சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ரஷ்யாவால் தரகு செய்யப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை, அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் விரைவாக மீறிய படி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இவ்வொப்பந்தம் எவ்வளவு தூரத்திற்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவதானிகள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அனுசரனையுடன் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்த யுத்த நிறுத்தம், நாகோர்னோ-கராபாக்கில் உள்ள ஆர்மீனிய படைகளும், அஜெரி படைகளும், தங்களது போர் கைதிகளையும், போரில் இறந்தவர்களையும் கைமாற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகின்றது.
ஆனால் இன்று சனிக்கிழமை மதியம் முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில நிமிடங்களில், இரு தரப்பினரும் அதை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆர்மீனியாவின் ஒரு குடியேற்றத்திற்குள், அஜர்பைஜான் ஷெல் வீசியதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டி இருக்கிறது. அதே நேரத்தில் நாகோர்னோ-கராபாக்கில் உள்ள ஆர்மீனிய படைகள், யுத்த நிறுத்தம் தொடங்கி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அஜெரி படைகள் ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியதாக குற்றம் சாட்டினர்.
மறுபக்கத்தில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் எதிரி படைகள் அஜெரி பிரதேசத்தை நோக்கி ஷெல் வீசுவதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. இராணுவ நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டுகளை இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
சர்வதேச சட்டத்தின் கீழ், நாகோர்னோ-கராபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட ஆர்மீனிய இனத்தவர்கள், அஜர்பைஜான் ஆட்சியை நிராகரிக்கின்றனர். அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 1990 களில் ஏற்பட்ட பேரழிவு யுத்தத்திற்கு பின்பு, ஆர்மீனியாவின் ஆதரவோடு, தங்கள் சொந்த விவகாரங்களை தாங்களே வழி நடத்தி வருகின்றனர்.
1994 ஆம் ஆண்டில் சர்வதேச அளவிலான தரகு வேலைகளுடன், யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏட்டப்பட முன்னர் குறைந்தது 30,000 பேர் கொல்லப்பட்டதுடன், இலட்சக் கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், போர்நிறுத்தம் முற்றிலுமாக செயலிழந்து விடவில்லை. போரிடும் தரப்புகள் இப்போது ஒரு அரசியல் தீர்வைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று அஜெரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தெரிவித்தார்.
மத்தியஸ்தத்திற்கு உதவிய ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், 10 மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக சனிக்கிழமை அதிகாலையில் ஒர் அறிக்கையில் கூறினார்.
மேலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சமாதானத்தை செயல்படுத்த உதவும் என்றும் கூறினார்.
“யுத்த நிறுத்தத்திற்கான குறிப்பிட்ட விதிமுறைகள் இன்னும் ஒப்புக் கொள்ளப்பட வில்லை” ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் நிலையான சமாதான பேச்சுவார்த்தைகள் என்று குறிப்பிடக்கூடிய பேச்சுக்களுக்குள் நுழைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் என்று லாவ்ரோவ் கூறினார்.
ரஷ்யா மற்றும் யூரேசியா திட்டத்தின் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டின் மூத்த உறுப்பினர் பால் ஸ்ட்ரோன்ஸ்கி, நாகோர்னோ-கராபாக் ரஷ்யாவுக்கு ஒரு “சிக்கலான பிரச்சினை” என்று கூறினார். ஏற்கனவே ரஸ்யா துருக்கியுடன் சிரியா மற்றும் லிபியாவிலே முரண்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் “இது ஒரு பினாமி போராக மாறக்கூடிய ஆபத்து உள்ளது” என்றும் அவர் கூறினார்.