்டியெழுப்பவோ அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய இஸ்ரேலிய குடியேற்ற எதிர்ப்புக் குழுவான பீஸ் நவ், 2009 முதல் 2016 வரையான ஏரியா சி-யில் 3,300 க்கும் மேற்பட்ட அனுமதி விண்ணப்பங்களில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே வெற்றிகரமாக இருந்துள்ளது என்று கூறுகிறது.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீட்டு நீட்டிப்புகள், கூடாரங்கள், கால்நடை வளாகங்கள் மற்றும் நீர்ப்பாசன வலையமைப்புகள் போன்ற அனைத்தும் இஸ்ரேலிய இராணுவத்தால் இடிக்கப்படும் அபாயம் உள்ளது.
2020 ஆம் ஆண்டில் இது வரை 404 மைனர்கள் உட்பட கிட்டத்தட்ட 800 பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளனர். முந்தைய ஆண்டு முழுவதும் 677 பேர் வீடுகளை இழந்தனர், இது 2018 இல் 387 ஆகவும், 2017 இல் 521 ஆகவும் இருந்தது.