சூடானின் அரசாங்கமும், கிளர்ச்சித் தலைவர்களும் பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த யுத்தத்தை, முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முக்கிய சமாதான ஒப்பந்தத்தில், இன்று சனிக்கிழமை கையெழுத்திட்டனர்.
சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஒரு வருடம் பூர்தியான நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு கருத்து தெரிவித்த தெற்கு சூடான் மத்தியஸ்தக் குழுவின் தலைவர் டட் கட்லூக், “இன்று நாங்கள் ஒரு சமாதான உடன்பாட்டை எட்டியுள்ளோம்; நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்; நாங்கள் பணியை முடித்து விட்டோம்” என்று கூறினார்.
சாட், கத்தார், எகிப்து, ஆப்பிரிக்க யூனியன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றன இந்த ஒப்பந்தத்தின் உத்தரவாத தாரர்களாக தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சூடான் புரட்சிகர முன்னணியின் – Sudanese Revolutionary Front (SRF) தலைவர், மினி ஆர்கோ மினாவி “இந்த நாள் சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் ஒரு முக்கிய நாளாகும்; இதன் பொருள் சூடானின் வெவ்வேறு மூலைகளிலும், சூடானுக்கு வெளியேயும் வாழ்கின்ற சூடானிய மக்கள் துன்பப்படுவதை இது முடிவுக்குக் கொண்டு வருகிறது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “சூடானின் பொருளாதார நிலை தொடர்பான சவால் ஓர் வெளிப்படையான சவாலாகும்; அத்துடன் பலவீனமான அரசியல் நிலைமையும் ஒரு சவாலாகும்; ஆனால் நாங்கள் விரும்பும் அமைதியை நாங்கள் அடைவோம் என்று நான் நம்புகிறேன்; இதற்கு சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் “ என்று கூறினார்.
பிரபலமான ஜனநாயக சார்பு எழுச்சிக்கு மத்தியில் நீண்டகாலமாக பதவியில் இருந்த தலைவர் ஒமர் அல்-பஷீரை கடந்த ஆண்டு பதவியிலிருந்து தூக்கியெறிந்ததிலிருந்து சூடானின் உள் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது தற்போதுள்ள இடைக்கால அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருந்து வந்தது.
தற்போது வரை அமைதிப் பேச்சுவார்த்தைகள் தென் சூடானால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு வந்தது. அதன் தலைவர்கள் 2011 ல் சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பல தசாப்தங்களாக கார்ட்டூமிற்கு எதிராக கிளர்ச்சியாளர்களாக போராடியவர்கள்.
எவ்வாறாயினும், இரண்டு சக்தி வாய்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் – அப்துல் வாஹித் முகமது அல்-நூர் தலைமையிலான டார்பூரை தளமாகக் கொண்ட சூடான் விடுதலை இயக்கம் – Sudan Liberation Movement (SLM) மற்றும் அப்துல் அஸீஸ் அல்-ஹிலு தலைமையிலான சூடான் மக்கள் விடுதலை இயக்கம்-(வடக்கு) – Sudan People’s Liberation Movement-North (SPLM-N) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இது சமாதான முன்னெடுப்புகளுக்கு முன்னாலுள்ள சவால்கள இன்னும் மீதம் இருக்கின்றன என்பதையே பிரதிபலிக்கிறது.
சூடானின் தலைநகரான கார்ட்டூமில் இருந்து அறிக்கை அளிக்கும் அல் ஜசீராவின் ஹிபா மோர்கன், ஜூபாவில் கையெழுத்திட்ட ஆவணம் “இறுதி ஒப்பந்தம்” என்று அழைக்கப்பட்டாலும், இரண்டு முக்கிய குழுக்கள் அதிலே உள்ளடக்கப்படாததால் இந்த ஒப்பந்தத்தை முழுமையானது என்று கூற முடியாது உள்ளது என்று பொருள் கொள்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் “பாதுகாப்பு ஏற்பாட்டை செயல்படுத்துவதே மிகப்பெரிய கரிசனைக்குரிய விடயமாகும். ஏனெனில் பிளவுபட்ட குழுக்கள் பற்றிய சிக்கல்கள் உள்ளன” என்று கூறினார்.
சர்வதேச நெருக்கடி குழும சிந்தனைக் குழுவின்( International Crisis Group think-tank) மூத்த சூடான் ஆய்வாளர் ஜோனாஸ் ஹார்னர், “எஸ்.எல்.எம் மற்றும் எஸ்.பி.எல்.எம்-என் ஆகியவைதான் “சூடானில் காத்திரமான இராணுவத் திறனைக் கொண்ட ஆயுதக் குழுக்களாகும்; அவைதான் குறிப்பிடத்தக்க தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என்று கூறினார்.
கடந்த மாதம் அப்துல் அஸீஸ் அல்-ஹிலு, மதத்தையும், அரசாங்கத்தையும் பிரிக்கும் வகையில் (Secularism) சூடானின் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் வரை, அரசாங்கத்துடன் ஒரு தனியான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டமை கவனத்தில் கொள்ளத்தக்கது.