நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆயுத மோதல்கள் கடந்த மாதம் செப்டம்பர் 27 அன்று மறுபடியும் வெடித்தன, ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு தரப்பினரும் முதலில் யார் மோதலை ஆரம்பித்தது என்பதில் ஒருவரைஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் நடந்து வரும் ஆயுத மோதல்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகின்ற நிலையில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பல வெளிநாட்டு சக்திகள் ஆர்மீனியாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கியின் சிர்னாக் மாகாணத்தில் நடந்த ஒர் நிகழ்வில் பேசிய எர்டோகன், அண்மையில் நடந்த ஆர்மீனிய-அஜர்பைஜான் போர்நிறுத்தத்தை ஆர்மீனிய தரப்பு மீறியதாக குற்றம் சாட்டினார்.
“துருக்கி ஏன் அஜர்பைஜானுடன் பக்கபலமாக இருக்கிறது? அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் பற்றி உங்களுக்குத் தெரியும்: அவர்கள் யாருடைய பக்கம் இருக்கின்றனர்? அவர்கள் ஆர்மீனியாவின் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் ஆர்மீனியாவுக்கு அனைத்து வகையான ஆயுத ஆதரவையும் தருகிறார்களா? ஆம், அவர்கள் செய்கிறார்கள்” என்று துருக்கிய ஜனாதிபதி கூறினார்.
மேலும் “அஜர்பைஜான் ஆர்மீனியாவிலிருந்து தனது நிலங்களை திரும்பப் பெற போராடுகிறது” என்றும், “மோதல்ககளில், அஜர்பைஜான் இராணுவம் நிச்சயமாக வெற்றிபெறும் என்பதை நிரூபித்துள்ளது” என்றும் அவர் அழுத்தமாக கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கீழ், நாகோர்னோ-கராபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
“மேற்கத்திய நாடுகள் அஜர்பைஜானின் பக்கமாக இல்லை. மீண்டும் போர்நிறுத்தத்தை மீறியது ஆர்மீனியா தான். மேற்கு நாடுகள் இதைப் பற்றி பேசுகிறதா? ஆனால் துருக்கி அதைப் பற்றி பேசும்போது, அவர்கள் புகார் கூறுகிறார்கள்…துருக்கி ஒருபோதும் அமைதியாக இருக்கப் போவதில்லை.” என்று எர்டோகன் கூறினார்.
நெருக்கடியின் தோற்றம் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆரம்பித்தது. ஆர்மீனிய மக்களை பெறும்பான்மையாக கொண்ட நாகோர்னோ-கராபாக் பகுதி 1991 இல் அஜர்பைஜானிலிருந்து சுதந்திரம் பெற்று ஆர்மீனியாவுடன் இணைவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் இடையே 1994 வரை பெரிய ஆயுத மோதலுக்கு வழிவகுத்தது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
கடந்த வாரம், மாஸ்கோவில் 10 மணி நேர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு தரப்பினரும் அக்டோபர் 10 ஆம் தேதி நண்பகல் (உள்ளூர் நேரம்) முதல் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் இரு தரப்பினரும் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த பின்னரும் தொடர்ந்து மோதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வார இறுதியில் ஒரு புதிய போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இருந்தபோதிலும் மீண்டும் இரு தரப்பினரும் உடனடியாக ஒருவரை ஒருவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறியதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
செப்டம்பர் 27 அன்று அஜெரி படைகளுடன் சண்டை வெடித்ததில் இருந்து அவர்களின் இராணுவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. 36 இன ஆர்மீனிய பொதுமக்கள் இறந்துள்ளனர்.
அஜர்பைஜான் தனது இராணுவ உயிரிழப்புகளை வெளியிடவில்லை. 60 அஜெரி பொதுமக்கள் இதுவரை இறந்துள்ளதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று சண்டை தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் டஜன் கணக்கான பொதுமக்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட யுத்த நிறுத்தமும் முறிந்துள்ள நிலையில், முழுமையான போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடி பற்றிய அச்சங்கள் பலமாக எழுப்பியுள்ளன. அதே நேரத்தில் அஜர்பைஜானை கடுமையாக ஆதரிக்கும் துருக்கிக்கும் நேட்டோவில் உள்ள அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் இந்த மோதல் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஐ.நா. தலைவர் அன்டோனியோ குடெரெஸ் ஞாயிற்றுக்கிழமை ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானை புதிய உடன்படிக்கைக்கு “முழுமையாக கட்டுப்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார் என அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.