செச்னிய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர், முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு எதிரான கேலிச் சித்திரத்தை பயன்படுத்திய ஒரு ஆசிரியரை, கொடூரமாக கொன்றது, பிரான்ஸில் ஏற்கனவே அரசால் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் முஸ்லீம் சிறுபான்மையினரின் நிலையை மேலும் பலகீனப்படுத்தி உள்ளது.
அந்த இளைஞனின் தனிப்பட்ட செயல், முழு முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரான கூட்டுத் தண்டனையாக மாறி வருவது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
புதன்கிழமை, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கலந்து கொண்ட ஒரு விழாவில், கொல்லப்பட்ட சாமுவேல் பாட்டி என்கின்ற ஆசிரியருக்கு ‘Legion d’Honneur’ என்கின்ற பிரான்சின் மிக உயர்ந்த பட்டத்தை சூட்டிக் கௌரவித்தார்.
அதேநேரத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சில நாட்களில், பிரான்ஸ் அரசாங்கம் முஸ்லீம் அமைப்புகளுக்கு எதிராக ஒடுக்குமுறையைத் தொடங்கியது. பினாமிக் குண்டர் குழுக்கள் மசூதிகளைத் தாக்கி அளித்தனர். இவ் வன்முறை அச்சுறுத்தலுக்குப் பின்னர் பெஜியர்ஸ் மற்றும் போர்டியாக்ஸில் உள்ள வழிபாட்டுத் தளங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் மிகப்பெரிய முஸ்லீம் சிறுபான்மையினரைக் கொண்ட பிரான்சின் அரசுக்கும் , முஸ்லிம்களுக்கும் இடையிலான பதட்டங்கள் ஆழமடைந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் அக்டோபர் 2 ம் தேதி, மக்ரோன் “இஸ்லாமிய பிரிவினைவாதம்” என்ற ஒன்றை அடையாளப்படுத்தி, அதற்கெதிராக தான் முன்வைக்கும் திட்டம் என்ற ஒன்றை அறிவித்ததும், அந்த உரையில் அவர் உலகம் முழுவதும் இஸ்லாம் “குழப்பத்தில் உள்ள” ஓர் மதம் என்று குறிப்பிட்டதும் அந்நிலை இன்னும் மோசமடையக் காரணமானது.
இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர் பாட்டியின் மரணம் ஏற்கனவே அரசாங்கம் எடுத்து வந்த நிலைப்பாட்டையும், அதன் கொள்கைகளையும் முன்னெடுப்பதற்கான ஆயுதமாக மாறி இருப்பதாக முஸ்லிம்கள் அஞ்சுகிறார்கள். இஸ்லாத்தை “பயங்கரவாதத்துடன்” வேண்டுமென்றே கோர்ப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கவலை கொண்டிருக்கின்றனர்.
பிரான்ஸைச் சேர்ந்த முஸ்லீம் ஆர்வலர் யாசர் லூவதி “முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள்” என்றும், மக்ரோன் “தனது பிரச்சாரத்திற்கு வலுவூட்டுவதற்காக இஸ்லாமியப் பீதியை பயன்படுத்துகிறார்” என்றும் அவர் நம்புகிறார்.
திங்களன்று, பிரான்ஸ் அரசாங்கம் “தீவிரவாதிகள்” என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிரான சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றுவதற்கும் தீர்மானிதுள்ளதாக அச்சுறுத்தி உள்ளது.
இந்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையில் 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் குறிவைக்கப்படுகின்றன. இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ‘ஷேய்ஹ் யாசீன் கூட்டணி – Cheikh Yassine Collective’ என்ற ஓர் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் நிறுவனர், அப்துல் ஹக்கீம் செஃப்ரியோய், கொல்லப்பட்ட ஆசிரியரை அவமதிக்கும் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தத் தடைப்பட்டியலில் இன்னும் ஆச்சரியமான பெயர்கள் உள்ளன.
முஸ்லீம்-விரோத வெறுப்புக் குற்றங்களைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பான பிரான்சில் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டு (சி.சி.ஐ.எஃப்) – Collective Against Islamophobia in France (CCIF) ஐ தடை செய்ய உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் முன்மொழிந்துள்ளார். இந்த நடவடிக்கையை 50 க்கும் மேற்பட்ட சிவில் சமூக குழுக்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்த்துள்ளனர்.
பிரெஞ்சு வானொலி நிலையமான ஐரோப்பா 1 க்கு அளித்த பேட்டியில், டர்மனின் சி.சி.ஐ.எஃப்-ஐ எமது “குடியரசின் எதிரி” என்று குறை கூறிய அவர், இது மக்ரோனின் தனிப்பட்ட வேண்டுகோளின் பேரில் அவர் கலைக்கும் பல அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் கூறினார்.
சி.சி.ஐ.எஃப் டர்மனின் கூற்றை அவதூறு என்று கண்டனம் செய்தது; அரசாங்கம் “இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது” என்றும் தடை குறித்து அகூறியது.
டர்மன், செவ்வாய்க்கிழமை மாலை பி.எஃப்.எம்.டி.வி-க்கு அளித்த பேட்டியில், சூப்பர் மார்க்கெட்டுகளில் ஹலால் மற்றும் கோஷர் உணவுகள் தட்டுக்களில் இருப்பதைக் கண்டு “அதிர்ச்சியடைந்தேன்” என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் “இது பிரான்சில் பிரிவினைவாதத்திற்கு பங்களிப்பு செய்கிறது” என்று தான் நம்புவதாகவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்தக் கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் உடனடியாக எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.
பிரான்ஸ் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் முஸ்லீம்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அச்சங்கள் பரவலாக எழுந்துள்ளன.
“இந்த நேரத்தில் பிரான்சில் நடப்பது முன்னோடியில்லாதது” என்று ஆர்வலரும் சிசிஐபியின் இணை நிறுவனருமான மார்வன் முஹம்மது கடந்த வாரம் ட்விட்டரில் எழுதினார். “முஸ்லீம் சமூகங்களை களங்கப்படுத்துதல் மற்றும் குற்றவாளியாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால், எமது அடிப்படை சுதந்திரங்கள் ஆபத்தில் உள்ளன.” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு அரசாங்கத்தின் தீவிரமான மற்றும் விரைவான எதிர்வினை, முஸ்லிம்களை குறிவைக்கும் விதத்தில் சட்டத்தை கையாள்வதற்கு அமைவாக முடியும் என்ற கடுமையான எச்சரிக்கையையும் பலர் வெளியிட்டுள்ளனர்.
பாரிஸில் நவம்பர் 2015 ஐ.எஸ்.ஐ.எல் நடத்திய தாக்குதல்களுக்கு பிரான்சின் எதிர்வினையின் சாயலை இந்த ஒடுக்குமுறை பிரதிபலிக்கின்றது. மனித உரிமைக் குழுக்கள் அத்தகைய நடவடிக்கைகள் கடுமையாக விமர்சித்தன. அவை மிகச் சொற்பமாகவே பலனைத் தந்தாலும், வெகுஜன கைதுகள், அவசரகால சட்டத்தின் கீழான அத்துமீறிய தேடுதல் நடவடிக்கைகள் போன்றன முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக உணரவைத்தன என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இதுவரை இந்த கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தாக்குதல் நடத்தியவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.