சவுதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், சவூதியானது, இஸ்ரேலுடனான உறவுகளை “இறுதியில் இயல்பாக்குவதற்கு” முன்னர், பாலஸ்தீன்-இஸ்ரேல் சமாதான முயற்சிகளின் முதற்கட்டமாக, இரு தரப்பினர்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவது இடம் பெற வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், “இயல்பாக்குதல் நடைபெறும் என்று நாங்கள் எப்போதுமே அறிந்திருந்தோம், ஆனால் எங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய அரசு இருக்க வேண்டும், எங்களுக்கு ஒரு பாலஸ்தீனிய-இஸ்ரேலிய சமாதான திட்டம் இருக்க வேண்டும்” என்று இளவரசர் கூறினார்.
“பாலஸ்தீனியர்களையும், இஸ்ரேலியர்களையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். முடிவில், நீடித்த அமைதியையும், நீடித்த ஸ்திரத்தன்மையையும் வழங்கக்கூடிய ஒரே விஷயம் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும்” என்று வாஷிங்டன் நிறுவனம் நடத்திய ஒரு இணைய நிகழ்வின் போது அவர் கூறினார்.
இளவரசர் பைசல், அமெரிக்க-சவுதி மூலோபாய தொடக்க உரையாடலுக்காக Inaugural US-Saudi strategic dialogue இந்த வாரம் வாஷிங்டன் சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தனது சவுதி பிரதிநிதியுடன் இணைந்து வெறியிட்ட கூட்டுயி அறிக்கையில், ரியாத் இஸ்ரேலுடனான பிரத்தியேகமான ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து பரிசீலனை செய்யும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
கடந்த மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க தரகு உடன்படிக்கைகளின் கீழ் யூத அரசை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டன. சவூதி அரேபியா உட்பட “ஐந்து அல்லது ஆறு” நாடுகள் விரைவில் தங்கள் இயல்பாக்க ஒப்பந்தங்களை உருவாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
சமீபத்திய ஒப்பந்தத்தின் கீழ், மேற்குக் கரையின் பெரிய பகுதிகளை முறையாக இணைப்பதற்கான திட்டங்களை இடைநிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இணைப்பின் அச்சுறுத்தலை நீக்குவது பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்கான “அடித்தளத்தை அமைப்பதற்கு” உதவுகிறது என்று சவுதி வெளியுறவு மந்திரி கூறினார்.
இன்னும் 2002 அரபு அமைதி முயற்சியில் சவுதி அரேபியா உறுதியுடன் இருப்பதாக இளவரசர் பைசல் முன்பு கூறியிருந்தார். இந்த சவூதி-தரகு உடன்படிக்கை, 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் முழுமையாக விலகி பாலஸ்தீனியர்களுக்கான தேசத்தை வழங்குவதினூடாகவே இஸ்ரேலினுடைய அங்கிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறது குறிப்பிடத்தக்கது.