சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் தனது நாட்டில், ரஷ்யாவின் முக்கிய கடற்படை மற்றும் விமான தளங்கள் தொடர்ந்து இருப்பது கிளர்ச்சியாளர்களை நசுக்கி போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், பிராந்தியத்தில் மேற்கத்திய சக்திகளின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கும் உதவுகிறது என்று கூறினார்.
சிரியா போரில் மாஸ்கோ தலையிட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவின் நினைவு நாளில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் தொலைக்காட்சி சேனல் ஸ்வெஸ்டாவுக்கு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் அளித்த பேட்டியில், மாஸ்கோ தலையிட்டதனாலேயே போர் தனக்கு சாதகமாக அமைந்ததாகவும், பிராந்தியத்தில் மேற்கு நாடுகளின் இராணுவ இருப்பை எதிர்ப்பதற்கு ரஷ்யாவின் இரண்டு முக்கிய தளங்களும் மிகவும் அவசியம் என்றும் கூறினார்.
மேலும் கூறுகையில் “இந்த உலகளாவிய இராணுவ சமநிலைக்கு ரஷ்யாவின் பங்கு இன்றியமையாதது. இது இராணுவ தளங்களின் தேவைகளை அதிகரிக்கிறது. இத்தளங்களால் நாங்கள் பயனடைகிறோம்” என்றும் “சிரியாவிற்கும், பிராந்தியத்தில் வாஷிங்டனின் ஆதிக்கத்தை எதிர்பதற்கும், இத்தளங்களின் இருப்பு மிகவும் அவசியமானது என்று தமது இராணுவத் தளபதிகள் கருதுகின்றனர்” என்றும் கூறினார்.
அசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களைத் ஹமிமிம் தளத்திலிருந்து மேற்கொள்கிறது. மேலும் சிரியாவில் உள்ள டார்டஸ் கடற்படை தளத்தையும் அதனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது சோவியத் ஒன்றியத்தின் காலத்திலிருந்து மத்தியதரைக் கடலில் பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரே ஒரு கடற்படை தளம் அதுவாகும்.
ரஷ்யா அசாத்திற்கு ஆதரவாக சிரியாவில் 2015 இல் வான்வழித் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது. டமாஸ்கஸில் உள்ள அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தைத் ஏற்படுத்தியதிலிருந்து 2017 இல் அதன் நிரந்தர இராணுவ இருப்பை உறுதிப்படுத்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அரசாங்கம் வெளியிட்ட ஒர் ஆவணம், ஹமிமில் ரஷ்யா தனது இராணுவ விமான தளத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான கூடுதல் நிலம் மற்றும் கடலோர பிரதேசங்களை வழங்க சிரிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதைக் சுட்டிக் காட்டுகிறது.
மாஸ்கோவின் இராணுவத் தலையீட்டிற்கு முன்னர் தனது இராணுவம், வாஷிங்டன், பிற மேற்கத்திய சக்திகள், சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுளால் நேரடியாக நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்ட ஆயுதமேந்திய குழுக்களுக்கு தமது முக்கிய நகரங்களை இழந்து ஒர் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்ததாக அசாத் கூறினார்.
ஒரு தசாப்த காலமாக நடந்து வரும் மோதலில் அசாத் இழந்த பெரும்பாலான பகுதிகளை மாஸ்கோவின் பாரிய வான்வழி சக்தியாலும், ஈரானிய ஆதரவுடைய போராளிகளின் ஆதரவாலும் மீண்டும் பெற முடிந்தது.
வாஷிங்டன் மற்றும் சிரிய அரசாங்கத்திற்கு எதிரான ஆதரவாளர்கள் கூறுகையில், ரஷ்யாவும், சிரியாவும் அவர்களுக்கு எதிரானவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சரமாரியாக குண்டுகளை வீசியது, போர்க்குற்றங்களுக்கும், மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர்.
மாஸ்கோவும், டமாஸ்கஸும், கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது என்ற குற்றச்சாட்டை மறுப்பதோடு, இஸ்லாமிய போராளிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
குறிப்பு:
சிரியாவிலும், பிராந்தியத்திலும் அமெரிக்க நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கும், அதற்கு தடைகளாக இருக்கின்ற நெருக்கடிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், குறிப்பாக இஸ்லாமிய அரசியல் நிகழ்ச்சி மேலோங்க விடாது தடுக்கவும், ரஸ்யா, ஈரான், துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகளை இதுவரை வாசிங்டன் பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மையாகும். இப்பிராந்திய அரசியல் சமநிலை பற்றிய ஆழமான புரிதலும், பூகோள அரசியல் பற்றிய முதிர்ச்சியும் உள்ள ஒருவருக்கு இக்கருத்தின் யதார்த்தம் தெளிவாகப் புலப்படும்.