தலிபான் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல்கள் தொடர்ந்ததால் ஹெல்மண்ட் மாகாணத்தில் 30,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஹெல்மண்ட் பிராந்தியம் என்பது தலிபான்களின் கோட்டையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே பல நாட்களாக இடம்பெற்று வரும் கடும் சண்டையைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் படைகளை பாதுகாக்க அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதைத் தூண்டும் அளவிற்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர் கா நகரில் தலிபான் போராளிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர்.
இந்த சண்டையின் உக்கிரத்தைக் கண்டு மோட்டார் சைக்கிள்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர்வாசிகளின் அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
“5,100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லது 30,000 பேர்… இதுவரை சண்டையிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்” என்று ஹெல்மாண்டில் உள்ள அகதிகள் துறையின் இயக்குனர் சயீத் முகமது ராமின் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“சில குடும்பங்கள் எவ்வித மறைவும் இன்றி லஷ்கர் காவில் உள்ள தெருக்களில் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு வழங்குவதற்கு எங்களிடம் கூடாரங்கள் கூட இல்லை.”
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டம் தலிபான் போராளிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை “பொதுமக்களைப் பாதுகாக்க, இப்பகுதியை விட்டு வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பான பாதைகள் வழங்குவது உட்பட அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தது.
உள்ளூர்வாசி ஹெக்மத்துல்லாஹ் தனது அண்டை வீட்டிற்கு ஒரு மோட்டார் தாக்கியதால் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், அங்கு இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
“சண்டை மிகவும் தீவிரமாக இருந்தது; எனக்கு மேலதிக ஆடைகளை எடுக்க நேரம் இருக்க இல்லை. நான் எனது குடும்பத்தை மட்டுமே அழைத்துச் சென்றேன்” என்று 12 உறுப்பினர்களைக் கொண்ட தனது குடும்பத்துடன் தப்பி ஓடிய விவசாயி அத்தாவுல்லாஹ் ஆப்கான் கூறினார்.
தற்போது குறைந்தது நான்கு மாவட்டங்களில் சண்டை தொடர்கிறது.
இரு தரப்புக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர் இடம்பெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவாகும்.
பிப்ரவரியில் தலிபான் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ், இந்த குழு நகர்ப்புறங்களைத் தாக்கக் கூடாது, மேலும் வன்முறையைக் குறைக்க வேண்டும் என்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
கத்தார் தலைநகரான தோஹாவில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அடுத்த மே மாதத்திற்குள் அனைத்து வெளிநாட்டு துருப்புக்களையும் ஆப்கானிலிருந்து திரும்பிப் பெறுவதற்கு அமெரிக்கா உறுதியளித்தது.
கடந்த வாரம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் இருந்து மீதமுள்ள அமெரிக்க துருப்புக்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் தனது நாட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவதாக கூறினார்.
கடந்த மாதம் தோஹாவில் தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கத்திற்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியதிலிருந்து ஹெல்மண்ட் மீதான தலிபான் தாக்குதல் அவர்களின் முதல் பெரிய தாக்குதலாகும். ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை கட்டமைப்பை நிறுவ இரு தரப்பினரும் முரண்பட்டு வருவதால் அதிலே ஸ்தம்பித்த நிலை தெரிகிறது.