பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை வெளியி;ட்ட ஒரு திட்டம் பிரதானமாக முஸ்லிம்களைக் குறிவைத்திருந்தது. உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பற்றி பெரிதாக தம்பட்டம் அடிக்கும் பிரான்ஸில் மதச் சிறுபான்மையினரான முஸ்லிம்களை மென்மேலும் நிந்திக்கும் விதத்தில் இந்த திட்டம் அமைந்திருக்கிறது. இத்திட்டத்தை வெளியிட்டு உரையாட்டிய மக்ரோன் தனது உரையில் இஸ்லாத்தை, உலகெங்கிலும் “குழப்பத்தில்” உள்ள ஒரு மதமாக விவரித்தார்.
பிரான்சில் கல்வி மற்றும் பொதுத் துறைகளில் இருந்து மதத்தை முற்றாக வெளியேற்றுவதற்கான ஒரு புதிய உந்துதலில் “சலுகைகள் எதுவும் இல்லை” என்று வலியுறுத்திய மக்ரோன், அதே வேளையில் நிகாப் அல்லது ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்களை குறிப்பாக பாதிக்கும் மதச் சின்னங்களுக்கு, நாட்டில் ஏற்கனவே இருந்த தடை நீடிக்கப்படுவதுடன், அது பொதுச் சேவைகளை வழங்கும் தனியார் துறை ஊழியர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
உள்ளூர் அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சலுகைகளை வழங்கும் இடத்தில் அதற்குள் தலையீடு செய்யும் அதிகாரமும், அரசுக்கு இருக்கும் என்று கூறிய அவர், பாடசாலைச் சிற்றூண்டிச்சாலைகளில் “மத ரீதியான மெனுக்கள்” அல்லது நீச்சல் தடாகங்களுக்கு நுழைவாயில்கள் பால் ரீதியாக பிரித்தல் போன்ற சில உதாரணங்களையும் மேற்கோள் காட்டினார்.
“இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் “குழப்பத்தில்” இருக்கும் ஒரு மதம்; இதை நம் நாட்டில் மட்டும் நாம் பார்க்கவில்லை” என்று அவர் கூறியிருப்பது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பலரது விமர்சனங்களையும் சம்பாதித்துக் கொண்டது. பிரான்சில் தேவாலயத்தையும் அரசையும் அதிகாரப்பூர்வமாக பிரிக்கும் (Secularism – மதச்சார்பின்மை) 1905 சட்டத்தை வலுப்படுத்த, டிசம்பர் மாதம் அரசாங்கம் புதியதொரு மசோதாவை முன்வைப்பதாகவும் அவர் அறிவித்தார்.
2017 இல் மக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து, பிரான்ஸ் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் சுதந்திரம் குறைந்த நாடாக மாறியுள்ளது. “நாங்கள் மக்ரோனின் முதலாவது பதவிக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களைப் பற்றியும், முஸ்லீம் வழிபாட்டுத் தளங்களுக்கு நிதியளிப்பதைப் பற்றியும், ஒரே மாதிரியான கேள்விகளே உள்ளன” என்று பிரான்சில் இஸ்லாமிய இஸ்லாமோ ஃபோபியாக்கு எதிரான கூட்டு இயக்குனர் ஜவாத் பாச்சரே கூறினார்.
இஸ்லாம் குறித்த எழுப்பப்படுகின்ற கவலைகள் களங்கப்படுத்த கூடிய வகையில் அமைந்துள்ளன என்று பல பிரெஞ்சு முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஹிஜாப் அணிந்த இளம் பெண்கள் பாராளுமன்றக் குழுவின் முன் ஆஜராவது அல்லது அதனை அணிந்த வண்ணம் தொலைக்காட்சியில் சமையல் குறிப்புகள் வழங்குவது போன்ற சமீபத்திய தேவையறற் சர்ச்சையை உருவாக்கிய விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தாலும் நிராகரிக்கப்பட்ட தாயிஷ்(Daesh) போன்ற பயங்கரவாத குழுக்களின் சில தாக்குதல்களை அடுத்து, இஸ்லாத்தை ஒரு “உயிர்கொல்லிச் சித்தாந்தம்” என்று மக்ரோன் வர்ணித்தது அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான மக்கள் இத்தகைய தாக்குதல்களுடன் உடன்படவில்லை என்பதையும், அவற்றை தயவு தாட்சண்யம் இன்றி வன்மையாகக் கண்டிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டும், மக்ரோன் முஸ்லிம்களைக் களங்கப்படுத்தும் இவ்வகையான அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.
முஸ்லிம் பெண்களில் சிலரால் அணியப்படும் நிகாப்(கண்கள் தவிர்ந்த முகத்தை மூடுதல்) மற்றும் புர்கா போன்ற ஆடைகளை 2010 ஆம் ஆண்டில் பொது இடங்களில் தடைசெய்த முதல் நாடு பிரான்ஸ் ஆகும். 2014 ஆம் ஆண்டில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இத் தடையை ஏற்றுக்கொண்டாலும், இச்சட்டம் மிகையான ஒன்றாக தோற்றம் பெற்று ஒரு தரப்பினருக்கு எதிரான ஸ்டீரியோடைப்பிங்ஙை ஊக்குவிக்கும் என்று கூறியது.
ரிவியராவைச் சுற்றியுள்ள உள்ளாச இடங்களில் முஸ்லீம் பெண்களுக்கான புர்கினி என்று அழைக்கப்படும் மொத்த உடலையும் மறைக்கக்கூடிய முழு நீள நீச்சலுடை மீதான தடைகள் தொடர்பாகவும் பிரான்சு பேசுபொருளானது. அப்போதிருந்து, புர்கினியை தடை செய்ய மேலும் சில நகராட்சி அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் முஸ்லிம்களை மேலும் களங்கப்படுத்த வழிவகுக்கும் என்று கூறி பிரெஞ்சு முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பாவில் மிகப்பெரிய முஸ்லீம் சிறுபான்மையினரை பிரான்ஸ் கொண்டுள்ளது. பிரான்ஸின் 67 மில்லியன் மக்கள் தொகையில் அது 5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பாவில் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புணர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. தீவிர வலதுசாரி தீவிரவாதம் மற்றும் இனவெறி ஆகியவை மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமாபோபியாவை (இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை) தூண்டி விடுகின்றன. அங்கு தாயிஷ் மற்றும் அல்-கைதாவின் பயங்கரவாத தாக்குதல்களும், ஐரோப்பாவை நோக்கிய முஸ்லிம்களின் புலம்பெயர்வுகளும் இத்தகைய கருத்துக்களை நியாயப்படுத்த சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 2007 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் மசூதிகள் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அர்ராஸுக்கு அருகிலுள்ள ஒரு தேசிய இராணுவ கல்லறையில் அமைந்துள்ள 148 முஸ்லீம் கப்ருகளின் பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் இஸ்லாமிய விரோதக் குழப்பங்களால் தேசப்படுத்தப்பட்டதுடன், அவற்றில் ஒன்றின் மீது பன்றியின் தலையும் வைக்கப்பட்டது. ஜூன் 2019 இல், வடமேற்கு நகரமான ப்ரெஸ்டில் ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிதாரி ஓர் இமாமைக் காயப்படுத்தினார். ஆனால் பிரஞ்சு போலீசார் அச்செயலை ஒரு பயங்கரவாதச் செயலாகப் பதிவு செய்வதை நிராகரித்தனர்.