யெமனின் எரிவாயு நிறைந்த பிராந்தியமான மஃரிபில், சவுதி ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கு விசுவாசமான போராளிகள் ஹூதி படைகளை பின்வாங்கச் செய்யும் முயற்சியில், ஹூதி ஸ்னைப்பர்களின் குழுவை இலக்காகக் கொண்டு, பாறை மலைகளை நோக்கி மோர்டர் மற்றும் இயந்திர துப்பாக்கிளால் சரமாரியாக சுட்டனர்.
சில டஜன் கிலோமீட்டர் தொலைவில், தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனிதாபிமான குழுக்களிடமிருந்து தண்ணீர், உணவு மற்றும் மருந்துக்காகக் காத்திருக்கும் காட்சிகள் பரவலாக உள்ளன. இந்நிலை ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான முயற்சிகள் ஒருப்பக்கம் இருந்தபோதிலும், ஆறு ஆண்டுகால யுத்தம் மேன்மேலும் வலுவடைந்திருப்பதையே குறிக்கிறது.
மஃரிப் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ள அல்-சோவைடா முகாமின் இயக்குனர் மொஹ்சென் முஷல்லா “இந்த முகாமில் எங்களிடம் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்; யுத்தம் இவர்களை விடாமல் பின்தொடர்வதால் இவர்கள் மூன்று முறை இடம்பெயர்ந்துள்ளனர்.” என்று கூறினார்.
மேலும் கூறுகையில் “இவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், மருத்துவமனை வசதிகள் எதுவுமில்லை. அருகிலுள்ள நகரமோ 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இவர்களுக்கு தண்ணீர் கொண்டுவருவது கூட மிகக் கடினமான காரியம் ” என்று முஷல்லா கூறினார்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கடைசி கோட்டையான மஃரிபில் பல மாதங்களாக சண்டை தீவிரமடைந்துள்ளது.
இது 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஈரான் சார்புடைய ஹூதி இயக்கத்தால் தலைநகர் சன்ஆவிடம் இருந்து அதிகாரம் பரிக்கப்பட்ட போது, சவுதி தலைமையிலான கூட்டணி யெமனுக்குள் தலையிட தூண்டியது.
உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்திய இந்த யுத்தம் பல ஆண்டுகளாக நாட்டை ஸ்தம்பித்த நிலையில் வைத்துள்ளது. ஜனாதிபதி அப்துல்-ரப்பு மன்சூர் ஹாதியின் அரசாங்கமும் சுதந்திரத்தை எதிர்பார்த்து போராடிவரும் தெற்கில் உள்ள பிரிவினைவாதிகளுடன் போரிட்டு வந்தது.
சில இராஜதந்திரிகள் மற்றும் வல்லுநர்கள் கூறுகையில், மஃரிப்பில் ஹூதியின் வெற்றியானது, யெமனின் வடக்குப் பகுதியின் முழுமையான கட்டுப்பாட்டைக் அவர்களுக்கு கொடுக்கும் என்றும் யெமன் முழுவதும் மோதலில் “சிற்றலை விளைவுகளை – ripple effects” ஏற்படுத்தக்கூடும் என்றும், ஐ.நாவின் நாடு தழுவிய யுத்த நிறுத்தத்தை பாதுகாப்பதற்கான முயற்சியை சீர்குலைக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஹூதி படைகள் சமீபத்திய மாதங்களில் மஃரிப் பிராந்தியத்தில், வடக்கு மாவட்டமான மட்கல், தெற்கு நகரமான ரஹாபா மற்றும் மேற்கிலிருந்து சர்வா என மூன்று முன்னணிகளைத் திறந்து முன்னேறி வருகின்றனர். இந்த குழு ஆறு மாவட்டங்களையும், மஃரிப் நகரத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரத்தில் உள்ள சர்வாவின் அதிகப்படியான பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இது யெமனின் மிகப்பெரிய எரிவாயு மற்றும் எண்ணெய் வயல்களுக்கான கடைசி பாதுகாப்பு அரணாகும். ஆனால் படையின் முன்னேற்றம் குறைந்ததனால் இன்னும் வெற்றி உறுதி செய்யப்படவில்லை.
“மஃரிப் என்பது இரு தரப்பினரைப் பொருத்தவரையிலும், இராணுவ நடவடிக்கையாகும். ஆனால் அது ஹூதிகளுக்கு பேச்சுவார்த்தை மேசையில் அழுத்தத்தை பிரயோகிக்கக் கூடிய ஒரு கருவியாகும்” என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு இராஜதந்திரி கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக சண்டையின் உக்கிரம் குறைந்திருந்தது. போர் இரு தரப்பினரையும் மிகவும் களைப்படையச் செய்ததால் கடந்த ஆண்டில் இருந்து ஹூதி-சவுதி மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
100,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பரந்த பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்படுமாறு யெமனுக்கான ஐ.நா சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்ததிலிருந்து வன்முறை அதிகரித்துள்ளது.
மஃரிபில் இடம் பெறும் யுத்தம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை இடம்பெயர செய்துள்ளதுடன், 2014 இல், போர் தொடங்கியதிலிருந்து நகரத்தில் குடியேறிய சுமார் 750,000 அகதிகளின் இருப்புகளை அச்சுறுத்துகிறது என்று ஐ.நா கூறுகிறது.