மசோதா 21, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்கள் பணியின் போது தங்களது மதச் சின்னங்களை அணிவதைத் தடுக்கிறது. இது கனேடிய அரசியலமைப்பை மீறுவதாக உரிமைக் குழுக்கள் வாதாடுகின்றன.
கனேடிய மாகாணமான கியூபெக்கில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. சில அரச ஊழியர்கள் தங்கள் மத ஆடைகளை அணிவதைத் தடைசெய்யும் ஒர் சட்டம், நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக சிவில் உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.
மசோதா 21 க்கு எதிராக கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் National Council of Canadian Muslims (NCCM), கனேடிய சிவில் லிபர்ட்டிஸ் அசோசியேஷன் the Canadian Civil Liberties Association (CCLA) மற்றும் இக்ராக் நூரல் ஹக் என்ற முஸ்லீம் பெண்மணி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நவம்பர் 2 ஆம் தேதி கியூபெக் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
2019 ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப், யூத ஆண்கள் அணியும் கிப்பாக்கள் மற்றும் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகைகள் உள்ளிட்ட மத அடையாளங்களை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அரச ஊழியர்கள் அணிந்த நிலையில் பணியாற்றுவதைத் தடை செய்கின்றது.
விண்ணப்பதாரர்கள் இச்சட்டம் பாரபட்சமானது என்றும் கனடாவில் வாழும் இவர்கள் “இரண்டாம் தர பிரஜையாக” கருதுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.
மக்கள் “அவர்கள் அணியும் உடைகள் மற்றும் நம்பிக்கையின் காரணத்திற்காக தங்கள் வேலையை இழந்துள்ளார்கள்” என்று (NCCM) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பாரூக் கூறினார்.
மேலும் “மக்கள் தாங்கள் வசித்த மாகாணத்தை விட்டு வெளியேறி அவர்கள் யார் என்பதையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; இது ஏற்கத்தக்கதல்ல; அதனால்தான் மசோதா 21 க்கு எதிராகப் போராடுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்” என்று கூறினார்.
நூர் பர்கத் எனும் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண் வழக்கறிஞர் 21 ஆம் மசோதாவால் அரச வழக்கறிஞராக இருந்த வாய்பை இழந்ததாக கூறினார்.
கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், கியூபெக் பிரீமியர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளார். இது மத சுதந்திரத்தை மீறாத ஒரு மிதமான சட்டம் என்றும் “பெரும்பான்மையான கியூபெக்கர்களால்” ஆதரிக்கப்படுவதாகவும் கூறினார்.
மே 2019 இல் லெகர் மார்க்கெட்டிங் Leger Marketing நடத்திய 1,200 க்கும் மேற்பட்ட கியூபெக்கர்கள் பங்கு கொண்ட ஆய்வில், மாகாணத்தில் 63 சதவீதமான மக்கள் மசோதா 21 ஐ ஆதரித்துள்ளனர்.
கனேடிய ஆய்வுகள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, கியூபெக்கர்களில் 37 சதவீதமானோர் மாத்திரமே முஸ்லிம்களைப் பற்றி நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 28 சதவீதமானோர் மாத்திரமே இஸ்லாத்தைப் பற்றி நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். இஸ்லாத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டவர்களில், 88 சதவீதமானோர் அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான மதச் சின்னங்களைத் தடை செய்வதை ஆதரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கியூபெக் அரசாங்கம் இந்த மசோதா அனைத்து மத மக்களுக்கும் சமமாக பிரயோகிக்க படுவதாக கூறினாலும், சிவில் உரிமைகள் மற்றும் சமூகக் குழுக்கள் முஸ்லிம்கள், குறிப்பாக ஹிஜாப் அணியும் முஸ்லீம் பெண்கள் இதன் விளைவுகளின் தாக்கத்தை அனுபவிப்பதாக கூறுகின்றன.
மசோதா 21, முதன்முதலில் மார்ச் 2019 இல் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், மான்ட்ரியல் மகளிர் உரிமைக் குழுவான Montreal women’s rights group ஜஸ்டிஸ் ஃபெம் Justice Femme, முஸ்லீம் பெண்களிடமிருந்து 40 க்கும் மேற்பட்ட வெறுக்கத்தக்க சம்பவங்களைப் பற்றிய தொலை பேசி அழைப்புகளைப் பெற்றதாக அறிவித்தது. தங்கள் மேல் எச்சில் துப்பியதாகவும், தங்கள் ஹிஜாப்பைக் கிழிக்க முயற்சித்ததாகவும், வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதாக புகாரளித்துள்ளார்கள்.
கியூபெக்கிற்கு வெளியே சமீபத்திய முஸ்லீம் எதிர்ப்பு தாக்குதல்களும் கவலைகளை எழுப்பியுள்ளன. கடந்த செப்டம்பரில், டொரொன்டோ பகுதியில் மசூதிக்கு வெளியே ஒர் முஸ்லீம் ஒர் வெள்ளை மேலாதிக்க சித்தாந்தத்துடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவரால் கொல்லப்பட்டார். இது கனேடிய முஸ்லீம் சமூகத்திற்குள் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.
மசோதா 21 க்கு எதிரான சட்ட வழக்கு “ஓர் கடினமான போராட்டமாக இருக்கும்” என்று மாண்ட்ரீலை தளமாகக் கொண்ட மனித உரிமை வழக்கறிஞரும், மெகில் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியருமான பேர்ல் எலியாடிஸ் கூறினார்.