தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 2020 ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது விவாதம் பலத்த குறுக்கீடுகளும், தனிப்பட்ட தாக்குதல்களும் ஆதிக்கம் செலுத்திய ஒரு விவாதமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த விவாதத்தில் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயகச் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோ பைடனும் நேரடியாக மோதிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலின் முதல் ஜனாதிபதி விவாதத்தில் சூடான வாக்குவாதங்களும், இடைக்கிடையே அசிங்கமான வார்த்தைப் பறிமாற்றங்களும் இடம்பெற்றன.
பைடன் ஒரு “இடதுசாரி” என்றும் சோசலிசத்தை ஊக்குவிப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்ட, மறுபக்கத்தில் பைடனோ பகிரங்கமாக ட்ரம்பை ஒரு “இனவாதி” என்று அழைத்தார். டிரம்ப் பலமுறை பைடனை பேசவிடாது குறுக்கீடு செய்தபோது, அவரை “வாயை மூடு” என்று பைடன் கூறி தனது விசனத்தைத் தெரிவித்தார்.
இந்தத் விவாதம் தேர்தலில் அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் கொள்கைத் தேர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. இருவருக்கும் இடையில் நிலவும் போட்டி நிலையில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. ஏற்கனவே சில ஆய்வுகளின்படி பின்தங்கியிருக்கும் ட்ரம்ப் தேர்தல் போட்டியில் முன்னோக்கிச் செல்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இந்த விவாதம் வழங்கவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
“விவாதம் பரிதாபமாக இருந்தது. இது ஒரு விவாதம் அல்ல. நாங்கள் பார்த்தது டிரம்ப் பெரும்பாலான நேரங்களில் கட்டுப்பாட்டை மீறி தான் டிரம்ப் என்பதை காட்டியிருக்கிறார்.” என்று ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் பால் பெக் கூறினார்.
இந்த விவாதத்தின் போது முன்னாள் துணை ஜனாதிபதி பைடன், ட்ரம்பை அவமதிக்கும் பாங்கில் வெளிப்படையாக நடந்து கொண்டார். அவரை “ஒரு கோமாளி” என்று அழைத்ததுடன், ஜனாதிபதி ட்ரம்பிலிருந்து விலகி, பார்வையாளர்களை நேரடியாகப் பார்த்து பேசியதின் ஊடாக அவரை உதாசீனம் செய்வது போன்ற தோரணையில் நடந்து கொண்டார். மேலும் ட்ரம்பை ஒரு “பொய்யர்” என்றும் “இனவெறியர்” என்றும் அவர் சாடினார்.
பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருட்களை நோக்கி விவாதம் செல்வதற்கு பதிலாக, “இன்றிரவு என்ன நடந்தது என்றால் விவாதம் ட்ரம்ப் மீதான வாக்கெடுப்பாக மாறிவிட்டது, இது ஜனாதிபதி ட்ரம்பைப் பொருத்தமட்டில் ஒரு கைதவறிய சந்தர்பமாகும்.” என்று பேராசிரியர் பெக் மேலும் கூறினார்.
பைடன் தேசிய ரீதியிலான தேர்தல் களத்தில் ட்ரம்பை விட ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் முன்னணியில் நிற்கிறார். மேலும் அவர் அமெரிக்க தேர்தல் கல்லூரியை வெல்வதற்குத் தேவையான முக்கிய போட்டி நிலவும் மாநிலங்களில் டிரம்பைவிட அல்லது அவருக்கு சவால் விடுக்கும் வண்ணம் திகழ்கிறார் என பலர் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செப்டம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட ஏபிசி நியூஸ்/ வாஷிங்டன் போஸ்ட் கணக்கெடுப்பில் நாடு முழுவதும், பைடன் 10 சதவீத புள்ளிகளால் டிரம்பை விட முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட கின்னிபியாக் பல்கலைக்கழகத்தின் ஒரு கருத்துக் கணிப்பு, ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய வாக்கெடுப்புகளுக்கு இணங்க, டிரம்பை விட பைடன் 10 புள்ளிகள் முன்னிலை வகித்ததாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.