கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் நடவடிக்கைகளுக்காக சீனாவை நேரடியாக விமர்சித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, சீனாவை எதிர்ப்பதில் “ஒத்துழைக்க” நாற்கர உரையாடல் அல்லது “குவாட்” க்கு அழைப்பு விடுத்தார்.
டோக்கியோவில் நான்கு நாடுகளின் குழுவின் கூட்டத்தில், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரைஸ் பெய்ன், இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர், ஜப்பானிய வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மொடேகி மற்றும் திரு. பாம்பியோ ஆகியோர் குவாட் மந்திரி கூட்டத்தை வருடாந்திர நிகழ்வாக மாற்ற ஒப்புக்கொண்டனர்
திரு. பாம்பியோ “இமயமலையில்” உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (Line on Actual Control – LAC ) தோன்றியுள்ள புதிய இந்தியா-சீனா நிலைப்பாடு குறித்தும், சீனாவுடனான பிராந்திய பதட்டங்கள் குறித்தும் குறிப்பாகக் குறிப்பிடத் தவரவில்லை.
இந்த கருத்துக்கள் பெய்ஜிங்கிலிருந்து எதிர்வினையைத் தூண்டின. குவாட் ஒரு “சீன எதிர்ப்பு கூட்டணி” மற்றும் “பிரத்தியேக குழு” என்று பெய்ஜிங் அழைத்தது.
“இந்த குவாட்டில் பங்காளிகளாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) சுரண்டல், ஊழல் மற்றும் வற்புறுத்தலிலிருந்து எங்கள் மக்களையும், கூட்டாளர்களையும் பாதுகாக்க நாங்கள் ஒத்துழைப்பது முன்பை விட இப்போது மிகவும் முக்கியமானது” என்று திரு. பாம்பியோ தனது ஆரம்ப கருத்துக்களில் கூறினார்.
“நாங்கள் இதை தெற்கில், கிழக்கு சீனக் கடலில், மீகாங்கில், இமயமலையில், தைவான் நீரிணைகளில் பார்த்தோம்; இவை வெறும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் மாத்திரம்தான்” என்று அவர் மேலும் கூறினார்.
கொவிட்19 தொற்றுநோயை மூடிமறைப்பதற்காக, சி.சி.பி ஐ திரு. பாம்பியோ குற்றம் சாட்டினார். மேலும் எச்சரிக்கையை எழுப்பிய குடிமக்களை “மௌனமாக்கியதாக” அதன் “சர்வாதிகார” ஆட்சியை அவர் குற்றம் சாட்டினார்.
கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, சீன வெளியுறவு அமைச்சகம் இக்கூட்டம் குறித்து பதிலளித்தது. “மூன்றாம் தரப்பினரை குறிவைப்பதற்கு பதிலாக அல்லது அவர்களின் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு பதிலாக, ஒத்துழைப்பு என்பது, பிராந்திய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்” என்று பெய்ஜிங்கில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
அமெரிக்கா தவிர, மற்ற குவாட் உறுப்பினர்கள் யாரும் சீனாவை நேரடியாக விழித்துப் பேசவில்லை. வாஷிங்டன், டெல்லி, டோக்கியோ, கான்பெர்ராவில் இக்கூட்டத்தின் தனித்தனி வாசிப்புகளும் வெளியிடப்படவில்லை.
கூட்டம் மற்றும் மந்திரிகளின் இரவு போசனத்திற்கு பிறகு ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமைச்சர்கள் “வட கொரியா, கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் ஆகியவற்றின் பிராந்திய நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்” என்று தெரிவித்திருந்து இருந்தாலும், சீனாவைப் பற்றியோ அல்லது LAC நிலைப்பாடு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.
இந்திய வெளியுறவு மந்திரி திரு. ஜெய்சங்கர் தனது உரையில், “விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ளும் துடிப்பான மற்றும் பன்மைத்துவ ஜனநாயக நாடுகளான” குவாட் உறுப்பு நாடுகள், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதிலும், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, சர்வதேச கடற்பரப்புக்களில் கடற்பயணச் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை மதித்தல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல் ஆகியவற்றின் மீது தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
அடுத்த ஆண்டு ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக, தொற்றுநோய் போன்ற உலகளாவிய சவால்களுக்கும், ஐ.நா. சபையின் சீர்திருத்தத்திற்கும் இந்தியா “கூட்டுத் தீர்வுகளுக்கு” அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குவாட் ஒரு “நேர்மறையான நிகழ்ச்சி நிரல்” ஆக இருப்பதாகவும், இது, “அதிகாரங்களால் அல்லாது, விதிகளால் நிர்வகிக்கப்படும் பிராந்தியத்தை” நம்பும் ஜனநாயகங்களுக்கு உதவும் “இராஜதந்திர நெட்வொர்க்” என்றும் பெய்ஜிங்கைப் மறைமுகமாகச் சுட்டுவது போன்று தனது குறிப்பில் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி திருமதி பெய்ன் கூறினார்.
அதே நேரத்தில் இந்த ஆண்டின் மலபார் பயிற்சிகளில் ஆஸ்திரேலியா சேர்க்கப்படுமா என்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை; ஆனால் நவம்பர் மாதத்தில் கடற்படைப் பயிற்சிகளுக்கு முன்னர் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, நான்கு நாற்கர அமைச்சர்களும் புதிய ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகாவை சந்தித்தனர்.
திரு. ஜெய்சங்கர், திரு. சுகாவுடன் “எங்கள் சிறப்பு கூட்டணியின் இருதரப்பு மற்றும் உலகளாவிய பரிமாணங்களைப் பற்றி பேசியுள்ளேன்” என்றும் தெரிவித்தார். தனது உரையில் திரு. ஜெய்சங்கர் முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேக்கு தனது கௌரவத்தையும் தெரிவித்தார்.
மேலும் திரு. ஜெய்சங்கர் திரு. பாம்பியோவுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பருடன் இணைந்து திரு. பாம்பியோ இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள “2 + 2” கூட்டத்திற்காக டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. ஜெய்சங்கர் புதன்கிழமை டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்னர் திருமதி பெய்ன் மற்றும் திரு. மொடேகியுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.