செய்தி:
துருக்கி ஜனாதிபதியும், நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் (AK Party) தலைவருமான ரெசெப் தயிப் எர்டோகன், வீடியோ மாநாடாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 140ஆவது ஏ.கே கட்சியின் மாகாண தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்களை நோக்கி உரையாற்றினார்.
அவ்வுரையில் எர்டோகன் பின்வருமாறு கூறினார்:
“ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தில் முற்றிலுமாக நொறுங்கியிருந்தாலும், நாம் ஒவ்வொரு துறையிலும் நம் தேசத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்வோம். எங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்காக ஒரே போராட்டத்தை நடத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதன் பெயர் துருக்கி மாதிரி (Turkey Model). மனித விழுமியங்களும், நீதியான அபிவிருத்தி இலக்குகளும், உரிமையும், நீதியும் வேரூன்றிய அத்தகையதொரு உண்மையுள்ள ஜனநாயகத்தை வேறு எங்கும் நீங்கள் காண முடியாது. இன்ஷா அல்லாஹ், இந்த தரிசனத்துக்கு ஏற்ப எங்கள் 2053 மாதிரியை உருவாக்குவோம்.”
(அனடோலு ஏஜென்சி – 17.09.2020)
கருத்து:
“மலை ஒரு எலியை வெளிப்படுத்தியுள்ளது” என்பது, துருக்கியின் ஒரு பிரபலமான பழமொழி.
இதன் பொருள் என்னவென்றால், ஒருவரிடமிருந்து பெரிய விஷயங்கள் எதிர்பார்க்கப்படும் போது, அவரோ ஒரு சிறிய துரும்புடன் வெளியே வந்தால், அனைவருக்கும் ஏற்படும் ஏமாற்றத்தை சுட்டுவதற்கு, இந்தப் பழமொழியை துருக்கியில் பரவலாகப் பயன்படுத்துவார்கள்.
உண்மையில், இந்த பழமொழி ஜனாதிபதி எர்டோகனின் அரசியல் சுயவிவரத்துடன்(Profile) மிகச் சரியாகப் பொருந்திப் போகிறது.
ஏனென்றால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் இருக்கும் எர்டோகன், இஸ்லாமிய வாழ்வொன்றைப் பெற்றுத்தருவார் என்ற எதிர்பார்ப்புடன், அவரை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கு, சரியான ஜனநாயகத்தை வழங்கப்போகிறாராம், அதுவும் அதனை 2053 ஆம் ஆண்டில்தான் அடையப் போகிறாராம் என்ற கருத்து எவ்வளவு பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும்.
அதுவும் அவரது 2053ஆம் ஆண்டின் ஜனநாயகக் கனவை அவர் வெளிப்படுத்தி இருக்கும் காலகட்டம் முக்கியமானது. அவர் இதனை எந்தக் காலகட்டத்தில் சொல்கிறார் என்றால், முழு நாட்டினதும் அனைத்து விதமான நிறுவனங்களையும், ஊடகங்களையும் தன் கையில் வைத்திருக்கும் நிலையிலும், கொன்ஸ்தாந்துநோபிலின் வெற்றியை குறிக்கும் ஹாகியா சோபியாவைக்கூட, மீண்டும் மஸ்ஜிதாக முஸ்லிம்களுக்காக திறந்துவிடும் அதிகாரத்தை பெற்ற நிலையிலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.
ஏ.கே. கட்சி இதுவரை காட்சிப்படுத்தி வந்த (பெயரளவிலான) இஸ்லாமிய முறைமை ஒன்றுக்குள்ளாவது 2023 ஆம் ஆண்டுக்குள் தம்மை அழைத்துச் செல்வார்கள் என்று நம்பியிருந்த துருக்கிய முஸ்லிம்கள், தற்போது அதன் தலைவர் சொல்கின்ற தூய்மையான ஜனநாயகத்துக்காக மேலும் மூன்று தசாப்தங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. அதற்கு துருக்கிய மாதிரி (Turkey Model) என்ற கவர்ச்சியான, தேசிய உணர்வைத் தூண்டும் பெயர் வேறு சூட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில், எர்டோகனின் நகர்வுகளை தொலைநோக்குடன் இன்று வரை உன்னிப்பாகப் கவனித்து வருகின்ற எவருக்கும், அவரின் அறிவிப்பு ஓர் ஆச்சரியமான விடயமல்லாது போனாலும்¸ பெரும்பாலான முஸ்லிம்களுக்கு அவரின் அரசியல் வித்தைகள் தொடர்ந்து புதிராகவே தோற்றம் தருகிறது.
எர்டோகனும், அவரது கட்சியும் அவரது ஆட்சியின் போது, ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு முரணான ஒரு அடியையும் இதுவரை எடுத்து வைத்ததில்லை. உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையின் அனைத்து நடவடிக்கைகளும் அதன் தொடக்கத்திலும் சரி ,முடிவிலும் சரி, ஜனநாயகத்தை முன்வைத்தே பேணப்பட்டு வந்தன.
