கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், ஈரானை உலக நிதி அமைப்பிலிருந்து முற்றாக வெளியேற்றும் ஒர் புதிய பொருளாதாரத் தடையை அறிவித்திருக்கிறது. இது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் தத்தளிக்கும் ஈரானின் பொருளாதாரத்தைச் சுற்றி தூக்குக் கயிரை இட்டிருக்கிறது.
அமெரிக்க திறைசேரி திணைக்களம் 18 முக்கிய ஈரானிய வங்கிகளை தங்களது தடுப்புப்பட்டியலில் சேர்ப்பதாக வியாழக்கிழமை அறிவித்தது. இதில் ஈரானின் நிதித்துறையை இலக்காகக் கொண்டு செயல்படும் 16 முக்கிய வங்கிகள் உள்ளடங்கும். அத்துடன் இப்பட்டியலில் சேர்கப்பட்ட ஒரு வங்கி ஈரானிய இராணுவத்துடன் இணைந்து செயல்படும் ஒர் வங்கி எனவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
திறைசேரியின் ஒர் அறிக்கையில், “ஈரானிய பொருளாதாரத்தின் நிதித் துறை ஈரானிய அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் ஒரு மேலதிக அமைப்பாக அடையாளம் கண்டுள்ளது” என்று கூறியுள்ளது.
ஈரானிய நிதித் துறையின் மீதான தடைகளை ஐரோப்பிய நாடுகள் எதிர்கிறது. ஏனெனில் வெளிநாட்டு வங்கிகள், தடுப்புப்பட்டியலில் உள்ள வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதை வாஷிங்டன் தண்டனைக்குறிய விடயமாக கருதுகிறது.
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஒர் அறிக்கையில் “இன்றைய நடவடிக்கைகள் ஈரானிய மக்களுக்கான மனிதாபிமான பரிவர்த்தனைகளை தொடர்ந்து அனுமதிக்கும்” என்று கூறினார்.
ஆனால் அமெரிக்கத் தடைகள் நீண்டகாலமாக ஈரானுக்கு முக்கிய உணவு, மருந்துகள் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளைத் தடுக்கின்றன என்று விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்ட பின்னர், ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஜரீஃப், சமீபத்திய தடைகளால் மனிதாபிமான பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என்ற முனுச்சின்னின் கூற்றுக்களை மறுத்தார்.
மேலும் “கோவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியில், உணவு மற்றும் மருந்துகளுக்கு பணம் செலுத்துவதற்கு எங்களிடம் மீதமுள்ள வழிமுறைகளையும், அமெரிக்க அரசு முடக்க விரும்புகிறது. ஈரானியர்கள் இந்த சமீபத்திய கொடுமைகளில் இருந்து மீண்டு வருவார்கள். ஆனால் முழு தேசத்தையும் பட்டினியில் போட சதி செய்வது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். எங்கள் பணத்தை தடுக்கும் குற்றவாளிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் நீதியை எதிர்கொள்வார்கள்” என்று ஜரிஃப் ட்வீட் செய்துள்ளார்.
கோவிட் 19 தொற்றுநோய் மத்திய கிழக்கில் வேறு எந்த நாட்டையும் விடவும் ஈரானை கடுமையாக தாக்கியுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, 488,000 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2700 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
கோவிட் 19 தொற்றுநோயின் போது பொருளாதாரத் தடைகளை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் மற்றும் அரசாங்கங்கள் அழைப்பு விடுத்த போதிலும், டிரம்ப் நிர்வாகம் 2018 இல் உலக வல்லரசுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய பின்னர் தொடங்கப்பட்ட அதன் அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தில் இருந்து அது பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 3 இல் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.