தெற்காசியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக மக்கள் தங்கள் வெறுப்பையும், கோபத்தையும் வெளிக்காட்டுவது அதிகரித்து வருவதால், கற்பழிப்பு வழக்குகளில் மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் ஒர் திருத்தத்திற்கு பங்களாதேஷ் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் வாராந்திர கூட்டத்தில், இந்த திருத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று, அமைச்சரவை செயலாளர் காண்ட்கர் அன்வரூல் இஸ்லாம் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இணைய வழியாக நடைபெற்ற கூட்டத்தில் 2020 பெண்கள் மற்றும் குழந்தைகள் அடக்குமுறை தடுப்பு (திருத்த) மசோதாவின் வரைவுக்கு , அமைச்சர்கள் ஒப்புதல் அளித்ததாக அன்வரூல் இஸ்லாம் கூறினார்.
பாலியல் பலாத்காரம் நிரூபிக்கப்பட்ட எவருக்கும், மரண தண்டனை அல்லது “கடுமையான ஆயுள் சிறைத்தண்டனை” விதிக்கப்படும் என்று மசோதா கூறுகிறது. தற்போதுள்ள விதிமுறை பாலியல் பலாத்காரத்திற்காக அதிகபட்சம் ஆயுள் தண்டனையை விதிக்கிறது.
புதிய ஏற்பாடு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் அறிவிப்புடன் நடைமுறைக்கு வரும் என்று சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார்.
முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட பங்களாதேஷில், நாடு தழுவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று போராடியதால், அரசாங்கம் ஏற்கனவே இருந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
தொலைதூர தெற்கு கிராமமொன்றில் பெண்ணொருவர், சில ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் ஆர்பாட்டங்கள் வெடித்தன.
தலைநகர் டாக்காவிலிருந்து தென்கிழக்கில் கிட்டத்தட்ட 200 கி.மீ தொலைவில் உள்ள நோகாலியில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பந்தமான ஒர் வீடியோ ஒரு மாதத்திற்கு மேலாக இணையத்தில் வைரலாகி வந்ததால், இது தொடர்பாக எட்டு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.
நோகாலி வீடியோ வைரலாகி வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர், பங்களாதேஷ் ஆளும் கட்சி சத்ரா லீக்கின் மாணவர் பிரிவின் பல உறுப்பினர்கள், வடக்கு நகரமான சில்ஹெட்டில் ஒர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், முக்கியமாக பெண் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கடந்த வாரம் டாக்கா மற்றும் பிற நகரங்களில் வீதிகளில் இறங்கி, அதிகரித்து வரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு, “கற்பழிப்பாளர்களைத் தூக்கிலிடு” மற்றும் “கற்பழிப்பாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டாம்” என்று கூச்சலிட்ட வண்ணம் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
பாலியல் வன்முறைக்கு எதிரான நீண்ட கால போராட்டத்தில், பங்களாதேஷ் இவ்வளவு பெரிய அளவிலான போராட்டங்களை கண்டது இதுவே முதல் முறையாகும்.
மனித உரிமைகள் குழு ஐன் ஓ சலிஷ் கேந்திரா (Ain o Salish Kendra) வின் சமீபத்திய அறிக்கையில், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட 1,000 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் கூட்டு கற்பழிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 975 பேரில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.