ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதன்கிழமை 2,166 புதிய குடியேற்ற வீடுகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. AFP செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், குடியேற்ற விரிவாக்கத்தில் எட்டு மாத கால இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை இஸ்ரேலுடனான உறவை சீராக்குவதாகவும், அதற்கு பதிலாக மேற்குக் கரையை இணைப்பதற்கான அதன் திட்டங்களை இஸ்ரேல் முடக்குவதாகவும் உறுதியளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் இந்த ஒப்புதல்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சட்டத்தின் கீழ், இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமாக கருதப்படுகின்றன. இத்தகைய குடியேற்றங்களை இரு அரசுத் தீர்வுக்கு முக்கிய தடையாக பாலஸ்தீனிய அதிகாரிகளும், சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதியும் கருதுகின்றனர்.
இஸ்ரேலின் இந்த செயற்பாடு இஸ்ரேல் பாலஸ்தீனிய அரசை நிராகரிப்பதை சமிக்ஞை செய்வதாகவும், பரந்த இஸ்ரேலிய-அரபு சமாதானத்தின் நம்பிக்கைக்கு ஒரு அடியாகவும் அமைந்துள்ளதாக ‘இப்போதே சமாதானம் – PEACE NOW’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது.
வியாழக்கிழமை மேலும் 2,000 வீடுகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மேற்குக் கரையின் உண்மையான இணைப்பை உறுதிப்படுத்துவதை நோக்கி நெத்தன்யாகு முழு வேகத்தில் முன்னேறி வருகிறார்” என்று புதன்கிழமை வெளிவந்த முடிவுகளுக்கு முன்னதாகவே ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனவரி மாதம் நெத்தன்யாகு வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய திட்டம், இஸ்ரேல் குடியேற்றங்கள் உட்பட மேற்குக் கரையின் பெரிய பகுதிகளை இணைப்பதற்கு அமெரிக்க வழங்கியுள்ள ஆசீர்வாதத்தை வெளிப்படுத்தி இருந்தது.
அல் ஜசீராவின் நிடா இப்ராஹிம் இடம்பெற்றுள்ள இந்த குடியேற்ற நகர்வு கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நகர்வாகக் கருதப்படுகின்றது.
“இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான வலுவான உறவுகளால் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் தைரியமாக இருப்பதாக பாலஸ்தீனியர்கள் கருதுகிறார்கள்” என்று அவர் மேற்குக் கரை நகரமான ரமல்லாவிலிருந்து பேசினார்.
“பல பாலஸ்தீனியர்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் டிரம்ப் இரண்டாவது முறையாகப் அமர மாட்டார் என்று நம்புகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார். மேலும் “ஜனநாயகக் கட்சி வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெற்றால் இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கத்தை நலிவடையச் செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.” என்றும் அவர் கூறினார்.
ஆனால் டிரம்ப், மத்திய கிழக்கு அமைதிக்கான தனது பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக வளைகுடா உடன்படிக்கைகளை பார்க்கிறார்.
அதேநேரம் செவ்வாயன்று, பாலஸ்தீனிய பிரதமர் முகமது ஷ்தாயே கருத்துத் தெரிவிக்கையில், டிரம்பின் வெற்றி அவரின் நாட்டு மக்களுக்கும், பெருமளவில் முழு உலகத்துக்கும் பேரழிவு தருவதாக அமையும் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இயல்பாக்க ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்றத் திட்டங்களை தாமதப்படுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது என்று அரபுக்கள் மற்றும் முஸ்லீம்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எமிராட்டி அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள யதார்த்தம் என்னவென்றால், இஸ்ரேலின் உத்தியோகபூர்வமான அறிவிப்புடனோ அல்லது அறிவிப்பு இல்லாமலோ பாலஸ்தீனிய பூமியின் தொடர்ச்சியான இஸ்ரேலிய திருட்டு, தினந்தோறும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.