அவரது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் பேருதவியுடனும், தியாகத்துடனும் பெறப்பட்ட அனைத்து சாதனைகளும், குறிப்பாக ஜூலை 15, இராணுவச் சதி முயற்சியை தக்பிராத்களையும், ஸலவாத்களையும் கொண்டு முறியடித்த முஸ்லிம்களின் அர்பணிப்புக்களையும், ஜனநாயகத்தின் பெறுபேறாகச் சொல்லப்பட்டன. மேலும் மக்கள் தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை மற்றும் சுதந்திரமாக வாழ்வு போன்ற இஸ்லாத்தின் சில அம்சங்ககளை சுட்டிக்காட்டி ஜனநாயகத்தின் அசிங்கமான முகம் அழகாகக் காட்டப்பட்டன.
இந்தப் பின்னணியில் இன்று, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள காஃபிர்கள் ஜனநாயகத்தை மோசமாக செயல்படுத்துகிறார்கள் என்று கூறி, உலகில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு, முஸ்லிம்களைக் கொண்டு புத்துயிர் அளிப்பதற்கு அழைப்பு விடுக்கிறார் எர்டோகன்.
ஏதோ இன்றுள்ள பிரச்சினைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் அடிப்படைச் சம்பந்தமே இல்லாதது போல, அவரது பரப்புரை இருக்கிறது. உண்மையில் அல்லாஹ்(சுபு)விடமிருந்து இறையாண்மையின் உரிமையை (Right of sovereignty) பறித்தெடுத்து, சுயசக்தி இல்லாத, பல நூறு குறைபாடுகளையும், வரையறைகளையும் உடைய குறைமதியுள்ள, மனிதனிடம் வழங்கும் ஜனநாயத்துக்காக, ஓர் முஸ்லிம் தலைவர் அழைப்பு விடுப்பதை என்னவென்று சொல்வது?!
எமது குடும்பங்களையும், ஒட்டுமொத்த தலைமுறையையும் அழித்த, “இஸ்தான்புல் மாநாடு – Istanbul Convention” போன்ற நச்சுச் சட்டங்களை உருவாக்கியது ஜனநாயகம் அல்ல என்பது போல,
வட்டி மற்றும் ஷரீஆவால் அறியப்படாத வருமானங்களின் அடிப்படையில் இயங்கும் பொருளாதாரக் கொள்கைகளுடன் மக்களை வறுமையிலும் மனச்சோர்விலும் தள்ளியது ஜனநாயகம் அல்ல என்பது போல,
இஸ்லாமிய நிலங்கள் ஜனநாயகத்தின் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு, சின்னாபின்னப்பட்டு, சுரண்டப்படாததுபோல,
ஜனநாயகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்திற்கு முரணான, பலப்பிரயோகம் மற்றும் வஞ்சகத்தால், எம்மீது திணிக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்ல என்பது போல,
13 நூற்றாண்டுகளாக நீடித்த இஸ்லாத்தின் புகழ்பெற்ற அரசை அழித்து, இஸ்லாமிய உம்மத்தை ஒரு தலைவரும், கிலாஃபாவும் இல்லாத நிலைக்குள் தள்ளி, காலனித்துவ காஃபிர்களின் கைகளுக்குள் காவுகொடுத்தது, ஜனநாயகத்தின் வேலை அல்ல என்பது போல.
லிபியா, துனிசியா, எகிப்து, யெமன் மற்றும் சிரியாவில், மேற்கு நாடுகளால் நியமிக்கப்பட்ட கொடுங்கோலர்களுக்கு எதிராக எழுந்து நின்ற இஸ்லாமிய உம்மாவின் புரட்சிகள், ஜனநாயக பொய்களால் திருடப்படவில்லை என்பது போல,
துருக்கியின் அதிபர், ஜனநாயகத்துக்கு உயிர் கொடுக்க முஸ்லிம்களை அழைக்கிறார்!!!
இந்த உண்மைகள் அனைத்தையும் மீறி, ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான விழுமியங்கள் என்ற வார்த்தையை அருகருகே கொண்டு வருவது, ஜனநாயகத்தின் அடிப்படையில் நீதி மற்றும் வளர்ச்சியைப் பற்றி பேசுவது, முஸ்லிம்களிடையே ஜனநாயகத்தை பிரபலப்படுத்த முயற்சிப்பது என்பது பகுத்தறிவற்ற செயலாகும்.
இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், அது ஒருவரின் லௌகீக வாழ்வுக்காக மறுமையை விரயமாக்குவதாகும். எனவே தற்போது ஒட்டுமொத்த உம்மாஹ்வின் மீதுள்ள முக்கிய கடமை இத்தகைய பகுத்தறிவற்ற கால விரயங்களின் பின்னால் அணி திரளாமல், குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் ஆட்சியாளர்களைக் கேள்விக்குட்படுத்த, கிலாஃபா ரஷிதாவை நோக்கி அழைக்கும் உண்மையான மீட்பாளர்களைப் பலப்படுத்த அது முன்வர வேண்டும்.