அமெரிக்காவும், இந்தியாவும் முக்கியமான செயற்கைக்கோள் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒர் இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் சக்தியை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட இரு தரப்பினருக்குமிடையான உயர்மட்ட பாதுகாப்பு உரையாடலை தொடர்ந்து இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக நீடிக்கும் சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் சீனாவுடனான மிக கடுமையான இராணுவ முறுகளில் இந்தியா உள்வாங்கப்பட்டிருக்கும் இந் நேரத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர் திங்களன்று புதுடில்லியில் இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெய்ஜிங்கின் கொரோனா வைரஸைக் கையாளுதல் முதல் ஹாங்காங்கில் ஒரு புதிய பாதுகாப்புச் சட்டம் சுமத்தப்படுவது மற்றும் தென்சீனக் கடலின் மீதான சீனாவின் லட்சியங்கள் வரை பல பிரச்சினைகள் குறித்து சீனாவுடனான உறவுகள் மோசமடைந்து வருவதால், வாஷிங்டன் சீனாவின் மீதான இராஜதந்திர அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாம்பியோவும், எஸ்பரும் இந்திய வெளியுறவு மந்திரி சுப்ரமண்யம் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், “சீன கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து விதமான அச்சுறுத்தல்களுக்கும் எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மேற்கொள்ளும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பாம்பியோ கூறினார்.
மேலும் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் மற்றும் வளமான இந்தோ-பசிபிக்கிற்கு அடித்தளமான கடல் வழிப்பயணத்திற்கனான சுதந்திரம்” போன்றவற்றிற்கு எதிரான விரோதப் போக்குகளை எங்கள் தலைவர்களும், குடிமக்களும் மிகத் தெளிவாக காண்கிறார்கள்” என்றும் கூறினார்.
இராணுவ நோக்கங்களுக்காக செயற்கைக்கோள் தரவைப் பகிர்வது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் The Basic Exchange and Cooperation Agreement (BECA), புவிசார் ஒத்துழைப்பு தொடர்பான ஏவுகணைகள் மற்றும் ஆயுத ட்ரோன்கள் செலுத்துவதற்கான முக்கியமாகக் கருதப்படும் நிலப்பரப்பு, கடல் மற்றும் வானியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கும்.
அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிய விமானங்களில் மேம்பட்ட பயணப்பாதை உதவிகள் advanced navigational aids மற்றும் வான் பயண மின்னணுவியல் avionics போன்ற தொழில்நுட்பங்களை பெற்றுக் கொள்ளவும் இது அனுமதிக்கும் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் F-18 ஜெட் விமானங்களை வாங்கவும், ரஷ்ய ஆயுதங்களில் தங்கியிருப்பதிலிருந்து விலகிக் கொள்ளவும் எஸ்பர் இந்தியாவுக்கு வலியுறுத்தி வருகிறார். 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு 21 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது, மேலும் உயர்நிலை இராணுவ உபகரணங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்காக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வாஷிங்டன் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
“இப்போது எங்கள் கவனம் அன்றாட சவால்களை எதிர்கொள்ள எங்கள் ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்; அத்துடன் எதிர்காலத்தில் ஒரு இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் இருக்க வேண்டும்” என்று எஸ்பர் திங்களன்று கூறினார்.
சீனா முன்னர் இதுபோன்ற பலதரப்பு போரியல் விளையாட்டுகள் அதனை குறிவைத்து மேற்கொள்ளப்டுகிறது என்பதனால் எதிர்த்து வந்தது. இந்தியாவும் இவ்வகையான நடவடிக்கைகள் பெய்ஜிங்கைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில் அவற்றை விரிவாக்குவதை நீண்டகாலமாக தவிர்து வந்தது.
ஆனால் இந்த கோடை காலத்தில் சீனாவுடனான எல்லை பதற்றம், அதிலே 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது பொதுமக்களின் மனநிலையை பெய்ஜிங்கிற்கு எதிராக கடுமையாக்கியுள்ளதுடன், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திங்களன்று ஒர் அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை, “அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வலுவான கூட்டுறவை” பாராட்டியது. இது “இரு நாடுகளினதும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு முக்கியமானது” என்றும் அறிவித்தது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நிதியுதவியுடன் இந்தியாவையும், அமெரிக்காவையும் எச்சரிக்கும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு பாம்பியோ அடுத்து விஜயம் செய்தார்.