முஹம்மத்(ஸல்) அவர்கள் தொடர்பான கேலிச்சித்திரத்தை தனது வகுப்பு மாணவர்களுக்கு பாட நேரத்தில் உபயோகித்தார் என்ற கோபத்தில் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் ஒரு பள்ளி ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளார். பட்டப் பகலில் நடுத்தெருவில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு இந்தக்கொலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை வரையில், ஒன்பது பேரை பிரெஞ்சு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
47 வயதான வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பாட்டியை (Samuel Paty) வெள்ளிக்கிழமை கொலை செய்த சில நிமிடங்களில், தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது இச்செயலின் பின்னால் கூட்டான திட்டமிடல் இருந்ததா என்பதை நிறுவ புலனாய்வாளர்கள் முயன்று வருகின்றனர். தாக்குதல்தாரி செச்னிய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என்று பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
பாட்டி இந்த மாத தொடக்கத்தில் முஹம்மத்(ஸல்) அவர்களின் கேலிச்சித்திரங்களை குடிமை வகுப்பில் (Civic Class), கருத்து சுதந்திரம் குறித்த பாடத்தை கற்பிக்கும்போது, மாணவர்களுக்கு காட்டியிருந்தார். இச்சம்பவம் பல முஸ்லிம் பெற்றோர்களை ஆத்திரமூட்டி இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எந்தவித உருவச் சித்தரிப்பும் அவதூறு என்று முஸ்லிம்கள் நம்பும் இடத்தில், அவரை மிக மோசமாக சித்தரிக்கும் கேலித்சித்திரத்தை அவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்கள் என்பது அறிந்த விடயமே.
இந்த தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது என்றும் தனது அரசாங்கம் இதற்கு தக்க பதிலளிக்கும் என்றும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
“எனது மொத்த கோபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பிரெஞ்சு குடியரசின் முதுகெலும்பான மதச்சார்பின்மை இந்த மோசமான செயலில் குறிவைக்கப்பட்டுள்ளது ” என்றும் காஸ்டெக்ஸ் மேலும் கூறினார்.
நடுத்தர வர்க்க புறநகர்ப் பகுதியான கான்ஃப்லான்ஸ்-சைன்ட்-ஹொனொரைனில் தாக்குதலுக்குப் பின்னர், உடனடியாக ஒரு மைனர் உட்பட தாக்குதல்தாரியின் நான்கு உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து பேர் ஒரே இரவில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் பாட்டி பணிபுரிந்த டு போயிஸ் டி ஆல்னே (Du Bois d’Aulne) கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்களின் பெற்றோர்களாவர்.
ஒரு வாரத்திற்கு முன்பு, தனது மகள் பாட்டியின் வகுப்பில் இருப்பதாகக் கூறிய ஒருவர், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பதிவுசெய்தார். அதில் அவர் கேலிச்சித்திரத்தை உபயோகித்த ஆசிரியரை ஒரு “குண்டர்” என்றும், இதற்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து எமது “பிள்ளைகளை குறி வைப்பதை நிறுத்துப்படி” கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் காவலில் இருப்பவர்களில் அந்த பெற்றோரும் ஒருவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர் இந்த வீடியோவைப் பார்த்தாரா என்பதும் உடனடியாகத் தெரியவில்லை.
குறிப்பு:
“இஸ்லாம் உலகில் குழப்பநிலையில் உள்ள ஒரு மதம்” என்று மக்ரோன் அண்மையில் கூறி முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்கி உரையாற்றி இருந்ததும், அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பெயரில் சார்லி ஹப்டோ பத்திரிகையில் ஏற்கனவே முஹம்மத்(ஸல்) அவர்களை தீவிரவாதியாகச் சித்தரிக்கும் ஓர் கேலிச் சித்திரத்தை மீள் பிரசுரம் செய்திருந்ததும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே ஜனவரி 2015 இல் இந்த கேலிச் சித்தர விடயத்தில் சார்லி ஹப்டோ பத்திரிகைக் காரியாலயத்துக்குள் உள்நுழைந்த இரண்டு முஸ்லிம் உடன் பிறந்த சகோதரர்கள் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தி இருந்ததும், அத்தாக்குதலிலே அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேரை பலத்த காயங்களுக்கு உட்பட்டமையும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.