செய்தி:
பிரித்தானியாவில் “பாடசாலைகளில் முதலாளித்துவத்தின் அழிவுக்கு அழைப்பு விடுக்கும் கற்பித்தல் வளங்களை (Teaching Resources) பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது தீவிர அரசியல் நிலைப்பாடாகவும், விமர்சனங்களைத் தூண்டுகின்ற விடயமாகவும் கருதப்படுகின்றது.”
இந்த புதிய வழிகாட்டுதல், பொருளாதார அமைப்பை மாற்ற விரும்புவர்களை, இனவெறி, அன்டி செமிட்டிசம் (யூதர்களுக்கு எதிரான நிலைப்பாடு), வன்முறை மற்றும் ஜனநாயகத்தை தூக்கியெறிய ஒப்புதல் அளித்தல் போன்ற நிலைப்பாடுகளுக்கு இணையாக ஒப்பிடுகிறது.
கொரோனா தொற்று நோயினால் அதிகரித்து வரும் நெருக்கடிகள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பெருகிவரும் இடைவெளிகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக – பூகோள காலநிலை மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பேராபத்து போன்ற பாரிய பிரச்சினைகளை முதலாளித்துவத்தால் எதிர்கொள்ள முடியுமா? என்ற பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் சூழலில் இப்புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருகிறது.
பாடசாலைகளுக்கான வழிகாட்டுதலில் “பாடசாலைகள் எந்தவொரு சூழ்நிலையிலும், தீவிர அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள அமைப்புகளால் உருவாக்கப்படும், வளங்களைப் பயன்படுத்தக்கூடாது” என்று கூறுகிறது. “தீவிர அரசியல் நிலைப்பாடுகளின் சில எடுத்துக்காட்டுகளாக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கி எறிய வேண்டும், சுதந்திரமான நியாயமான தேர்தல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், மதம் மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்கள் “ என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
அம்னஸ்டி இன்டர்நேஷனலின் கொள்கை மற்றும் அரசாங்க விவகாரங்களின் தலைவரான ஆலன் ஹோகார்ட் “ஒப்பீட்டளவில் குறுகிய காலமாக நடைமுறையில் இருக்கும் முதலாளித்துவம் போன்ற பொருளாதார மாதிரியை கேள்விக்குள்ளாக்கும் வளங்களை தடை செய்வது ஒரு படி அதிகமான நிலைப்பாடாகும்.” என்றார். “நடைமுறையில் உள்ளதைத் தவிர, வேறு சமூக-பொருளாதார அமைப்புகளின் கருத்துக்களை கருத்தில் கொள்வதை, ‘சட்டவிரோதமானது’ என்று பரிந்துரைப்பதுதான் இங்குள்ள ஒரேயொரு தீவிரமான நிலைப்பாடாகும்” என்றும் மேலும் அவர் கூறினார்.
மொமெண்டம் நிலையத்தின் இணைத் தலைவரான ஆண்ட்ரூ ஸ்கேட்டர்குட் கூறுகையில், “டோரிகள் (கன்சர்வேடிவ் கட்சியினர்) அவர்களின் பில்லியனர் தோழர்களை தொழிலாள வர்க்கத்தை தாரைவார்த்து பணக்காரர்களாக மாற்றும் பொருளாதார அமைப்பை மக்கள் விமர்சிக்கும் போது, அவர்களின் அந்த உரிமையைத் தடை செய்து மக்களிடமிருந்து தப்பித்து கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்” என்று கூறினார்.
இன்டிபென்டண்ட்: https://www.independent.co.uk/news/uk/politics/capitalism-teaching-school-racism-violence-democracy-gavin-williamson-b625480.html
கருத்து:
பிறர் என்று வருகின்றபோது, உலகெங்கிலுமுள்ள மதச்சார்பற்ற முதலாளித்துவவாதிகள் (Secular Capitalist) பேச்சுச் சுதந்திரம் மற்றும் சிந்தனைச் சுதந்திரம் போன்றவற்றின் மதிப்புகளை பாசாங்குத்தனமாகவே ஊக்குவிக்கிறார்கள; ஆனால் அவர்களின் சொந்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும் போது அவற்றை அரிதாகவே பொறுத்துக் கொள்கிறார்கள். வெளிப்படையாக ஊழல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு, ஏன் தொடர்ந்து மேலோங்க வேண்டும் என்பதற்கு எந்தவொரு வலுவான நியாயத்தையும் அவர்கள் முன்வைக்க முடியாததால், மீண்டும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தங்கள் அறிவுசார் அடித்தளத்தின் வெறுமையை இவ்வகையான செயல்களின் ஊடாக தாங்களாகவே அம்பலப்படுத்துகிறார்கள்.
