வளைகுடா நாடுகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கத்தார் நாட்டில் உள்ள தனது இராணுவம் உதவுகிறது என்று துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் அறிவித்ததை அடுத்து, துருக்கிய இறக்குமதியை புறக்கணிக்குமாறு, சவுதி இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் மூசாத் அழைப்பு விடுத்துள்ளார்.
தி நியூ கலீஜின் கூற்றுப்படி, எர்டோகனின் கருத்துக்களை மறு ட்வீட் செய்த இளவரசர் “துருக்கிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அதை வலுப்படுத்துவதற்கும் துருக்கிய தயாரிப்புகளை முழுமையாக புறக்கணிப்பதற்கு நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
சவூதி வர்த்தக சபைகளின் தலைவர் அஜ்லான் அல்–அஜ்லான் “துருக்கியின் அனைத்து விதமான – இறக்குமதி, ஏற்றுமதி, முதலீடு மற்றும் சுற்றுலா போன்றவற்றை புறக்கணிக்க வேண்டியது ஒவ்வொரு சவுதி வர்த்தகரினதும், நுகர்வோரினதும் பொறுப்பாகும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சவுதி அரேபியா, அதன் தலைவர்கள் மற்றும் அதன் குடிமக்கள் மீதான “துருக்கிய அரசாங்கத்தின் விரோதத்திற்கு” பதிலளிக்கும் விதமாக துருக்கியை புறக்கணிப்பதற்கான தனது அழைப்பு வந்ததாக அல்–அஜ்லான் கூறினார்.
இந்த ட்வீட்டுகளுக்கு பதிலளித்த துருக்கிய பத்திரிகையாளர் கட்டேப் ஓக்லு “இந்த புறக்கணிப்பால் சவுதிக்கே இழப்பு; ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுவாக இல்லை. மேலும் மொத்த வருடாந்த துருக்கிய ஏற்றுமதிகள் சுமார் 176 பில்லியன் டாலர்கள், சவூதி அரேபியாவிற்கு ஆறு அல்லது எட்டு பில்லியன் டாலர்கள் மட்டுமே” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் இதே தரத்திற்கு குறைந்த விலையில் மாற்று வழிகளைப் பெற முடியாது என்பதால் சவுதிக்கே நஷ்டம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரியாத்துக்கும், அங்காராவுக்கும் இடையிலான பதட்டங்கள், சவுதி அரேபியாவிற்குள் துருக்கிய கப்பல்கள் நுழைவதற்கு இடையூறு விளைவித்ததினால் ஆரம்பித்தது என்று கடந்த வாரம், ப்ளூம்பெர்க் அறிவித்திருந்தது.