சனிக்கிழமை நண்பகல் மேற்கு காபூலில் உள்ள ஒர் உயர் கல்வி மையத்தில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 57 பேர் காயமடைந்துள்ளனர்.
காவ்சர்-இ டேனிஷ் கல்வி மையத்திற்கு Kawsar-e Danish Educational Centre வெளியே குண்டை வெடிக்க வைத்த குண்டுவெடிப்பாளரை பாதுகாப்பு காவலர்கள் அடையாளம் கண்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்தார்.
கல்வி மையத்திற்குள் நுழைய முயற்சித்த தற்கொலை குண்டுதாரியை ஆபத்தானவர் என்று மையத்தின் காவலர்கள் அடையாளம் கண்டதால் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 26 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புக்கான பொறுப்பை தாயிஷ் பயங்கரவாத குழு டெலிகிராமில் ஒர் அறிக்கையில், ஆதாரங்கள் ஏதும் இன்றி பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் ஷியா சமூகத்தைச் சேர்ந்த பலர் வசிக்கும், கடந்த காலங்களில் தாயிஷ் போன்ற குழுக்களால் குறிவைக்கப்பட்ட மேற்கு காபூலின் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
காபூலின் அதே பகுதியில், 2018 இல் மற்றொரு கல்வி மையம் மீதான தாக்குதலில் டஜன் கணக்கான மாணவர்கள் இறந்தனர். அதே நேரத்தில் மே மாதத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஒர் மகப்பேறு பிரிவைத் தாக்கியதால், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிய அரசிற்கும், கிளர்ச்சியாளர்களுக்குமான சமாதான ஒப்பந்தமொன்றை நாடுவதற்காக கட்டாரில் கூடிவருகின்ற ஒர் முக்கியமான நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையே நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு தரப்பினரின் பிரதிநிதிகள் டோஹாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாலும், இரு தரப்பினர்களுக்கும் இடையே முறுகல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன், அமெரிக்கா ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்குவதற்கான பாதையைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், நோயாளிகள், மாணவர்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி கொசுக்களைக் கொல்வதைப் போன்று எமது உறவுகளின் உயிர்கள், எவ்வித நியாயமான காரணமும் இன்றி பறிக்கப்படுகின்றன. வெளிநாட்டு காலனித்துவ சக்திகளின் நலன்களுக்காக மாத்திரமே இங்கே சண்டைகள் இடம்பெறுகின்றன; குண்டுகள் வெடிக்கின்றன. கொல்பவனுக்கு தெரியானது ஏன் கொல்கிறேன் என்று; கொல்லப்படுபவனுக்கு தெரியாது ஏன் கொல்லப்டுகிறேன் என்று, என்ற நபிமொழி முன்னறிப்பு செய்த காலத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு, அதிகம் தேவைப்படுவது அரசியல் முதிர்ச்சி. அதுவே எமது நண்பன் யார்? எதிரி யார் என்பதை எமக்கு காட்டித்தரும். அதன் வழி நின்றே காலத்துவ சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எமது விடுதலை நோக்கி முன்னேற முடியும். அதுவரையில் எமது உறவுகள் வெடித்துச் சிதறுவதை நிறுத்த முடியாது. குறிப்பாக அதனை ஆப்கானிஸ்தானில் செய்யவே முடியாது.