போப் பிரான்சிஸ் ஒரே பாலின இணைவுக்கு (யூனியன்) அல்லது திருமணத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் போப்பாண்டவர் ஆனார். இவ்வறிவிப்பு ஓரின சேர்க்கை புரியும் கத்தோலிக்கர்களிடமிருந்து பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மறுபக்கம் இந்த விஷயத்தில் வத்திக்கானின் உத்தியோகபூர்வ போதனையில் இருந்து விலகிய போப் பிரான்சிஸின் நிலைப்பாடு குறித்து பழமைவாதிகள் தெளிவுபடுத்தலை கோருகின்றனர்.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஃபிரான்செஸ்கோ என்ற ஆவணப்படத்தில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
போப் எல்ஜிபிடிகு (LGBTQ) என அடையாளப் படுத்தப்படுபவர்கள் குறித்து பிரதிபலித்துப் பார்த்தபோது,
“ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு குடும்பத்தில் இருக்க உரிமை உண்டு. அவர்கள் கடவுளின் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கும் ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்க உரிமை உண்டு. அதன் காரணமாக எவரும் வெளியில் தூக்கி எறியப்படலாகாது. எவரும் நிர்க்கதி நிலைக்கு வரக்கூடாது.” என்ற நிலைப்பாட்டுக்கு வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர்,
“நாங்கள் ஒரு சிவில் யூனியன் சட்டத்தை தோற்றுவிக்க வேண்டும். அதன் ஊடாக அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்படுவார்கள். அது சார்பாக நான் நிற்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
போப் பிரான்சிஸின் வாழ்க்கை குறித்த இந்த ஆவணப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மிகச் சவாலுக்குரிய சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் போப்பின் அணுகுமுறையை இந்த திரைப்படம் விவரிக்கிறது.
சிவில் யூனியன் தொடர்பான போப்பின் நேரடியான அழைப்பு அவரது முன்னோடிகளின் கண்ணோட்டத்திலிருந்தும்இ அவரது சொந்த கடந்த கால நிலைப்பாடுகளிலிருந்தும் வேறுபட்டு இருக்கின்றது.
அவர் 2010 இல் புவெனஸ் அயர்ஸின் பேராயராக பணியாற்றியபோது, ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு மாற்றாக, ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கான சிவில் யூனியன்களை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் ஒருபோதும் போப் என்ற முறையில் சிவில் யூனியனுக்கு ஆதரவாக பகிரங்கமாக வெளியே வரவில்லை. அவருக்கு முன் எந்த போப்பாண்டவரும் அவ்வாறு செய்யவும் இல்லை.
தேவாலயத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுடன் இணைப்பை உருவாக்க முயன்றுவரும் ரெவரண்ட் ஜேம்ஸ் மார்ட்டின், போப்பின் தற்போதைய கருத்துக்கள் “எல்ஜிபிடி மக்களுக்கு தேவாலயம் வழங்கும் ஆதரவில் ஒரு முக்கிய படியாகும்” என்று பாராட்டியுள்ளார்.
“சிவில் யூனியன்கள் பற்றிய போப்பின் நேர்மறையாகப் பேச்சு, அவற்றை எதிர்த்த தேவாலயங்களுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது” என்றும் மார்ட்டின் கூறியுள்ளார்.
இருப்பினும், ரோட் தீவின் பிராவிடன்ஸின் பழமைவாத பிஷப் தாமஸ் டோபின் போப்பிடமிருந்து தெளிவுபடுத்தலைக் கோருகிறார். “ஒரே பாலின யூனியன்கள் பற்றி திருச்சபையின் நீண்டகால போதனைக்கு போப்பின் அறிக்கை தெளிவாக முரண்படுகிறது” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
“வெளிப்படையான ஒழுக்கக்கேடான உறவுகளை ஏற்றுக்கொள்வதை தேவாலயத்தால் ஆதரிக்க முடியாது. ஓரினச்சேர்க்கையாளர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று கத்தோலிக்க போதனை கூறுகிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை செயல்கள் “உள்ளார்ந்த முறையில் ஒழுங்கற்றவை”. வத்திக்கானின் கோட்பாட்டு அலுவலகம் 2003 ஆம் ஆண்டு ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அது ஓரினச் சேர்க்கையாளர்களையும் தேவாலயம் மதித்து நடக்க வேண்டும் என்றாலும், “ஓரினச்சேர்க்கை நடத்தைக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது ஓரினச்சேர்க்கை யூனியங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவோ வழிவகுக்க முடியாது” என்று கூறியது.
அவ்வாறு செய்வது, “மாறுபட்ட நடத்தை” யை மன்னிப்பது மட்டுமல்லாமல், திருமணத்திற்கு சமமாக அதனை கொண்டு வருவதற்கு வத்திக்கான் கூறுகின்ற நியாயமாக அமைந்துவிடும் என்றும் அது கூறியது என்றார்.
குறிப்பு:
உலகின் அதியுச்ச அநாகரிகத்துக்கு வெளிப்படையாக அங்கீகாரம் வழக்கும் கேவலத்தையும் தற்போது வத்திக்கான் செய்திருக்கிறது. தராண்மைவாத முதலாளித்துவ உலக ஒழுங்குக்குள் மதங்கள் அனைத்தையும் தலைவணக்கச் செய்வதில் அவர்கள் வெற்றி கண்டு விட்டார்கள். இந்த விளிம்பு நிலையில் இந்த அவலட்சனமான உலகை உய்விக்க இஸ்லாமிய சித்தாந்தம் மாத்திரமே மருந்தாக மிஞ்சி இருக்கிறது. அந்த மருந்தை மாற்றீடாக முன்வைக்க முஸ்லிம்கள் துணிவு பெற வேண்டிய காலம் வந்து விட்டது.