பிரெஞ்சு அரசாங்கத்தின் ‘தீவிரவாதக்களைவு – Deradicalization’ கொள்கை, பரந்த பிரெஞ்சு சமுதாயத்தில் வெறுப்பின் விதைகளை விதைத்ததின் விளைவு, அங்கே வழக்கமான சந்தேக நபர்களாக முஸ்லிம்களை மாற்றியுள்ளது.
இந்த வெறுப்புக் கொள்கைக்கும், பிரச்சாரத்துக்கும் நேற்றைய பழிகள் ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லீம் சகோதரிகள். நேற்று, அக்டோபர் 21 அன்று பிரான்சின் குறியீடாகக் விளங்கும் ஈபிள் கோபுரத்தின் கீழுள்ள ஒரு பூங்காவில் அவர்கள் மீது கொடூரமான கத்திக்குத்துகள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண்கள். அவர்கள் தாக்குதல் நடத்தும்போது “அழுக்கான அரேபியர்களே” என்றும், “உங்கள் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள்” என்றும் கூச்சலிட்டுக் கொண்டே, அந்த சகோதரிகளின் உடலில் கத்திகளை செலுத்தி இருக்கின்றார்கள்.
இந்த சம்பவத்தை பிரெஞ்சு காவல்துறை உறுதிப்படுத்தி இருந்தாலும், இதை வெறுப்பிலான குற்றமாக (Hate Crime) பதிவு செய்யவில்லை. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட இருவருக்காக வாதாடும் சட்டத்தரணி, தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய இனவெறி அவதூறுகளின் வெளிச்சத்தில் இந்த சம்பவத்தை வெறுப்பின் அடிப்படையிலான குற்றமாக விசாரிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
சட்டத்தரணி அரிக் அலிமி “கான்ஃப்லான்ஸ்-சைன்ட்-ஹானோரின் தாக்குதலுக்குப் பின்னர், அரசியல் வர்க்கத்தால், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ‘மதச்சார்பின்மைவாதிகளால்’ பேணப்பட்டுவரும் சூழ்நிலைக்கும், இதற்கும் இருக்கின்ற தொடர்பை மறுக்க முடியாது” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான தாக்குதல்களுக்கும், அவர்களுக்கு இஸ்லாத்துடன் இருக்கின்ற தொடர்புக்கும் சம்பந்தம் உள்ளது. வழக்கின் இந்த முக்கிய அம்சத்தை காவல்துறை ஆரம்பத்தில் நிராகரித்து இருந்தாலும் கூட என்று சட்டத்தரணி அலிமி மேலும் கூறினார்.
“இவ்வகையான தாக்குதல்கள் மேலும் இடம்பெறலாம் என்ற அச்சம் நிலைக்கிறது.” என்றும் அவர் கூறினார்.
கன்ஃப்ளான்ஸ்-சைன்ட்-ஹானோரைனில் ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கொடூரமாக தலை துண்டித்துக் கொல்லப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. முஹம்மத்(ஸல்) தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களை வகுப்பில் காட்டியதற்காக அவரை ஒரு முஸ்லிம் இளைஞன் நடுவீதியில் வைத்து கொலை செய்தார். கொலையாளி அதன் பின்னர் காவர்துறையினரால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பதினைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிஸை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலரும், பிரான்சில் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டு செய்தித் தொடர்பாளருமான யாசர் லூயாட்டியைப் பொறுத்தவரை, பாரிஸ் பூங்காவில் முஸ்லீம் பெண்கள் மீதான கத்திக்குத்துச் சம்பவம் பிரெஞ்சு அரசாங்கத்தின் தீவிரவாதத்திற்கு எதிரான அவசரமானதும், அரைகுறையானதுமான செயற்பாட்டினால் நாட்டில் தோன்றியுள்ள குரோத மனோநிலையின் விளைவாகும். இது அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
“பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் ஏற்கனவே குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாக முஸ்லீம்-விரோத சூழலுக்குள் வாழ்ந்து வருகின்றனர்; இப்போது அவர்கள் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டதற்கும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது” என்றும் லூவாட்டி மேலும் கூறினார்.