இஸ்ரேல், சூடான் மற்றும் அமெரிக்கா கூட்டாக வெளிட்ட அறிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தலைநகர் கார்ட்டூமில் டஜன் கணக்கான சூடான் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரு நாடுகளும் “தங்கள் நாடுகளுக்கிடையேயான மோதலுக்கான நிலையை முடிவுக்கு கொண்டுவர” ஒப்புக் கொண்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை சூடான் அரசியல் கட்சிகள் நிராகரித்திருக்கின்றன. அதன் அதிகாரிகள் ஒப்பந்தத்திற்கு எதிராக ஒரு எதிர்க்கட்சியை உருவாக்குவோம் என்று கூறியுள்ளனர்.
சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான சக்தி(எஃப்எஃப்சி) என்ற அரசியல் கூட்டணியின் இரண்டாவது மிக முக்கியமான அங்கமான சூடான் பாப்புலர் காங்கிரஸ் கட்சியின் அறிக்கை, சூடான் மக்கள் இயல்பாக்குதல் ஒப்பந்தத்தை ஏற்பதற்கு கடமைப்படவில்லை என்று கூறுகிறது.
“எங்கள் மக்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட இரகசிய ஒப்பந்தங்களாகவே இவற்றை நாம் காண்கிறோம். எனவே அவர்கள் இந்த இயல்பாக்கல் ஒப்பந்தத்திற்கு கட்டுப்படத் தேவையில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“எங்கள் மக்கள் தங்கள் வரலாற்று ரீதியான நிலைப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு, இயல்பாக்கலை எதிர்ப்பதற்கும், பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காக தமது ஆதரவைத் தொடர்வதற்கும் ஒரு பரந்த முன்னணியில் செயல்படுவார்கள்.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல்-மஹ்தியும் இந்த அறிவிப்பைக் கண்டித்து கார்ட்டூமில் சனிக்கிழமையன்று அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மத மாநாட்டில் இருந்து விலகினார்.
நாட்டின் கடைசி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரும், நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவருமான அல்-மஹ்தி “இந்த அறிக்கை சூடான் தேசிய சட்டத்திற்கு முரணானது; மேலும் மத்திய கிழக்கில் சமாதான திட்டத்தை ஒழிப்பதற்கும், புதிய ஒரு போரைப் பற்றவைப்பதற்கும் இது பங்களிக்கிறது” என்று கூறினார்.
பிரபலமான காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமால் உமர் ஒரு தனி அறிக்கையில் சூடானின் இடைக்கால அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே இஸ்ரேலுடனான உறவை சீராக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
“இந்த இடைக்கால அரசாங்கம் பிராந்திய மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளை திருப்திப்படுத்துவதற்கு சூடானின் நிலைப்பாட்டை அபகரித்திருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
கார்ட்டூமில் பெருந்தொகையான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி “ஆக்கிரமிப்பு அலகுடன் அமைதியும் இல்லை, பேச்சுக்களும் இல்லை, நல்லிணக்கமும் இல்லை”, “நாங்கள் சரணடைய மாட்டோம், நாங்கள் எப்போதும் பாலஸ்தீனத்துடன் நிற்போம்” என்று கோஷமிட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுக்குப் பின்னர் சமீபத்தில் உறவுகளை சீராக்கிய மூன்றாவது நாடாக சூடான் ஆனதால் பாலஸ்தீன அதிகாரிகள் விசனத்துடன் பதிலளித்தனர்.
பாலஸ்தீனிய ஆணையத்தின் (பிஏ) தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இந்த ஒப்பந்தத்தை கண்டித்தார். இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஆக்கிரமிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச சட்டத்தை நாடுவதே சமாதானத்திற்கான ஒரே பாதை என்றார்.
“சமூக ஊடகங்களில் பல பாலஸ்தீனியர்கள் சூடான் மக்களின் இதயங்கள் பாலஸ்தீனிய மக்களிடன் தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் இராணுவ ஆட்சியாளர்களால் இதற்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்திருந்தனர்.