யுஎஸ்எஸ் பெரி (USS Barry) என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் யுத்தக் கப்பல் கடந்த வியாழக்கிழமை சீனாவிற்கும், தைவானுக்கும் இடையேயான நீரிணையில் பயணித்தது. இச்செயல் தொடர்பாக சீனாவின் பிரதான நிலப்பகுதியிலுள்ள அதிகாரிகள் இது வாஷிங்டனின் “ஆத்திரமூட்டும்” செயல் எனக்கூறி கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்தனர்.
பி.எல்.ஏ (People’s Liberation Army) ஈஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் செய்தித் தொடர்பாளர், மூத்த கர்னல், ஜாங் சுன்ஹுய், பிராந்தியத்தில் சீனாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க, தமது துருப்புக்கள் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் என்று எச்சரித்தார். கிழக்கு சீனக் கடலில் அமெரிக்காவின் நடவடிக்கைகள், தைவானின் சுதந்திர இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல சமிக்ஞைகளை அனுப்பியுள்ளதாகவும் , அந்த உயர் இராணுவ அதிகாரி குற்றம் சாட்டினார்.
மேலும் “தைவான் நீரிணையில் ஆத்திரமூட்டும் மற்றும் சிக்கலை உருவாக்கும் வார்த்தைகளையும், நகர்வுகளையும் நிறுத்துமாறு, அமெரிக்க தரப்பை நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். பி.எல்.ஏ ஈஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் துருப்புக்கள், எப்போதுமே அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்; அது தேசிய இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும், தைவான் நீரிணை முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையும் உறுதியாக பாதுகாக்கும்” என்று கூறினார்.
அமெரிக்கா மீதான அவரது குற்றச்சாட்டுகள் இவ்வாறு இருந்தபோதிலும், வாஷிங்டனைப் பொருத்தவரையில் அது இப்பகுதியில் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் தனக்கு இருக்கும் கடற்வழிப் பயண சுதந்திரத்தின் (Freedom of Navigation) போர்வையில் மேற்கொண்டு வருகிறது.
தைவானுக்கும், சீனாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் கடல் வழிப்பாதையை தங்குதடையின்றி வைத்திருப்பதற்காக, கனரக இராணுவ உபகரணங்களின் காட்சிப்படுத்தல்களும், செயல்பாடுகளும் இங்கே இடம்பெற்று வருகின்றன. சமீபத்திய மாதங்களில், பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் ஆக்கிரோஷமான நகர்வுகளைத் தடுக்கும் பொருட்டு, கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் அமெரிக்கா தனது இருப்பை அதிகரித்துள்ளது.
தைவானுடனான ஒரு பெரிய ஆயுத ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்கா முயன்று வருகிறது. தைபேயின் பாதுகாப்புத் திறனை அமெரிக்கா பலப்படுத்துவதற்கு எண்ணுவதால், இந்த ஒப்பந்தத்தில் ஏழு பாரிய ஆயுத அமைப்புகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் சுமார் 7 பில்லியன் டாலர் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்களில் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். சீனாவுடனான பதட்டங்களைத் தூண்டும், இந்த அபாய ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் காங்கிரஸ், இப்போது ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் இறையாண்மையை சீர்குலைக்க, அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. சீனா தனது சொந்த நாடாகக் கருதும் தைவானுடன், அமெரிக்கா அதன் உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக அது எச்சரித்து வருகிறது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “நிலைமை எவ்வாறு அமைகிறது என்பதற்கு ஏற்ப சீனா முறையான மற்றும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று கூறினார்.
ஜி ஜின்பிங்கின் ‘ஒரு சீனா’ என்ற கொள்கையின் கீழ், தைவான் சீனாவின் பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, சீனா ஒரு நாள் அதை மீட்டெடுப்பதாகவும், தீவை சீன அரசுடன் இணைப்பதாகவும் உறுதியளித்துள்ளது. தைவானுடனான எந்தவொரு வருங்கால ஒப்பந்தத்தையும் அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும் என்றும் சீன அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தைவான் அரசை நோக்கிய தனது நிலைப்பாட்டையும், இராணுவ வலிமையையும் காண்பிப்பதற்காக, சீனாவின் விமானப்படை பலமுறை தைபியின் வான்வெளியை மீறியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் முகமாக தைவான் அதன் கடற்கரையில் பலமான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.