முதலாளித்துவத்தின் தோல்வியை மறைக்க முனைகின்றவர்கள், குறிப்பாக அரசாங்கங்களையும், அதனைச் சுற்றியும் தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர்கள், எவ்வாறு வெறும் கற்களை கடவுளாக நம்பும் சிலைவணங்கிகள் தமது கடவுள்களுக்காக குருட்டுத்தனமாக வாதாடுவார்களோ அதனைப் போன்று, தமது மதச்சார்பற்ற நமபிக்கைகளையும், அதன் விளைவான சுதந்திரத்தையும் மூடத்தனமாக பாதுகாப்பதற்கு முனைந்து வருகின்றார்கள். எவ்வாறு சிலை வணங்கிகளின் சிலைகளால் தம்மை தற்காத்துக் கொள்ள முடியாதோ, அதேபோல் மதச்சார்பற்ற நம்பிக்கையாலும் அதன் சொந்த இருப்பை நியாயப்படுத்த முடியாது போயுள்ளது. தமது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏன் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்த அவர்களால் அறிவார்ந்த வாதங்களை எதனையும் முன்வைக்க முடியவில்லை.
மிகச்சிக்கலான புதியதொரு தொற்றுநோயினால் உலகம் செய்வதறியாது திகைத்து நிற்கின்ற நிலையில், பொருத்தமான தீர்வுகளுக்காக முதலாளித்துவத்தின் பக்கம் திரும்ப முடியாது என்று அரசாங்கங்களும், அவற்றின் ஆதரவாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். எனினும் எதையாவது பணயம் வைத்து தமது சித்தாந்தத்தின் செல்வாக்கை உலகில் பாதுகாத்து விட வேண்டும் என்பதற்காக பல உண்மைகளை மூடி மறைத்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்து வருகின்றார்கள். அவர்கள் பின்பற்றிய சித்தாந்தமும், அதன் உலகளாவிய ஒழுங்கும் மிக நிதர்சனமாகத் தோல்வியைத் தழுவி இருக்கின்ற நிலையில் அதனை முரட்டுத்தனமாக பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் அவர்கள் எடுக்கின்ற பிரயத்தனங்கள் அவர்களின் சித்தாந்தத்தின் அடிப்படை பலகீனத்தையும், அதன் விளைவான சுதந்திரம், ஜனநாயம் போன்ற எண்ணக்கருக்களின் தோல்வியையும் பறைசாட்டுகின்றன.
மேற்கு நாடுகளில், அறிவார்ந்த ரீதியிலான விவாதங்கள் பல தசாப்தங்களாக வலுவிழந்து வந்தன. ஆனால் இப்போது அது முற்றிலுமாக இறந்து புதைக்கப்பட்டிருப்பதையே நாம் காண்கிறோம். இனி அங்கே கருத்துகள் கருத்துகளாலோ, அல்லது வாதங்கள், எதிர் வாதங்களாலோ எதிர்கொள்ளப்படாது. அதற்கு பதிலாக யாராவது மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் கருத்துக்கள் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், குற்றமாக்கப்பட்டும் முடக்கப்படும் நிலை தோன்றியிருக்கிறது. மாற்றம் என்ற ஒன்றிற்கே முதலாளித்துவ மேட்டுக்குடி வர்க்கம் மிகவும் அச்சம் கொள்கிறது.
இந்நிலையே அவர்களை இஸ்லாத்தை பிரதானமாக குறி வைத்துத் தாக்குவதற்கு காரணமாக இருக்கிறது. இஸ்லாத்தின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் மக்களிடமிருந்து மறைக்கவும், மலினப்படுத்தவும், தடை செய்யவும் அவர்கள் அதனாலேயே முயற்சிக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தால் மாத்திரமே அநீதியான சடவாத முதலாளித்துவ ஒழுங்குக்கு பகரமாக, நீதிக்கான புதிய நம்பிக்கையையும், காத்திரமான மாற்றத்தையும் வழங்க முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.