பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை குறிவைத்து கூறிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வளர்ந்து வரும் புறக்கணிப்பு இயக்கத்தை நிறுத்துமாறு மத்திய கிழக்கு சர்வாதிகாரிகளுக்கு பிரெஞ்சு அதிகாரிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
சில்லறை விற்பனையாளர்கள் பிரெஞ்சு பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வதை தடை செய்யுமாறு மத்திய கிழக்கு சர்வாதிகாரிகளை வலியுறுத்துவதன் மூலம் பிரான்ஸ் தனது தயாரிப்புகளுக்கு எதிராக வளர்ந்து வரும் புறக்கணிப்பு இயக்கத்தைத் தடுக்க முயற்சிக்கிறது. புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுப்பவர்களை “தீவிரவாத சிறுபான்மையினர்” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான இம்மானுவேல் மக்ரோனின் சமீபத்திய தாக்குதல்கள் தொடர்பாக இஸ்லாமிய உலகம் முழுவதும் மக்கள் கோபத்தில் உள்ளனர். பல முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிப்பதானது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்கான அமைதியான முறை என்று கருதுவதால் புறக்கணிப்புக்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. வன்முறையற்ற இந்த பிரச்சாரத்தை பிரெஞ்சு அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர்.
நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை ஒரு பாடத்தின் போது காட்சிப்படுத்தியதற்காக ஒரு பிரெஞ்சு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டதிலிருந்து இஸ்லாத்திற்கு எதிரான பிரெஞ்சு ஜனாதிபதியின் பிரச்சாரம் அதிகரித்துள்ளது.
கொலைக்கு பதிலளிக்கும் முகமாக பிரான்ஸ் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் கார்ட்டூன்களை நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களில் காட்சிப்படுத்தியது.
மத தீவிரவாதத்தின் பிரச்சினை குறித்து பேசிய மக்ரோன், உலகம் முழுவதும் ‘இஸ்லாம் நெருக்கடியில் இருக்கிறது’ என்றும், பரந்த சமுதாயத்துடன் ஒன்றிணைய மறுப்பதன் மூலம் பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் ‘இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு’ காரணமாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம்களை குறிவைக்கும் நடவடிக்கைகளில் அரபு மொழி வகுப்புகளுக்கான தடை மற்றும் ஹலால் உணவு விற்பனைக்கான கட்டுப்பாடுகள் ஆகிய நடவடிக்கைகளும் அடங்குகின்றன.
அண்மையில் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மன் பி.எஃப்.எம் சேனலுடனான ஒர் நேர்காணலில், முஸ்லீம்களது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தயாரிப்புகளை குறிவைத்து பேசும்போது “ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் போது, ஒரே இடத்தில் ஒரு பக்கத்தில் ஓர் இனத்தவருக்குரிய உணவின் தேர்வும், இன்னொரு பக்கத்தில் இன்னுமொரு உணவுத் தேர்வும் இருப்பதை பார்க்கும் போது, எனக்கு எப்போதும் அதிர்ச்சியாகவே இருக்கிறது” என்று கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் இஸ்லாமிய ஹிஜாப்பை அணிவதற்கான ஒர் பெண்ணின் உரிமை மற்றும் சில முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைப்பதற்கான தடைகளும் உள்ளடங்கும்.
பிரான்சில் கடந்த சில ஆண்டுகளாக, ஹிஜாப் அணிகின்ற முஸ்லீம் பெற்றோர்கள் பாடசாலைச் சுற்றுலாக்களில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நடிவடிக்கைகளில் முஸ்லீம் பெண்கள் விசேடமாக அணிகின்ற ஆடைகளை விற்பனை செய்யும் கடைகள் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்படுகின்றன. மேலும் முஸ்லிம் மாணவிகளும் குட்டைப்பாவாடை அணிந்து பாடசாலைகளுக்கு வரவேண்டும் என்று பல பாடசாலைகள் வலியுறுத்துகின்றன.
முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான இந்த புதிய எதிர்பானது பல முஸ்லிம்களை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சிந்திக்கத் தூண்டியுள்ளது. இதன் விளைவாக பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள பல பெரிய சில்லறை விற்பனையாளர்கள் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.
கத்தார் நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களில் ஒருவரான அல் மீரா சூப்பர் மார்க்கெட் ஒர் அறிக்கையில் தங்கள் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிரான்சிய தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்கிறது என்று அறிவித்துள்ளது. அவ்வறிக்கை இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ஒரு நிறுவனமாக, நாங்கள் எங்கள் மதம், எங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் ஒரு பார்வைக்கு ஏற்ப செயல்படுகிறோம்; மேலும் இது எங்கள் நாட்டிற்கும், எங்கள் நம்பிக்கைக்கும் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளுக்கும் ஒத்ததாக இருக்கிறது” என்று கூறியது.
குறிப்பு:
பிரெஞ்சுப் பொருட்களை புறக்கணிப்பது என்பது முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வைக் காட்டுகின்ற ஒரு கருவியாக இருந்தாலும்¸ பிரெஞ்சு போன்ற அடாவடித்தனமாக நாட்டிற்கு 2ஆம் சுல்தான் அப்துல் ஹமீத் பாணியே தீர்வாக அமையும்¸ நபி(ஸல்) அவர்களின் கண்ணியத்தில் கை வைத்தால் கால் வைத்து நடப்பதற்கு பிரெஞ்சு தேசமே உங்களிடம் மிஞ்சாது என்று கூறுவது போன்ற அவரின் பதிலடி அன்றைய பிரெஞ்சுத் தலைமையை கதிகலங்க வைத்தது. இன்று அவ்வாறு கர்ச்சிக்க எம்மிடம் ஓர் கலீஃபா இல்லை. இன்று துருக்கியில் இருக்கும் வாய்ச்சாடல் வீரரை வைத்துக் கொண்டு பொருட் பகிஷ்கரிப்பைக்கூட உருப்படியாகச் செய்ய முடியாது என்பதே துரதிஷ்டம்.