இஸ்லாமிய நிலைப்பாடுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பாக்கிஸ்தானிய அரசு வழி நடத்தும் உலமா சபை, இஸ்லாமிய சட்டம் சிறுபான்மையினருக்கு வழிபாட்டுத்தளத்தை அனுமதிக்கிறது என்பதன் அடிப்படையில் சிறுபான்மை இந்துக்களுக்காக ஒரு புதிய கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய இந்துத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான லால் மல்ஹி புதன்கிழமை இத்தீர்ப்பைப் பாராட்டினார். ஆனால் தனியார் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதில் பொது நிதியை நேரடியாக செலவிட வேண்டாம் என்று உலமா சபை பரிந்துரைத்தது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தலைநகரான இஸ்லாமாபாத்தில், சுமார் 3,000 இந்துக்களும் வசிக்கின்றனர். ஆனால் இந்துக்களுக்காக செயல்படும் கோயில் எதுவும் அங்கே இல்லை.
இஸ்லாமிய கருத்தியல் சபை Council of Islamic Ideology வெளியிட்ட அறிக்கை, அரசியலமைப்பின்படி பாக்கிஸ்தானில் வாழும் இந்துக்கள் இறந்தவர்களின் இறுதி சடங்குகளைச் செய்ய உரிமை உண்டு; எனவே அதற்கான வசதிகளை இந்துக் கோவில் ஒன்றின் ஊடாகச் செய்யலாம் என்று பரிந்துரைத்தது.
“இந்த உரிமையின் அடிப்படையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்து சமூகத்திற்கு மத அறிவுறுத்தல்களின்படி இறந்தவர்களின் இறுதி சடங்குகளைச் செய்ய ஏற்ற இடம் இருக்க அனுமதிக்கப்படுகிறது.” என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.
சிறுபான்மை குழுவினருக்கு திருமணங்கள் மற்றும் மத நிகழ்வுகளை நடத்த சமூக மையங்களை உருவாக்க முடியும்; இது அவர்களின் அரசியலமைப்பு உரிமை என்றும் அச்சபை குறிப்பிடுகிறது.
பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் ஜூன் மாதம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோயில் கட்டுமானத்தை திடீரென நிறுத்தியதை அடுத்து இஸ்லாமிய கருத்தியல் கவுன்சிலின் முடிவு தற்போது வெளி வந்துள்ளது.
கோயிலை நிர்மாணிப்பது இஸ்லாத்திற்கு எதிரான நிந்தனை செயல் என்று கூறிய முஸ்லிம்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இம்ரான் கானின் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களில் சிலர் பதட்டங்களை எழுப்புவதினூடாக கோவிலின் கட்டுமானத்தை வலுக்கட்டாயமாக நிறுத்த முயற்சிப்போம் என்று அச்சுறுத்தி வந்தனர்.
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, பொதுப் பணத்தை கோவிலின் கட்டுமானத்திற்கு பயன்படுத்த முடியுமா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் இம்ரான் கான் சபைக்கு பரிந்துரைத்தார். முன்னர் இவர் கோவிலின் கட்டுமானத்திற்காக 600,000 அமெரிக்க டாலர்களை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
எவ்வாறாயினும் தற்போது வழங்கப்பட்டுள்ள சபையின் தீர்ப்பானது, இந்து சமூகம் தங்களுக்கு பொருத்தமான முறையில் பணத்தை செலவிடுவதற்கான வழிகளை திறந்து விட்டிருக்கின்றது.
சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்குவதாக உறுதியளித்த இம்ரான் கான், கோவிலின் கட்டுமானத்தை அனுமதிக்க முறையான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு:
இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு நாட்டில்¸ அதுவும் தனது ஆட்சியில் மதீனாவை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு நாட்டை படைக்கப்போகிறேன் என்று கூறிவரும் ஒருவர் பிரதமராக இருக்கும் காலத்தில், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் கோவில்களை புதிதாக நிர்மாணிக்கும் அனுமதி பற்றிய விவாதங்கள் இடம்பெறுவது எவ்வளவு அபத்தமானது. மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டுக்கு இஸ்லாமிய குடியரசு என்று பெயர் சூட்டியவர்களிடமா நியாயம் கேட்பது?