சிரியா-ரஷ்யா கூட்டணி இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களைத் தாக்கி, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் Human Rights Watch (HRW) குற்றம் சாட்டியுள்ளதுடன், உயர் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை (Sanctions) விதிக்க அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 167 பக்க அறிக்கையில், நியூயார்க்கை தளமாகக் கொண்ட உரிமைகள் அமைப்பு, ஏப்ரல் 2019 மற்றும் மார்ச் 2020 க்கு இடையில் பலமுறை இட்லிப்பில் பொதுமக்களின் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியிருப்பதாகக் கூறுகிறது.
இட்லிப் வாழ்க்கையை குறிவைத்தல் (Targeting Life in Idlib) என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையில், 11 மாத தாக்குதலின் போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மீது, சிரிய மற்றும் ரஷ்ய படைகள் 46 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இந்த 46 தாக்குதல்களும் “இட்லிப் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற மொத்த இராணுவ நடவடிக்கைகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே குறிக்கின்றன”.
HRW இன், மூத்த நெருக்கடி மற்றும் மோதல் ஆராய்ச்சியாளரும் (Senior Crisis and Conflict Researcher) அறிக்கையின் இணை ஆசிரியருமான பெல்கிஸ் வில்லே கூறுகையில், இவ் அறிக்கையின் நோக்கம் சிரியா-ரஷ்யா கூட்டணியின் தனிப்பட்ட தாக்குதல்களைத் தாண்டி “தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள இராணுவ மூலோபாயத்தை ஆராய்வதற்கு” நகர்த்துவதேயாகும். இவ் அறிக்கை ஊடாக “பொதுமக்கள் வாழ்க்கையை குறிவைப்பதே இவர்களது உத்தி” என்ற முடிவுக்கு HRW வந்துள்ளது என்று கூறினார்.
பொதுமக்கள் இனி ஒரு பகுதியில் வாழ முடியாது என்ற ஒரு கட்டத்திற்கு இலக்கு வைக்கப்படுகின்றனர். இது சிரிய இராணுவம் போராடாமல் அப்பகுதியை இலகுவாக எடுத்துக் கொள்ள வழிவகுக்கிறது. எந்தவொரு இராணுவ இலக்குகளுக்குமான எந்த ஆதாரத்தையும் HRWஆல் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வில்லே கூறினார்.
அதேநேரம் சிரியாவும், ரஷ்யாவும் இட்லிப்பில் நடத்திய தாக்குதல்கள், அரசாங்க விரோத ஆயுதக் குழுக்களால், தங்கள் படைகள் மீது மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், “பயங்கரவாதத்தை” எதிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் மேற்கொள்ளப்பட்டவை என கூறுகிறது.
மூத்த சிரிய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகள் போர் சட்டங்களை மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
தாக்குதலின் போது வெடிக்கும் ஆயுதங்களை (explosive weapons) பரவலாகப் பயன்படுத்துவதால், இட்லிப்பில் உள்ள மூன்று மில்லியன் மக்களில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வடக்கு இட்லிப் முகாம்களுக்கு தப்பி ஓடியுள்ளனர்.
இராணுவத் தாக்குதலின் போது Cluster munitions, Incendiary Weapons and Barrel Bombs போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தியதை கண்டனம் செய்த HRW இவற்றை பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் பயன்படுத்தியதால், அவை குறைந்தது 1,600 பொதுமக்களைக் கொன்றுள்ளதோடு, உட்கட்டமைப்பை வசதிகளையும் சேதப்படுத்தியுள்ளது என்று கூறுகிறது.
மார்ச் 2020 அறிக்கையில், சிரியா மீதான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் Independent International Commission of Inquiry on Syria (COI), போரினால் பாதிக்கப்பட்ட நாடொன்றில் பொதுமக்களின் உட்கட்டமைப்புக்கு எதிரான சட்டவிரோத தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் ரஷ்யாவை நேரடியாக இணைத்து, அவை போர்க்குற்றங்கள் என்று கூறியது.
ஜூலை 2020 இல் மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட ஒரு அறிக்கையில், COI மீண்டும் சிரியா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொதுமக்கள் உட்கட்டமைப்பு மீது சட்டவிரோத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்காக போர்க்குற்றங்களுக்கு உட்படுத்தியது. ஆனால் இன்றுவரை, சிரியாவில் நடந்த அட்டூழியங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. போரினால் போருக்கு முந்தைய மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா பாதுகாப்புக் குழு (UN Security Council), சிரியாவின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் International Criminal Court (ICC) பரிந்துரைக்கப்படுவதை , தடுத்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் துஷ்பிரயோகங்களை மேற்கொண்ட அதன் மூத்த அதிகாரிகள் மற்றும் தளபதிகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக தடைகளை விதிக்க வேண்டும் என்று HRW கூறுகிறது.
“ஐ.நா பாதுகாப்புக் குழு முற்றிலும் தகுதியற்றது. சிரியாவில் நடந்த முறைகேடுகளுக்கு அவர்களால் தீர்வு காண முடியவில்லை. சிரியாவிற்கான ஆக்கபூர்வமான தீர்வுகளில் ஈடுபடுவதற்கான விருப்பமின்மையும் உள்ளது” என்று பெல்கிஸ் வில்லே கூறினார்.