வத்திக்கானுக்கும், சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை விமர்சித்ததன் காரணமாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோவை சந்திக்க போப் பிரான்சிஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபைக்கும், சீனாவிற்கும் இடையிலான இரண்டு ஆண்டு பழமையான ஒப்பந்தம் உடனடியாக புதுப்பிக்கப்படுவது, தேவாலயத்தின் தார்மீக அதிகாரத்திற்கு ஆபத்தை ஏற்படும் என்று அதை எதிர்பதற்காக மைக் பாம்பியோ இந்த வாரம் வத்திக்கானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் வத்திக்கான் வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் மற்றும் வத்திக்கானின் வெளியுறவு மந்திரி பேராயர் பால் கல்லாகர் ஆகியோரை சந்திக்க உள்ளார். ஆனால் கடந்த அக்டோபரில் பாம்பியோ சந்தித்த போப் பிரான்சிஸ் இம்முறை அவரை சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு விவரங்கள் வெளியிடப்படாத இந்த ஒப்பந்தம், சீனாவில் நியமிக்கப்பட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீதான வத்திக்கானின் செல்வாக்குக்கு அனுமதித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்திலிருந்து , சீனா மேற்கொண்ட இரண்டு புதிய ஆயர்களின் நியமனம் வத்திக்கானுடன் கலந்தாலோசித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜீ ஜின்பிங்கின் நிர்வாகம் மத துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால் வத்திக்கான் சீனாவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கக்கூடாது என்று பாம்பியோ வாதிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் “சிஞ்சியாங்கில் முஸ்லிம்களை கட்டாய கருத்தடை, கருக்கலைப்பு செய்தல், மனித உரிமை மீறல்கள்“ மற்றும் “கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் சாதாரண மக்களை துஷ்பிரயோகம் செய்தல் பற்றிய நம்பகமான அறிக்கைகள்“ வந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து போப் பிரான்சிஸ் மெளனம் காத்து வருகிறார். இந்த மீறல்களில் குறைந்தது ஒரு மில்லியன் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம்கள் முகாம்களில் சிறை படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் இருக்கும்போது பட்டினி, சித்திரவதை, கொலை, பாலியல் வன்முறை மற்றும் வேறு பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.
“தற்போது அனைத்து மத சமூகங்களையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் விருப்பத்திற்கும், அதன் சர்வாதிகார வேலைத்திட்டத்திற்கும் வளைக்க மேற்கொள்ளும் அயராத முயற்சிகளை எதிர்த்து, மதச் சுதந்திரம் மற்றும் ஒற்றுமை பற்றி தேவாலயம் உலகுக்கு கற்பிக்கும் விஷயங்களை, வத்திக்கான் வலுக்கட்டாயமாகவும், விடாப்பிடியாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூற வேண்டும்“ என்று பம்பியோ கூறினார்.
ஒரு ட்வீட்டில் பாம்பியோ கத்தோலிக்க திருச்சபை “அதன் தார்மீக அதிகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
வத்திக்கானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் நீடிப்பு அடுத்த மாதம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் நரியிடம் ஊளை விட்டதாம்!