இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளும் இறங்கியுள்ளன. உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகளின் இணைந்த அபிவிருத்தி மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய துணை செயற்குழுவை உருவாக்கியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் (செப்டம்பர் 24) வியாழக்கிழமை நடைபெற்ற ஒர் இணைய சந்திப்பின் போது புதிய துணை செயற்குழு உருவாக்கம் குறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான துணைச் செயற்குழு, இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் மற்றும் அவரது இஸ்ரேலிய தரப்பு பிரதிநிதி தலைமையில் இயங்கும். இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு செயற்குழுவின் கீழ், தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில்நுட்ப பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் அடுத்த நாடுகளுக்கான கூட்டு ஏற்றுமதி போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும்.
துணை செயற்குழுவிற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சின் (பாதுகாப்பு தொழில்கள் உற்பத்தி) இணை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இஸ்ரேலிய நிறுவனத்தைச் சேர்ந்த ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் ஈயல் காலிஃப் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.
30,000 கோடி இந்திய ரூபாய்களுக்கு அதிகமான மதிப்புள்ள மூன்று கூட்டு DRDO (Defense Research and Development Organization) – IAI (Israeli Aerospace Industries) திட்டங்களின் கீழ் இந்தியா பராக்-8 என்கின்ற புவிப்பரப்பிலிருந்து வானை நோக்கிய அடுத்த சந்ததி ஏவுகணை ஸ்டத்தை – (Next Generation Barak-8 surface-to-air missile system) அறிமுகப்படுத்துகின்ற நேரத்தில் இந்த செயற்குழு இவ்விரு நாடுகளுக்கிடையில் உருவாக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் முதல் நான்கு நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் ஆண்டு விற்பனை ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.